Wednesday, September 30, 2009

உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்

டொரண்டோ: தமிழ் ஈழ நிலத்தில் தமிழர்கள் ரத்தம் சிந்தும் இந்த வேளையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள கோவை உலகத் தமிழ் மாநாட்டை முழுமையாகப் புறக்க வேண்டும் என உலக தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:

“பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர் - அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்று முன்னர் - முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!

இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக்கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.

உலகத் தமிழரை ஏமாற்ற…

தமிழகத்தில், தமிழ் ஆட்சிமொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்பிக்கும் மொழியாக இல்லை. அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை.

இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

‘வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்’ என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்புமொழிப் பெயர்கள்.

முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

மரணப் படுக்கையில் தமிழினம்…

ஆண்டுக் கணக்காக சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், உருசியா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி தில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக - சட்டதிட்டங்களுக்கு முரணாக - திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்’ என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெண்ணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!

இந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் ‘மை டெலிகிராப்’ நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான ரிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திறந்த வெளிச் சிறைச்சாலைகளில்…

திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள இராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வதை முகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐநா உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. ‘இந்து’ ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென் தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் இலங்கை அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 டன் உணவு, உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.

குற்றம்சாட்டுகிறோம்…

எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், ராடார், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத் தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!

ஐநாவின் மனிதவுரிமை அவையில் ஸ்ரீலங்கா அரசு மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்!

தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது ‘நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்’ என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!

முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என நாம் குற்றம் சாட்டுகிறோம்!

“இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என அப்போலோ மருத்துவமனையில் படுத்தபடியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்!

இனமானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்!

தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குட்டிக் கரணமே இல்லை எனலாம். 1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டுவிட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார்.

இன்று “இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பவுத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்!

மூன்று மணிநேரம் உண்ணாநோன்பு நோற்று ‘இராசபக்சே போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்’ என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் ‘இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?’ என்று செய்தியாளர்கள் கேட்ட போது ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்து வைத்து அழகுபார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்!

இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத்தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபேத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு!

தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா?

வெந்த புண்ணில் வேலைச் சொருகுகிறார்…

வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். “இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்” என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று லட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே அதற்குப் பெயர் இயல்பு நிலையா? தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பவுத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை?

கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!

தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!”, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, September 29, 2009

வாய்தா என்பதே வேலையாகி விட்டது!

கே. வீ. ராமராஜ்

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பல்லாயிரக்கணக்கான வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் பல லட்சக்கணக்கான வழக்குகளும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் பலர் தமது வழக்கு விரைவில் முடிவுக்கு வருவதில்லை என்றும், எப்போது பார்த்தாலும் வழக்கில் நீதிமன்றம் வாய்தா போட்டு விடுகிறது என்றும் சொல்வதை பல இடங்களில் கேட்க முடிகிறது. இதைப்போலவே குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றங்கள் பல குற்றவாளிகளை விடுதலை செய்து விடுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டையும் பல இடங்களில் கேட்க முடிகிறது. பொதுவாக, நீதிமன்றங்களில் வாய்தா என்பதே வேலையாகி விட்டது மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுவதற்கான காரணங்களை அலசி ஆராய வேண்டிய தருணம் இது.

விரைவாக நீதியைப் பெறுவதற்கான உரிமையும் எளிதில் நீதியை அணுகுவதற்கான உரிமையும் மிக முக்கியமான மனித உரிமைகள் ஆகும். இதனையே உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் பலமுறை வலியுறுத்தியுள்ளன.

இருப்பினும் விரைவில் வழக்குகளை முடிப்பதற்கும் எளிதில் மக்கள் நீதிமன்றங்களை அணுகுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வது யார்? அதற்கான திட்டம் என்ன? என்ற கேள்விகள் தொடர்கின்றன. தாவாக்களைத் தீர்ப்பதற்கும் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் முறையான நீதி நிர்வாக அமைப்பு இல்லாவிடில் மக்கள் வன்முறைக்கும் சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஜனநாயக ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ, விரைவான நீதியும் அதனை அணுக எளிதான தன்மையும் மிக அவசியமாகும்.

இந்தியாவில் 10.5 லட்சம் மக்களுக்கு ஒரு நீதிபதி இருப்பதாகவும், ஆனால் 10 லட்சம் மக்களுக்குக் குறைந்தது 10 நீதிபதிகளாவது இருக்க வேண்டுமென்றும் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஒரு மாவட்டத்தில் சிவில் வழக்குகளைத் தீர்ப்பதற்கான மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் 5 இருப்பதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு நீதிபதியