Saturday, August 29, 2009

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !

Posted on 28/03/2009 by கலையரசன்


ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 6

ருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: “ஹூட்டு சகோதரர்களே! எம்மை இதுவரை காலமும் அடிமைகளாக அடக்கி ஆண்டு வந்த துட்சி கரப்பான் பூச்சிகளை அழிக்கும் காலம் வந்துவிட்டது.” இனவாத வெறுப்பை கக்கும் அந்த அறிவிப்பை செய்த “மில் கொலின்ஸ் சுதந்திர வானொலி” ஹூட்டு பாஸிச சக்திகளால் நடத்தப்பட்ட தனியார் வானொலி என நம்பப்படுகின்றது. ருவான்டாவில் நீண்ட காலமாகவே ஹூட்டு இனவெறி அரசியல் நடத்தி வந்த, பாஸிச “குடியரசு பாதுகாப்புக் கூட்டணி” (CDR) கட்சியுடன், ஆளும்கட்சி தலைமையிலான Interahamwe என்ற துணைப்படையும் சேர்ந்து கொண்டு சிறுபான்மை துட்சி இன மக்களை நரபலி வேட்டையாடிக் கொன்று குவித்தனர். ருவான்டாவின் தேசிய இராணுவம் பெரும்பான்மை ஹூட்டு இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்ததால், இனப்படுகொலையில் இராணுவத்தின் நேரடி பங்களிப்பை மறுக்கமுடியாது.

ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும் இடையிலான பகைமை, கசப்புணர்வு நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாக அடங்கிக் கிடந்தது. ருவான்டா பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, துட்சி சிறுபான்மையினருக்கு எதிரான இனக்கலவரங்களையும், துட்சி கிளர்ச்சியாளர்களின் அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டத்தையும் சந்தித்துள்ளது. 1994 ல் பதவியில் இருந்த ஜனாதிபதி “ஹபியாரிமனா” வெளிநாட்டு அழுத்தம் காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் சம்மதித்திருந்தார். இதனால் ஹபியாரிமனா ஒரு ஹூட்டு இன மிதவாதியாக, இன்னும் சொன்னால் “ஹூட்டு இனத் துரோகியாக”, பாஸிச சக்திகளால் கணிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் 1994 ம் ஆண்டு, ஏப்ரல் 6 ம் திகதி, தான்சானியாவில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணையை ஏவியது யார் என்ற மர்மம் இன்று வரை துலங்கவில்லை. ஹூட்டு பாசிஸ்டுகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டாலும், இன்றைய ருவான்டா அதிபர் “போல் ககாமே” யின் துட்சி கெரிலாக்களினது வேலை என்று பிரான்ஸ் குற்றஞ் சாட்டியது. (விமானி ஒரு பிரெஞ்சுக் காரர் என்பதால் பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.)

எது எப்படி இருந்த போதிலும், ஜனாதிபதி ஹபியாரிமனாவின் மரணத்திற்குப் பின்னர் நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. “துட்சி கிளர்ச்சியாளர்கள் எமது ஜனாதிபதியை படுகொலை செய்துவிட்டார்கள்.” என்ற செய்தி ஹூட்டு மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. விரைவில் அதுவே முழு துட்சி இனத்தவருக்கும் எதிரான துவேஷமாக உருவெடுத்தது. நாடு முழுவதும் வீதித்தடைகள் போடப்பட்டன. ஹூட்டு ஆயுததாரிகளின் வீதித்தடைச் சோதனையின் போது மறிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து துட்சி இனத்தை சேர்ந்தவர்களை தனியாக பிரித்தெடுத்தனர். அடையாள அட்டையில், “இனம்: துட்சி” என்று குறிப்பிட்டிருப்பதே அவர்களை காட்டிக் கொடுக்க போதுமானதாக இருந்தது. (அடையாள அட்டையில் இனத்தை குறிப்பிடும் வழக்கம் பெல்ஜிய காலனிய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.) பெண்கள், குழந்தைகள் என்று வேறுபடுத்தாது துட்சி என்ற காரணத்திற்காகவே கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சன்னங்களை வீணாக்குவது செலவு என்று, அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். குடியிருப்புகளுக்கு சென்று துட்சிகளை கொலை செய்த படையினர், சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்கான செலவை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று மரணத்திலும் கணக்குப் பார்த்தனர். சாதாரண மக்களும் கொலை வெறியாட்டத்தில் பங்குபற்றுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். ஒரு கொலையை செய்தவனுக்கு, இன்னும் இன்னும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏறியது. கொலை செய்யப்பட்டவர்கள் துட்சி இனத்தவர்கள் மட்டுமல்ல. இன நல்லிணக்கத்தை விரும்பிய, மிதவாத ஹூட்டுகளும் கொல்லப்பட்டனர். உலகம் மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில மாதங்களுக்குள் எட்டு லட்சம் முதல் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

“இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பிற்குப் பின்னர், இன்று உலகம் ஆப்பிரிக்காவின் மாபெரும் இனப்படுகொலையை பார்த்தக் கொண்டிருக்கிறது.” என்று நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளை விபரித்துக் கொண்டிருந்த சர்வதேச தொலைக்காட்சிகளால் உலகின் மனச்சாட்சியை உலுக்க முடியவில்லை. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர் உலகின் ஒரேயொரு வல்லரசாக திகழ்ந்த அமெரிக்கா, தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்தது. “குழந்தை வல்லரசான” ஐரோப்பிய ஒன்றியம் வாய்ச்சொல்லில் மட்டுமே தான் கெட்டிக்காரன் என்று காட்டிக் கொண்டிருந்தது. இவ்வாறு இனப்படுகொலையை தொடராது தடுக்க வழி இருந்த போதும், சந்தர்ப்பத்தை தவற விட்ட காரணம் என்ன? அரசியலில் நண்பர்கள் கிடையாது. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. பிரான்ஸ் அன்று ருவான்டாவை ஆட்சி செய்த ஹூட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து வந்தது. அதே போல துட்சி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அவரவருக்கு தமது ஆட்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்காவின் கவனம் ஐரோப்பிய வல்லரசுகளின் மீது திரும்பியது. ஆப்பிரிக்காவில் நவ-காலனிய அரசியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரான்ஸ் அதன் கண்ணில் துருத்திக் கொண்டிருந்தது. ருவான்டாவில் துட்சிகளின் கிளர்ச்சி, பிரான்சின் ஆதிக்கத்தை துடைத்தெறியும் பதிலிப் போராக அமெரிக்காவால் கருதப்பட்டது. துட்சிகளின் கெரில்லா இராணுவமான “ருவான்டா தேசாபிமான முன்னணி” (RPF) அயல் நாடான (ஆங்கிலம் பேசும்) உகண்டாவில் தளம் அமைத்திருந்ததும், RPF படைத் தளபதி (இன்றைய ஜனாதிபதி) போல் ககாமே உட்பட பல தலைவர்கள் உகண்டாவில் ஆங்கில மொழி வழிக் கல்வி கற்றிருந்தும், அமெரிக்கா இலகுவாக ஊடுருவ வாய்ப்பாக அமைந்தது. உகண்டாவின் இன்றைய ஜனாதிபதி முசவேனி, ஆட்சியைக் கைப்பற்ற நடத்திய ஆயுதப் போராட்டத்தில், RPF போராளிகள் பங்குபற்றி இருந்தனர். முசவேனி, ககாமே ஆகியோரை “ஆப்பிரிக்காவின் நம்பிக்கை தரும் இளம் தலைமுறையை சேர்ந்த தலைவர்கள், மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள்” என்று அமெரிக்க ஊடகங்கள் புகழ் பாடிக் கொண்டிருந்தன. ஒருவேளை ருவாண்டாவில் ககாமே ஆட்சிக்கு வந்த பின்னர், அரச கரும மொழியாகவும், கல்வியிலும் பிரெஞ்சை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததை சாதனையாக கூறலாம்.

ருவாண்டாவில் இருப்பது இனப்பிரச்சினையா? ருவாண்டா மக்கள், காலங்காலமாக ஹூட்டு, துட்சி என்ற இன அடிப்படையில் பிரிந்து வாழ்ந்து வந்தனரா? இது ஆயிரம் வருடக்கால இனப்பகையா? நாம் முதலாளிய ஊடகங்கள் சொல்வதை நம்பினால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் வரும். ஆனால் இந்தக் கருத்தியல் எவ்வளவு தூரம் சரி என்று, எந்த சமூக விஞ்ஞானியும் ஆராயவில்லை, அல்லது அவர்களது முடிவுகள் பாரபட்சமின்றி இருப்பின் பிரசுரிக்கப்படுவதில்லை. முதலில் “இனம்” (Ethnicity, Race எதுவாக இருந்தாலும்) என்ற சொல்லே ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்பாகும். ருவான்டாவின் இனப்பிரச்சினை, ஆச்சரியப்படத்தக்க வகையில் இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். இது ஒன்றும் தற்செயல் அல்ல. காலனிய எஜமானர்களின் பிரித்தாளும் கொள்கை, எங்கேயும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இலங்கையில் வாழ்ந்த சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களுக்கிடையில் இனப் பகையை தோற்றுவித்து, இனவாதப் படுகொலைகளுக்கு வழிவகுத்தார்களோ, அதே வேலையை பெல்ஜியர்கள் ருவான்டாவில் செய்தனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் மிக நீண்ட நதியான நைலின் நதிமூலத்தை தேடிச் சென்ற ஐரோப்பியர் சிலர் ருவான்டாவை “கண்டுபிடித்தனர்”. அவர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதம் பரப்புவோரும் அந்தப் பிரதேச மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் எல்லோருக்கும் ருவான்டாவில் எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருந்தன. இன்றைய ருவான்டா, புரூண்டி, மற்றும் உகண்டாவின் தென் பகுதி, கொங்கோவின் கிழக்குப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கிய, ஒரே அதிகார மையத்தைக் கொண்ட மன்னரின் ஆட்சிப்பிரதேசமாக இருந்தது. மன்னரின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் மாகாணங்களை நிர்வகித்து வந்தனர். சுருக்கமாக சொன்னால், ஐரோப்பாவில் இருந்த அதே நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறை ருவான்டாவிலும் காணப்பட்டது. ஆயிரம் வருடங்களாக மக்கள் விவசாயம் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். அழகிய மலைநாடான ருவான்டாவில், ஒவ்வொரு குன்றும் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலமாக இருந்தது.

ருவான்டாவில் துவா (அல்லது பிக்மீ) என்றழைக்கப்படும் பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர். பிற ஆப்பிரிக்க மக்களிடமிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய தோற்ற அமைப்பைக் கொண்ட (குள்ளமானவர்கள், பழுப்பு நிறத்தவர்கள்) துவா மக்கள் இன்றும் கூட புராதன வேடுவர் சமூகமாகத் தான் வாழ்கின்றனர். யாருக்கும் தீங்கு செய்யாத, தானுண்டு, தனது வேலையுண்டு என வாழ்ந்து வரும் துவா மக்களை, ருவான்டா அரசர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். அரசன் மட்டுமல்ல, நிலப்பிரபுக்களும் துட்சி இனத்தை சேர்ந்தவர்களாக அதிகாரம் செலுத்தினர். அதற்கு மாறாக பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் நாட்டுப்புறங்களில் பண்ணையடிமைகளாக, குத்தகை விவசாயிகளாக இருந்தனர். இந்த உண்மையே ஹூட்டு-துட்சி இனப் பிரிவினையை நிரூபிக்க போதுமானதல்ல. ஏனெனில் “நாகரிக காலத்தை” சேர்ந்த நாம் இனம் பற்றி புரிந்து வைத்திருப்பதற்கும், அன்றைய மக்களின் சிந்தனைக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது. தனது சொந்த விவசாய நிலங்களில் அதிக விளைச்சலைப் பெறக்கூடியதாக பயிரிட்டு, தனது செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் ஹூட்டு ஒருவர் நிலப்பிரபுவாக வர முடிந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதிகாரத்தில் இருப்பது யாராக இருந்தாலும் துட்சி என அழைக்கப்படலாயினர்.

துட்சிகளின் மூதாதையர் எத்தியோப்பியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இரு பக்க இனவாதிகள் மத்தியிலும், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மத்தியிலும் இது போன்ற கருத்துகள் பிரபலமானவை. (”துட்சிகளை எத்தியோப்பியாவிற்கு திருப்பி அனுப்புவோம்.” என்பது ஹூட்டு இனவாதிகளின் முழக்கங்களில் ஒன்று.) எத்தியோப்பியர், அல்லது சோமாலியர்கள் போல (இவர்களை பிற ஆப்பிரிக்கர்களிடம் இருந்து இலகுவில் பிரித்தறிய முடியும்) பெரும்பாலான துட்சிகள் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. துட்சிகள் என்றால் உயரமானவர்கள், ஒடுங்கிய முகம், மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள்; ஹூட்டுகள் பருமனானவர்கள், வட்டமான முகம் கொண்டவர்கள், என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இனப்படுகொலை செய்யும் இனவாதிகளுக்கு அந்த வெளித் தோற்றமே போதுமானதாக இருந்தது.

ருவான்டாவின் எழுதப்படாத செவிவழி வரலாற்றின் படி, கி.பி. 700 ம் ஆண்டளவில் வருகை தந்த ஹூட்டுகள், மரங்களை வெட்டி, நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளனர். பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு, உணவுப்பயிர்களை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்து வந்தனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த துவா வேடர்களைப் போலன்றி, குடிசைகளை கட்டி, கிராமங்களில் வாழ்ந்தனர். சமுதாயம் வளர்ச்சி அடைந்த போது “முவாமி” என அழைக்கப்படும் மன்னனின் அதிகார மையமாக பரிணமித்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மத்திய ஆப்பிரிக்க இராச்சியமான, ருவான்டா முழுவதும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் நிலவியது.

ஹூட்டு நாகரீகம் தொடங்கி முன்னூறு வருடங்களுக்குப் பின்னர், வடக்கே இருந்து மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தனர், துட்சிகள் என்ற வந்தேறுகுடிகள். இது இந்தியாவில் ஆரியரின் வருகையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. துட்சிகள் சமுதாயத்தில் மாடுகள் வைத்திருப்பது செல்வச் செழிப்பின் அடையாளம். ஒருவர் எத்தனைமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை வைத்துதான், அவர் பணக்காரரா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டது. இந்த கலாச்சாரம் இன்றும் கூட (துட்சி இனக்குடும்பத்தை சேர்ந்த) கென்யாவின் மாசாய் இன மக்கள் மத்தியில் நிலவுகின்றது. தமது மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடியே துட்சிகள், ருவான்டாவிற்கு வந்தனர். அதனால் அங்கே விவசாயம் செய்து வந்த ஹூட்டுகளுடன் நிலத்திற்கான போட்டி, பொருளாதார முரண்பாடுகளை (கவனிக்கவும்: இன முரண்பாடுகள் அல்ல) தோற்றுவித்தது. வேறுபாடான பொருளாதார நலன்கள் இருந்த போதிலும், காலப்போக்கில் துட்சிகள், தம்மை விட நாகரீகத்தில் மேலோங்கியிருந்த ஹூட்டுகளின் மொழியையும், மதத்தையும் மட்டுமல்ல கலாச்சாரத்தையும் தமதாக்கிக் கொண்டனர். முரண்நகையாக அதுவே துட்சி இன மேலாதிக்கத்திற்கு ஆதாரமாக அமைந்தது.

அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். ஹூட்டுகள் விவசாயத்தையே பெரிதாக மதித்ததால், அவர்களை தமது ஆட்சிக்கு கீழ்ப்படிய வைப்பது, புதிய ஆட்சியாளருக்கு இலகுவாக அமைந்தது. ஹூட்டுகள் உழைக்கும் வர்க்கமாகவும், துட்சிகள் ஆளும் வர்க்கமாகவும் மாறியது அப்போது தான். தேச நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. துட்சிகள் ஆரம்பத்திலேயே மேலிருந்து கீழே வரும் அதிகாரப் படிநிலைச் சமூகமாக வாழ்ந்தவர்கள். அதனால் தான் 20 ம் நூற்றாண்டிலும், அதிகார வர்க்கம் முழுவதும் துட்சிகளை கொண்டிருந்தது. தேசப் பாதுகாப்பும் அவர்கள் வசமே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி உறவுகளில் பண்ணையடிமை முறையை புகுத்தினர். துட்சி பண்ணையார்களின் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்பட்ட போது, ஹூட்டு விவசாயிகளிடம் நிலங்களை பெற்றுக் கொண்டு, பண்டமாற்றாக சில மாடுகளைக் கொடுத்தனர். ஹூட்டு விவசாயிகள் மாடுகளை பராமரித்தாலும், பிறக்கும் கன்றுக்குட்டிகளை மட்டும் துட்சி உரிமையாளருக்கு கொடுத்து விட வேண்டும். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பது நிலப்பிரபுவாகத் தானே இருக்க முடியும்?

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை பங்கு போட்ட போது, ஜெர்மனிக்கு கிடைத்த துண்டுகளில் ருவான்டாவும் ஒன்று. ஏற்கனவே இராச்சியத்தின் பகுதிகள் பிரிட்டனுக்கும் (உகண்டா), பெல்ஜியத்திற்கும் (கொங்கோ) தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, தன் நாடு தற்போது ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்குள் அடங்குகின்றது என்பதையோ ருவான்டா மன்னன் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் தான்சானியாவில் இருந்து ருவான்டா விவகாரங்களை கவனித்துக் கொண்ட ஜெர்மன் ஆளுநர், அரசாட்சியில் தலையிடவில்லை. முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியை தோற்கடித்த பெல்ஜியம், ருவான்டாவை தனது காலனியாக்கியது. “பெல்ஜியத்தால் பாதுகாக்கப்படும் பிரதேசம்” என்று ஐ.நா. மன்றத்தின் முன்னோடியான உலக மக்கள் பேரவை தீர்மானித்தது. காலனிக்கும், பாதுகாப்புப் பிரதேசத்திற்கும் இடையில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை. பெல்ஜியம் தனது முப்பது வருட காலனிய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பியமயப்பட்ட கல்வியையும், நிர்வாகத்தையும் அறிமுகப்படுத்தியது. அப்போது தான் இனவாதக் கருத்துகள் துட்சி, ஹூட்டு இன மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன.

துட்சி நிலப்பிரபுக்களின் அதிகாரம் செலுத்தும் திறமையை கண்டு வியந்த ஐரோப்பியர்கள், துட்சிகள் “சாதாரண ஆப்பிரிக்கர்களாக” இருக்க முடியாது என முடிவுசெய்தனர். அந்த எண்ணத்தில் உதித்தது தான் இன்றைய இனவாத கோட்பாடுகள். பாப்பரசரின் பிரதிநிதியான வணக்கத்திற்குரிய “லெயோன் கிளாஸ்”, மிஷனரி பாடசாலைகள் மூலம் இனவாதக் கருத்துகளையும் போதித்து வந்தார். ஆரம்ப காலங்களில் துட்சி இனப் பிள்ளைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய பாணி கல்வி போதிக்கப்பட்டது. “துட்சிகள் ஆளப்பிறந்தவர்கள்”, “இனரீதியாக ஹூட்டுக்களை விட சிறந்தவர்கள்”, போன்ற இனவாதக் கருத்துகள், பாடசாலை சென்ற பிஞ்சுமனங்களில் விதைக்கப்பட்டன. புதிய மத்தியதர வர்க்கமாக உருவாகிய, கல்வி கற்ற துட்சிகளை அரச கருமங்களை முன்னெடுக்கவும், மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட புதிய நிர்வாக அலகுகளில் அதிகாரிகளாகவும் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். அதே நேரம், இன்னொரு பக்கத்தில் பெல்ஜியர்கள் சிறிய அளவு ஹூட்டு நடுத்தர வர்க்கத்தையும் உருவாக்கத்தவறவில்லை. இருப்பினும் ருவான்டா சுதந்திரம் பெற்ற நேரம், பெரும்பாலான அரச பதவிகளில் துட்சிகளே வீற்றிருந்தனர்.

1958 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, மொத்த சனத்தொகையில் 14 வீதமான துட்சிகள், பல்கலைக்கழகங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மை ஹூட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அரசாங்கம் தரப்படுத்தலை கொண்டு வந்து, இனப்பிரச்சினைக்கு வழி சமைத்தது. மெல்ல மெல்ல அதிகாரம் துட்சிகளின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டது. பேரினவாத அரசாங்கம், ஹூட்டுகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி, பெரும்பான்மை வாக்குவங்கியை தக்க வைத்துக் கொண்டது. துட்சியினத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள், இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஹூட்டு இனவாத சக்திகளின் எதிர்ப்புக் காரணமாக ஒப்பந்தங்களை முறிப்பதும் நடந்தேறின. ஒவ்வொரு தடவையும் துட்சிகள் அஹிம்சா வழியில் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம், இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டன. இதனால் பெருமளவு துட்சி மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் புகலிடம் கோரினர். துட்சிகள் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமே தமது உரிமைகளைப் பெற முடியும் என இளைஞர்கள் நம்பினார். ஹூட்டு பேரினவாத அரசிற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட துட்சி விடுதலை இயக்கம் (RPF) கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது. இதையெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லையா? ஆமாம், ருவான்டா-இலங்கை, துட்சிகள்-தமிழர்கள், ஹூட்டுகள்-சிங்களவர்கள், பெல்ஜியம்-பிரிட்டன், இந்தச் சொற்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். வரலாறு ஒரே மாதிரித் தோன்றும்.

1994 ம் ஆண்டு, துட்சியின மக்கள் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டாலும், துட்சிகளின் விடுதலைப்படையான RPF கெரில்லாக்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. தலைநகர் கிகாலியை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதும், ஹூட்டு மக்களும் அரச படையினரும் கொங்கோவிற்குள் புகலிடம் கோரினர். இதனால் யுத்தம் அயல்நாடான கொங்கோவிற்கும் பரவியது. RPF இயக்கத்தில் துட்சி இன மேலாண்மைக் கருத்துகளை கொண்ட போல் ககாமே போன்ற தலைவர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. அதுவே புதிய அரசின் கொள்கையை தீர்மானிக்கின்றது. இன அழிப்புக் குற்றத்தில் ஈடுபட்ட மாஜி இராணுவ வீரர்களை தேடுவதாக காரணம் காட்டி, இரண்டு தடவை ருவான்டாவின் புதிய (துட்சி) இராணுவம் கொங்கோவிற்குள் படையெடுத்தது. அது சர்வதேச கண்டனங்களையும் தோற்றுவித்தது. இருப்பினும் பலமான அமெரிக்க வல்லரசின் ஆதரவு காரணமாக, கொங்கோவில் நிலை கொண்டிருந்த ஐ.நா.சமாதானப் படை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. (ஐ.நா. படை அதிகாரிகள் துட்சி இராணுவத்துடன் ஒத்துழைத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.)

“பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் கொங்கோ அகதி முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கையில், ருவான்டாவில் தங்கி விட்ட சிறுபான்மை துட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் RPF அரசாங்கம் நீதி நெறிமுறைக்கு உட்பட்டதா?” என்ற கேள்வி சர்வதேச அரங்கில் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினரின் அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளாக நிலைத்து நிற்பதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சில வருடங்களுக்குப் பின்னர், கணிசமான அளவு ஹூட்டுகள் தயக்கத்துடன் தாயகம் திரும்பினர். RPF ம் இன அழிப்பில் ஈடுபட்டது என்பதும், துட்சி ஆயுததாரிகள் ஹூட்டு மக்களை கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும், மறுக்க முடியாத உண்மைகள். ருவான்டாவில் துட்சியின ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட பின்னர், RPF அரசிற்கு ஹூட்டுகளை வேட்டையாட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஜனாதிபதி போல் ககாமேயின் கவனம் பின்னர் தனது இனத்திற்குள் இருக்கும் எதிரிகளை நோக்கி திரும்பியது. “இன அழிப்பில் ஈடுபட்ட கொலைகாரர்கள்” என்பது தான் தீர்த்துக் கட்டப்படும் அனைத்து எதிரிகள் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு. கொங்கோவை தளமாகக் கொண்ட, ஹூட்டுகளின் புதிய கெரில்லா இயக்கம் ஒன்று அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக அண்மைக்காலமாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நவீன ருவான்டாவின் வரலாற்றில் ஏகாதிபத்திய தலையீடு பல்வேறு நோக்கங்களுக்காக வெளிப்பட்டுள்ளது. இதற்காக ஏகாதிபத்தியம் தனது பிரசைகளின் உயிரையும், தேசத்தின் நன்மதிப்பையும் கூட விலையாக கொடுத்துள்ளது. காலனிய ஆதிக்கம் காலாவதியாகி, நவ-காலனிய காலகட்டம் ஆரம்பித்த நேரம், பெல்ஜியம் ருவான்டாவை பிரான்சிற்கு தத்துக் கொடுத்து விட்டிருந்தது. அந்நியக் கடன் வழங்குவதில் முதன்மையான நாடான பிரான்சின் வற்புறுத்தலுக்கு இணங்கித் தான், ருவாண்டாவின் ஹூட்டு அரசும், RPF இயக்கமும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன. சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா.சமாதானப்படை (MINUAR) வந்தது. ஒப்பந்தம் மீறப்பட்டு, மீண்டும் யுத்தம் மூண்ட பின்னர், ஜனாதிபதி ஹபியாரிமனா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாக, ஐ.நா.சமாதானப்படையில் பணியாற்றிய பத்து பெல்ஜிய வீரர்கள் ஹூட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய, ஹூட்டு துணைப்படையான Interahamwe க்கு பிரான்ஸ் இராணுவப் பயிற்சி வழங்கி வந்தது. இதனால் “பிரான்சிற்கும் இன அழிப்பில் பங்குண்டு” என்ற குற்றச்சாட்டை இன்றைய ருவான்டா (துட்சி) அரசு பன்னாட்டு ஊடகவியலாளரின் முன்னால் (டிசம்பர் 2008) சமர்ப்பித்தது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, காலஞ்சென்ற பிரெஞ்சு ஜனாதிபதி மித்தரோன் உட்பட பல பெரிய தலைகள் இன அழிப்பு குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவது சாத்தியமானதல்ல. இருப்பினும் இஸ்ரேலைப் போல, ருவான்டாவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகி வருவதை இது எடுத்துக் காட்டுகின்றது. மத்திய ஆப்பிரிக்காவில் இன்னொரு இஸ்ரேலை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமும். இஸ்ரேல் “யூத இனப்படுகொலையை தேசிய அரசியல் சித்தாந்தமாக” கடைப்பிடிப்பதைப் போல, இன்றைய ருவான்டாவில் துட்சி இனப்படுகொலை பற்றிய நினைவுகூரல் தவிர்க்கவியலாத அம்சமாகி விட்டது. இனப்படுகொலைக்கு பலியானவர்களின் ஞாபகச் சின்னங்கள் பற்றி ஒவ்வொரு பிரசையும் அறிந்திருக்க வேண்டும். ருவான்டாவும் இஸ்ரேலைப் போலவே சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாது அயல்நாடுகள் மீது படையெடுக்க முடிகிறது. கொங்கோவில் கபிலாவின் தேசியவாத அரசு, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை போட்ட கையோடு, கிழக்கெல்லையில் படையெடுத்த ருவான்டா இராணுவத்துடன் நீண்ட போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் கொங்கோவை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வைத்தது. அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ருவான்டா இராணுவத்தை, ஆப்பிரிக்காவின் தலைசிறந்த நவீன இராணுவமாக்க பாடுபடுகின்றனர். வருங்காலத்தில் ஒரு குட்டி நாடான ருவான்டா, தன்னை சுற்றியிருக்கும் பலவீனமான பெரிய நாடுகளை பயமுறுத்தப் போகின்றது

Friday, August 21, 2009

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

ரோவா. எகிப்திய மன்னன்.
தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,
தனது ஆடை ஆபரணங்களையும்,
பொக்கிஷங்களையும், அடிமைகளையும்
தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.
பூவுலக வாழ்வைச்
சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.
ஆசை நிறைவேற்றப்பட்டது.
பிறகு அவனுடைய வாரிசுகளும்
அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;
சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஒருவேளை
பரோவாவைப் போல ராஜீவும் ஆசைப்பட்டிருந்தால்,
நாமே அதை முன்னின்று நிறைவேற்றியிருக்கலாம்.
சிதைந்து, அழுகி நாட்டின் அரசியல் பண்பாட்டு அரங்கில்
நாற்றத்தையும், நோயையும் பரப்பியபடி
இறக்கவிருக்கும் காங்கிரசு என்னும்
அருவெறுக்கத்தக்க மிருகத்தை
அவ்வாறு அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வகையில் பரோவா நல்லவன்.
தனது அதிகாரக் குடையின் நிழலில் ஆட்டம் போட்டவர்கள்
தன்னுடன் சேர்ந்து அடங்குவதே நியாயம்
என்று கருதியிருக்கிறான் போலும்!
தன்னுடன் குடிமக்களையும் சேர்த்துப் புதைக்குமாறு
அவன் உயில் எழுதவில்லை;
ஊரைக் கொளுத்திவிடுமாறு
உத்தரவிட்டதாகத் தகவல் இல்லை.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஆனால், பீரங்கி வண்டியில் ராஜீவின் உடல் ஏறுமுன்னே
நாடெங்கும் பல அப்பாவிகளின் பிணங்கள்
பச்சை மட்டையில் ஏறியது தெரியும்.
ராஜீவின் சிதைக்கு ராகுல் தீ மூட்டும் முன்னே
‘தொண்டர்கள்’ ஊருக்குத் தீ மூட்டியது தெரியும்.
மறைந்த தலைவனுக்கு மரியாதை செய்யுமுகந்தான்
ஊரைச் சூறையாடியது தெரியும்.

இருப்பினும் பேசக்கூடாது.

மரித்தவர்களைக் குறை கூறுதல் மனிதப் பண்பல்ல;
கருணாநிதியைக் கேளுங்கள் விளக்கம் சொல்வார்.
இருபத்தொன்றாம் தேதி இரவு 10.19 வரை
“ஆட்சியைக் கவிழ்த்த சூழ்ச்சிக்காரன்,
கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கொள்ளைக்காரன்,
அக்கிரகாரத்தின் ஆட்சிக்கு அடிகோலும்
அவாளின் ஆள்”
ஆனால் 10.20-க்குப் பின் அமரர்,
அமரரைப் பழித்தல் தமிழ்ப் பண்பல்ல.
பாவத்தின் சம்பளம் மரணம்.
பாவமேதும் செய்யாதிருந்தும்
‘சம்பளம்’ பெற்றவர்கள் பற்றி….?

பேசக்கூடாது. இது கண்ணீர் சிந்தும் நேரம்.
உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், கண்ணீர் சிந்தும் விஷயத்தில்
கருத்து வேறுபாடுகளை அனுமதிக்க இயலாது.
கண்ணீர் சிந்துங்கள். இல்லையேல்
கண்ணீர் சிந்த நேரிடும்.

சிரிக்காவிட்டால், சிறைச்சாலை;
கைதட்டாவிட்டால் கசையடி – இட்லரின்
ஆட்சியில் இப்படி நடந்ததாகக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது பாசிசம்.

பேசாதே என்றால் பொறுத்துக் கொள்ளலாம்!
சிரிக்காதே என்றால் சகித்துக் கொள்ளலாம்,
அழாதே என்றால் அடக்கிக் கொள்ளலாம்.
ஆனால்
அழு‘ என்று ஆணை பிறப்பித்தால் அழ முடியுமா?
அச்சத்தில் பிரிவது சிறுநீர். கண்ணீரல்ல.
அடிமைச் சாம்ராச்சியத்தின் அதிபதி
பரோவா கூடத் தன் அடிமைகளுக்கு
இப்படியொரு ஆணை பிறப்பித்ததில்லையே!

ஆத்திரத்தையும் அழுகையையும் மட்டுமே
தன் மக்களுக்குப் பரிசாகத் தந்த
ஆட்சியாளனின் மறைவுக்கு
ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?
அரசியல் சட்டக் காகிதங்களில் மட்டுமே இருந்த
உயிர் வாழும் உரிமையும்
தன் குடிகளுக்குத் தேவையில்லை என்று
கிழித்தெறிந்த கொடுங்கோலனின்
உயிர் பிரிந்ததற்காக
எதற்குக் கண்ணீர் சிந்த வேண்டும்?
இப்படியெல்லாம் கேட்கத்
தெரியாமலிருக்கலாம் மக்களுக்கு.
இருப்பினும் அவர்கள் கண்ணீர் சிந்தவில்லை.

புகழ் பெற்ற நான்கு உபாயங்களைத்
தலைகீழாகவே பயன்படுத்திப் பழகிய
எதிரிகள் – காங்கிரசுக்காரர்கள்
நான்காவது ஆயுதம் – தண்டம் -
தோற்றவுடனே மூன்றாவது ஆயுதத்தை
பேதம் – ஏவினார்கள். வீதிகள் தோறும்
சுடுகாடுகள். பயனில்லை. இரண்டாவது
ஆயுதம் – தானம் – பிரயோகிக்கப்பட்டது.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
ஒலிபெருக்கிகளில் ஒப்பாரி வைத்தது.
மக்கள் கண்ணீர் சிந்தக் காணோம்.
முதல் ஆயுதம்
வன்மத்துடன் களத்தில் இறங்கியது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
வண்ணச் சுடுகாடு,
கறுப்பு வெள்ளைச் சுடுகாடு;
வானொலியில் முகாரி;
பத்திரிக்கைகளில் இரங்கற்பா…
“பார்… பார்… சிரித்த முகத்துடன்
எங்கள் தலைவனைப் பார்!
சூது வாது தெரியாமல்
மாலைக்குத் தலை நீட்டிய மன்னவனைப் பார்!
மக்களைத் தழுவ விரும்பியவன்
மரணத்தைத் தழுவிய கொடுமையைப் பார்!
அன்பு மனைவியும் அருமைச் செல்வங்களும்
அநாதையாக நிற்பதைப் பார்!
அமெரிக்க அதிபர் அழுகிறார்; ரசிய அதிபர் அழுகிறார்;
உலகமே அழுகிறது.
நீ மட்டும் ஏன் அழ மறுக்கிறாய்?
அழு… அழு…!”

ழுதார்கள்; அழுதீர்கள். அழுது
முடித்துவிட்டு அடுத்த வேலையைப்
பார்க்கலாம் என்று நகர்வதற்கு
இது ‘பாசமலர்’ அல்ல;
நீங்கள் அழுத பின்னால் அடுத்த வேலையை
அவர்கள் தொடங்குவார்கள்.
அவர்கள் கண்ணீரைக் கனியவைத்து
வாக்குகளாக்கும் ரசவாதிகள்.
உங்கள் கண்ணீர்த் துளிகளை மூட்டம்
போட்டிருக்கிறார்கள்.
காலம் கடந்துவிடவில்லை. கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள்.
இறந்தவரெல்லாம் நல்லவரென்றால்
இட்லரும் நல்லவனே.
கொலையுண்டவர்கள் எல்லாம் கோமான்களென்றால்
கொடுங்கோலன் என்ற சொல்லுக்கு
அகராதியில் இடமில்லை.

நினைவிருக்கிறதா? இப்படித்தான்,
இப்படியேதான் நடந்தது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பும்.
கையில் கொள்ளியுடன்
தாயின் பிணத்தருகே தலைமகன்
உங்கள் வாக்குகளைக் கொள்ளையிட்டான்.
அந்த ஐந்தாண்டு அரசாட்சியைக் கொஞ்சம்
அசை போட்டுப் பாருங்கள்!

இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி
அரியணை ஏறும்போதே
ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே
மறந்து விட்டீர்களா?
குப்பை கூளங்களைப் போல
அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்
குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!
அவர்களது சாம்பலுக்கு
அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;
ஆறுதலாக ஒரு வார்த்தை…
சொன்னதா அந்த அரசு?

ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.
அகதிகள் பெரும்பான்மையோர்
கைம்பெண்கள், குழந்தைகள்.
பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து
வியர்வையும், ரத்தமும் சிந்தி
ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை
ஒரே நாளில்
குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.
நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என
ஏழு ஆண்டுகள் காத்திருந்து
குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து
சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்
அந்த இளம் விதவைகள்.
இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
கேளுங்கள்.

இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்
தூக்கிலேற்றியாகி விட்டது.
ஐயாயிரம் கொலைகளுக்கு
எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?
தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க கூட முடியாது என்று
கைவிரித்தார் ராஜீவ்.
நாடே காறி உமிழ்ந்த பின்
ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
“கண்டு பிடிக்க முடியவில்லை” –
கமிஷனும் அதையே சொல்லியது.

தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்
ராஜீவின் தளகர்த்தர்கள் –
எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.
இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்
ராஜீவின் நண்பர்கள்.
அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;
விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்
கொலை மிரட்டல் வந்தது.
கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு
கொலைகாரர்களின் பெயர்களையும்
அரசாங்க ரகசியமாக்கி
ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

“இந்திரா நினைவு நாளோ,
குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்
எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.
மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.
அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;
“வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட
இன்று வரை அவர்கள்
வாயிலிருந்து வரவில்லையே”
அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –
ராஜீவ் சொன்னார்.
“மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.
சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.
டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்
கதறியது என்கிறார்களே,
அந்தச் சீக்கியப் பெண்களின்
கண்கள் கலங்கினவா என்று
விசாரித்துப் பாருங்களேன்.

போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத
தேசிய அவமானம்.
ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே
நடைபெற்ற பயங்கரப் படுகொலை.
ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை
நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;
அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு
இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

இல்லை. உங்கள் நாட்டுத்
தொழிலாளிகளின் அலட்சியத்தால்
நேர்ந்த விபத்து இது என்றது
யூனியன் கார்பைடு.

ஆமோதித்தது ராஜீவ் அரசு.
“விஷ வாயுவைத் தயாரிக்க
உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று
சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.
காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்
சிரித்தது கார்பைடு.
ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்
தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.
முதலாளிகளுக்கு அரணாய் நின்றது
ராஜீவ் அரசு.

நீதி எங்கே, நிவாரணம் எங்கே என
அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு
தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,
நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”
எங்கள் அரசின் உரிமை என்று
அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.
அந்தச் சுடுகாட்டின் நடுவில்
ஒரு சொர்க்கபுரியை நிறுவி
அதில் கவியரங்கம் நடத்தியது;
களியாட்டம் போட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.
இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.
இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.
பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.
போபால் அழுது கொண்டிருக்கிறது.
அதன் கண்ணீருக்கு ராஜீவின்
மரணம்தான் காரணமோ?
கேட்டுத்தான் பாருங்கள்.

பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்
மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,
துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

னால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
“நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
முதுகில் குத்திவிட்டார்கள்!
ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
எல்லோரையும் விரட்டுங்கள்!
ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
விடுதலைப் போராளிகளைக்
கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
மத்தியிலே ஐந்தாம் படையை
உருவாக்கியது எந்தக் கை?
முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
யாருடைய ஆட்சி?
புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
நிலைநாட்டியது யாருடைய படை?
“ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
ஈழம் கொண்டான்” என்று
கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
அடித்து விளையாட
ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
பொருள் கேட்காதீர்கள்.
யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –
ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை -
துரோகம் என்றால் காந்தி!
சோரத்தில் பிறந்து
துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்
தலைவனுக்காக உங்களைக்
கண்ணீர் சிந்தக் கோருகிறது.
சிந்தியுங்கள்!

தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று
கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு
என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.
தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்
ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.
திமிர் பிடித்த கணவனுடனும்,
வெறி பிடித்த முல்லாக்களுடனும்
சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த
கொடுமையைச் சொல்லி அழுவாள்.
ஊன்றிக் கவனியுங்கள்.
அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே
முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்
கேட்கும்.

அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.
அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த
பாபர் மசூதிப் பிரச்சினையை
ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்
சொல்லி அழுவார்கள்.
அருண் நேருவிடம் தனியே
விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்
உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து
மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு
‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்
தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்
குதூகலமாய் வர்ணிப்பார்.

ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த
அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்
கேட்டுப் பாருங்கள்.
பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க
‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய
திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

வச குண்டலம் போல ராஜீவை
விட்டுப் பிரியாதிருந்த அவரது
மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;
தண்டி யாத்திரை என்ற பெயரில்
ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்
சொல்லிச் சிரிப்பார்கள்;
துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து
கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு
காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்
எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்
தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி
ஓடிய கதையைச் சொல்வார்கள்.

ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்
மக்களைக் கேளுங்கள்.
அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்
சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,
நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை
ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்
எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்
கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்
தெரிந்து கொள்ளுங்கள்.

மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,
சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்
நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்
இருந்த இந்த மேட்டுக்குடிக்
குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.
கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் -
எத்தனை கனவுகள்!
இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்
பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து
இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை
அவர்கள் நினைவு கூறுவார்கள்.
அவர்களது கண்கள் பனித்திருக்கும் –
பிரிவாற்றாமையினால் அல்ல;
தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ
என்ற அச்சத்தினால்.

எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?
ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
இத்தனை அநீதிகளை
இழைக்க முடியுமா?
அதிர்ச்சியாயிருக்கிறது.
கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்
கோடிக்கணக்கானோர்,
வகைக்கு ரெண்டு எழுதினால் கூட
வளர்ந்து கொண்டே போகிறது.

இன்னும் சொற்களில் அடக்க முடியாத
சோகங்களைக் காண வேண்டுமெனில்
காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்
அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.
இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –
இன்னும் உயிரோடிருப்பவர்களை
நீங்களே விசாரித்தறியலாம்.
கருப்பு வெள்ளையில்
அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்
புரட்டிப் பார்க்கலாம்.
எதுவும் இயலாவிட்டால் உங்கள்
வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்
கண்கலங்குவது சரியா என்று!

புதிய கலாச்சாரம் – ஜூன் 1991 (அனுமதியுடன்)

http://vinavu.wordpress.com/2008/10/28/eelam4/

(I took this Article from above Website, motive to read more people and understand)

ஈழமும் ராஜீவ் காந்தியின் ஆவியும் !

Posted on 28/10/2008 by வினவு http://vinavu.wordpress.com/2008/10/28/eelam4/

“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ் எனும் இந்த ஆயுதம் மட்டும் 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் முனை மழுங்காமல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், அதனை யாரும் எப்போதும் திருப்பித் தாக்கியதில்லை என்பதுதான்.

ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். ஆனால் இந்த ராஜதந்திரம் பார்ப்பனக் கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை. நளினியை பிரியங்கா சந்தித்ததுதான் இன்று புலி ஆதரவு தமிழகத்தில் தலையெடுக்க காரணம் என்று ராஜீவ் குடும்பத்தையே புலி ஆதரவுப் பட்டியலில் சேர்க்கிறார் சு.சாமி. “தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா எழுதியதற்காக கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்” என்கிறார் ஜெயலலிதா. திமுக நடத்திய மனிதச்சங்கிலியில் கொட்டும் மழையில் நிறுத்தப்பட்டதனால் சளி பிடித்துத் தும்மிக் கொண்டிருக்கும் பள்ளிப் பிள்ளைகளின் சார்பில் கோபக்குரல் எழுப்புகின்றன பத்திரிகைகள். இன்னும் எண்ணிப் பார்க்கவே முடியாத கோணங்களில் எல்லாம் கேள்விகள் எழுப்பப் படுகின்றன. கேட்டிருக்க வேண்டிய காத்திரமான கேள்விகளைக் கேட்கத் தவறியவர்கள், இத்தகைய அற்பத்தனமான கேள்விகளைக் கண்டும் அஞ்சி நடுங்குகிறார்கள்.

இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? போபால் விசவாயுப் படுகொலைக்காக, டெல்லி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படாதவர்கள் யார்? அயோத்தியைக் கிளறி இந்துப் பாசிசப் பேய்க்கு உயிர் கொடுத்தது யார்? இந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியது யார்?

மேற்சொன்ன கேள்விகளை யாரும் எப்போதும் எழுப்பியதில்லை. எனவே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோருடன் தேசியப் புனிதர்களின் படவரிசையில் ராஜீவ் காந்தியும் சேர்ந்து விட்டார்.

‘மரித்தவர்களைக் குறைகூறுதல் மனிதப் பண்பில்லையாம்’. ‘அரசியல் நாகரீகம்’ எனும் பட்டாடைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதால், இந்த அரசியல் பிழைப்புவாதத்தைப் பலர் அடையாளம் காண்பதில்லை.

1991 மே 21 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்கப்பட்டார்கள். 2 இலட்சம் திமுகவினரின் உடைமைகள் எரிக்கப்பட்டன. ராஜீவுக்காக கண்ணீர் சிந்துமாறு தமிழகமே அச்சுறுத்தப்பட்டது. அன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் விட்டவர்கள் இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள் இதுவும் ஒரு வகை அரசியல் நிர்ப்பந்தம்தான். பிரணாப் முகர்ஜி கலைஞர் சந்திப்புடன் தமிழகத்தின் “கண்ணீர் விடும் போராட்டம்” முடிவுக்கு வருகிறது.

இனியும் கண்ணீர் விடுவதை யாரேனும் தொடர்ந்தால் அது தீவிரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். அவர்களுக்கெதிராக ராஜீவின் ஆவியோ, ராஜத்துரோகச் சட்டமோ ஏவப்படலாம்.

அன்று தமிழகமே கண்ணீர்க் கடலில் அமிழ்த்தப்ப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து வெளிவரும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஆகிய இரு இதழ்கள் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழுப்பின. அதன் விளைவாக போலீசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டன. “இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்” என்ற தலைப்பில் ஜூன் 1991 புதிய கலாச்சாரம் இதழில் வெளியான உரைவீச்சினை இங்கே பதிவு செய்கிறோம்.

80 களுக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அந்த வரலாற்றை அறிந்து கொள்ளவும், மீண்டும் மீண்டும் அரங்கேறும் கேலிக்கூத்துகளை பழைய தலைமுறை புரிந்து கொள்ளவும் இது உதவக் கூடும்.

Wednesday, August 19, 2009

திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்

. கணேசன் நாடார்

வருகிற 22/8/2009 அன்று குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய அனாரிய சமாஜ் அறக்கட்டளை சார்பில்திராவிடரும் திராவிட இந்தியாவும்என்ற தலைப்பில் ஒரு மொழிபெயர்ப்பு நூல் (உத்தரப் பிரதேசம் மயின்புரியைச் சார்ந்த திரு. எஸ்.எல். சாகர் என்பவரால் இந்தி மொழியில் எழுதப்பட்டதிராவிட் அவுர் திராவிடஸ்தான்என்ற நூலின் மொழிபெயர்ப்பு) வெளியிடப்பட இருப்பதாக அறிகிறோம். இந்நூல் வெளியீடு தொடர்பாக ‘Dravidians and Dravidian India’ என்ற தலைப்பில் ஒரு சிறுபிரசுரம் வெளியிடப்பட்டு, அந்த சிறுபிரசுரம் எமக்கு அனுப்பப்பட்டுள்ளது.

. கணேசன் நாடார்

நாகர்கோயில் சிதம்பரநாதன் தெருவிலுள்ள அனாரியன் பதிப்பகத்தாரால் அப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அப்பிரசுரத்தில் எம். சுந்தர் யேசுவடியான் என்கிற எம்.எஸ். மங்காடு என்பவர் அந்நூலை அறிமுகப்படுத்துகிற வகையில் ஒரு குறிப்பினை எழுதியுள்ளார். தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன உறுப்பினர் என்ற வகையில் அந்த அறிமுக உரையில் எழுதப்பட்டுள்ள அபத்தமான சில கருத்துகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது எம் கடமை என்று கருதுகிறேன்.

வட இந்தியர்களுக்கு, மூல நூலின் ஆசிரியர் எஸ்.எல். சாகர் என்பவரால் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதாக அறிவுரை குறிப்பிடப்பட்டுள்ளது.

1. வட இந்தியர்கள் தமிழைக் கட்டாயம் கற்க வேண்டும்.

2. வட இந்தியர்கள் ராம் லீலா கொண்டாடுவதையும் ராவணனின் கொடும்பாவியைக் கொளுத்துவதையும் நிறுத்த வேண்டும்.

3. பிராமணப் புரோகிதர்களையே பூசைப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற உள்மன உந்துதலை வட இந்தியர்கள் விட்டொழிக்க வேண்டும்.

4. அனாரியர்களான திராவிடர்களைத் திட்டமிட்டு இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்து வேதங்களில் உள்ள பகுதிகளையும் அவற்றின் உரைகளையும் நீக்கவோ திருத்தி எழுதவோ செய்யவேண்டும்.

5. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய அரசு சுயாட்சி வழங்கவேண்டும்.

இவற்றுள் முதல் அறிவுரையைப் பற்றிய எமது எதிர்வினை பின்வருமாறு:

இந்திய வரலாற்று ஆய்வில் ஈடுபடுவதற்குத் தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு அறிவு மிகவும் அவசியமானதாகும். அதே வேளையில், இந்தியாவிலுள்ள வெவ்வேறு மாநிலங்களின் மக்களிடையே ஒரு தொடர்பு மொழியாகத் தமிழை அறிமுகப்படுத்த முயல்வதென்பது சற்றும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகும். ஏன், திராவிட மாநிலங்களான கேரளத்திலும், கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் கூட தமிழைக் கட்டாயமாகக் கற்பிப்பது சாத்தியமா? திராவிட மொழிகளுக்குள் தலைமை வகிக்கக்கூடிய தகுதிபெற்ற மொழி தமிழே என்பதில் நமக்குச் சற்றும் ஐயம் இல்லை. ஆனால், அந்த உண்மையைக்கூட கேரள, ஆந்திர, கர்நாடகத்துச் சகோதரர்களீடம் நாம் நிலைநாட்ட முடியவில்லை. மலையாளமும், கன்னடமும், தெலுங்கும் தமிழுக்கு இணையான செம்மொழிகளே என்று அவர்கள் பேசத் தொடங்கிவிட்ட இன்றைய நிலையில் திராவிடத் தலைமை மொழி தமிழே என்பதை அவர்களுடைய சிந்தனையில் பதிய வைப்பதே இமாலய முயற்சி தேவைப்படுகின்ற ஒரு விடயமாக இருக்கின்ற நிலையில், இது போன்ற வெற்று கோஷங்களால் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை.

இரண்டாவதாக, ராம் லீலா கொண்டாட்டங்களையும், இராவணனின் கொடும்பாவியைக் கொளுத்துவதையும் வட இந்தியர்கள் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமன் சூரிய குல க்ஷத்திரியன். இராவணன் புலஸ்திய ரிஷி கோத்திரத்துப் பிராமணன். இது இராமாயண நூல்களில் மட்டுமின்றிப் பல்வேறு புராணங்களிலும் பதிவுபெற்றுள்ள உண்மையாகும். கரிகால் சோழன் தொடங்கிப் பிற்காலச் சோழர்களான இராஜராஜன், இராஜேந்திரன், குலோத்துங்கன் போன்றோர் சூரிய குல ராமன் தங்கள் குல முன்னோன் என்று பதிவு செய்துள்ளனர். சூர்ப்பணகை ராமனிடம் இச்சைகொண்டு அவனை அடைய முயலும்போது ராமன், ”சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன்என்று குறிப்பிட்டு அவள் இச்சைக்குத் தடை போடுகிறான் என்று கம்ப ராமாயணத்தில் (ஆரண்ய காண்டம், சூர்ப்பணகைப் படலம், பா. 49) குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இராவணன் வம்சம் அந்தணர் குலம் என்றும், தனது வம்சம் க்ஷத்திரிய குலம் என்றும், தங்களுக்குள் இத்தகைய உறவு பொருந்தாது என்றும் ராமன் குறிப்பிடுவதாகப் பொருளாகும். கம்பர் உவச்சர் எனப்படும் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சேரமான் பெருமாள் மன்னரான குலசேகர ஆழ்வார்எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோஎன்று தம்முடைய பாசுரத்தில் (பெருமாள் திருமொழி 8ஆம் பதிகம்) குறிப்பிட்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இரகு வம்சத்துத் தலைவன் இராகவன் (இராமன்) தங்கள் குல முன்னவன் என்று க்ஷத்திரியச் சான்றோர் மரபினர் தங்கள் செப்புப் பட்டயங்களில் பதிந்து வைத்திருப்பதை அனாரிய சமாஜத்தார் உணர வேண்டும். சேரமான் பெருமாள் தங்கள் குல முன்னோர்கள் என்று உரிமை பாராட்டி அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் சான்றோர் சமூகத்தவர்கள் ஒரு விழா நடத்தி அதில் ஒரு சான்றோர் குடும்பத்தவரைச் சேரமான் பெருமாளின் வாரிசு என்றே அடையாளப்படுத்திப் பெருமை சேர்த்ததாகவும் அறிகிறோம். அந்த விழாவில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த சான்றோர் சமூகத்தவர்கூட பெருமிதத்துடன் பங்கேற்றார்கள் என்றும் அறிகிறோம்.

இப்படிப் பெருமிதம் கொள்வது என்பதே பொய்யான பெருமை பாராட்டுதல் என்று அனாரிய சமாஜத்தார் சொல்லக்கூடும். சான்றோர் சமூகத்தவர்களை இழிவுபடுத்தி எழுதிய கால்டுவெல்லை ஞானத் தந்தை என்று கூச்சமில்லாமல் உரிமை கோருபவர்களுக்கு இராமன் எங்கள் குல முன்னோன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்தால் வெறுப்பாகத்தான் இருக்கும். எங்கள் முன்னோர் பெருமித உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தார்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிற ஒரு குழுவினருக்கும், கால்டுவெல் போன்றோர்கள் வந்து நாகரிகத்தைக் கற்பிக்கின்ற காலம்வரை எங்கள் முன்னோர்கள் உடை உடுத்துவதற்குக்கூட உரிமையின்றி அம்மணமாக அலைந்து திரிந்தார்கள் என்று கூச்சமின்றிச் சொல்லித் திரியும் குழுவினருக்கும் வரலாற்று உணர்வில் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம்.

இராவணனைத் தங்கள் குல முன்னவனாக ஸ்ரீமாலி (திருமாலி) பிராமணர்கள் என்ற சாதிப் பிரிவினர் கொண்டாடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூரில் இராவணனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். (ஆதாரம்: New Sunday Express 28/10/2007, p.13) இந்த ஸ்ரீமாலி பிராமணர்கள் ஒரிசா மாநிலத்திலும் மடம் அமைத்துள்ளனர் எனத் தெரிகிறது. அதே வேளையில், சூரிய குலச் சத்திரியர்கள் என உரிமை கொண்டாடும் சான்றோர் குலப் பிரிவினர்கள், தங்கள் சிற்றூர்களில் உள்ள கோயில்களில் இராமனை தெய்வமாக வைத்து வணங்கி வருகின்றனர். தங்கள் சமூகக் கோயில் விழாக்களில் இசைக்கப்படும் வில்லிசைப் பாடல்களில் இராமாயணத்தைத் தவறாமல் பாடிவருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இப்பிரிவினர் வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் என்றும், மார்த்தாண்ட நாடாக்கள் என்றும், ஆதித்த நாடாக்கள் என்றும் பட்டம் புனைந்து தங்கள் பாரம்பரியப் பெருமிதத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இதற்குக் கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களும் உள்ளன. கொங்கு நாட்டு அவல்பூந்துறை சான்றோர் மடத்துச் செப்பேட்டில் இராமனைத் தங்கள் குல முன்னோனாகக் குறிப்பிடுவதோடு, வாலியைக் கொன்ற சூரியப் பிரதாபர்கள் என்றும், கெளசலை (இராமனின் தாய் கோசலையின் மரபினர்) நாடார்கள் என்றும், உத்தர தேசத்தில் அயோத்தி மாநகரில் தாயார் தமக்கு க்ஷத்திரிய வருணத்தினால் நாயக்கப் பட்டம் நலம்பெறப் பெற்றவர் என்று தங்கள் குலப் பெருமிதங்களை ஆவணங்களாகப் பொறித்து வைத்துள்ளனர். இவர்கள் யாருமே இராவணனைத் தங்கள் குல முன்னோனாகக் குறிப்பிட்டுக் கொள்ளவோ, வழிபடவோ செய்பவர்கள் அல்லர். இத்தகைய நடைமுறைச் சான்றுகள் இருக்கும்போது இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல ஆதாரமில்லாத கருத்துகளையே பிடிவாதமாகப் பேசிவருவது கண்டனத்துக்கு உரியதாகும். அல்லது, சோழர்களை ஆரியர்கள் என்றும், திருமாலி பிராமணர்களைத் திராவிடர்கள் என்றும் அனாரிய சமாஜத்தவர்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறீர்களா? இதற்கு அவர்களிடமிருந்து நேரடியான பதிலை எதிர்பார்க்கிறோம்.

மூன்றாவதாகத் தாங்கள் குறிப்பிடுகின்ற அறிவுரை குறித்து - பிராமணப் புரோகிதர்களை நியமித்துப் பூசைப் பணிகள் செய்வது என்பது இந்துக்களின் பிரச்சினை. அது பற்றி இந்துக்களுக்கு அறிவுரை கூறுவதற்கு வேற்று மதத்தவர்களுக்கோ, கடவுள் மறுப்பு இயக்கத்தவர்களுக்கோ எந்த உரிமையும் கிடையாது.

நான்காவது அறிவுரை குறித்து - இந்து மத வேதங்களில் அனாரியர்களாகிய திராவிடர்களை இழிவுபடுத்துகிற பகுதிகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுக் குறித்து ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். தஸ்யுக்கள் என்றும், தாசர்கள் என்றும், அநாச (சப்பை மூக்குக்காரர்கள்) என்றும் வேதங்களில் குறிப்பிடப்படும் சொற்கள் இன அடையாளம் கொண்டவைதாமா என்பதற்கு இன்னும் தெளிவான கருத்து இல்லை. ஆரிய இனத்தவரிலேயே தஸ்யுக்கள் இருந்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய சில பிராமணர்கள் தாசி புத்திரர்களாக (தஸ்யுக்களாக) இருந்தனர் என்பதையும் சற்றுப் பிற்பட்ட வேதப் பிரதிகள் குறிப்பிடுகின்றன என்றும், வைதிகப் பிராமண சாதிக்குள் ஆரியருக்கு முற்பட்டச் சமூகப் பூசாரி மரபினர் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றும் வரலாற்று அறிஞர் ரோமிலா தாப்பர், “The theory of Aryan race, its history and politics” என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

பாண்டிய குலச் சான்றோர்களுக்குக் குல குருவாக இருந்து தமிழ் கற்பித்த அகத்தியர் திலோத்தமை என்ற நடன மாதுவின் மகன் என்ற வேதகால வர்ணனையை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, அகத்தியரைக் கோயில் கட்டி வழிபடுகின்ற, அகத்தியரால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவத்தைப் போற்றுகின்ற குமரி மாவட்ட மக்கள் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள். மேலும், இந்தியாவிலேயே 5 வகை மனித இனங்கள் (race) காலம் காலமாகச் சண்டையிட்டும், கூடி வாழ்ந்தும் காலப் போக்கில் தனித்த அடையாளங்களைவிட்டுக் கலந்தும் விட்டனர். மொழியியல் மட்டத்தில் தனித்த அடையாளங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன என்பது மட்டுமே உண்மையாகும். அநாச என்று வேதங்களில் குறிப்பிடப்படும் சொல் இன அடிப்படையில் இந்தோ ஆஸ்த்ரலாய்டு அல்லது நெக்ராய்டு மக்களைக் குறித்திருக்கக்கூடும். மங்கலாய்டு இனக் கலப்புக் கூறுகளும் இதில் இருந்திருக்கலாம். ஆனால், மத்திய தரைக்கடல் பகுதி இனத்தவராக முடிவுசெய்யப்பட்டுள்ள்ள திராவிடர் இந்தஅநாசபட்டியலில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. நிலைமை இவ்வாறிருக்க 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்களால் பிரசாரம் செய்யப் பயன்படுத்தப்பட்ட இத்தகைய வரலாற்று வியாக்யானங்களை அப்படியே பிரதி எடுத்து மறுபதிப்புச் செய்வதென்பது வரலாற்று ஆய்வாகக் கருதப்படாது. மாறாக, மக்களுடைய நியாயமான வரலாற்றுப் பெருமித உணர்வை இழிவுபடுத்தி, அதன்மூலம் ஆதாயம் தேடுகின்ற ஒரு வழிமுறையாகவே கருதப்படும்.

திரு . கணேசன் நாடார் அவர்கள் சென்னையிருந்து இயங்குகின்ற தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன உறுப்பினர். தமிழக சமூக வரலாறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பவர்.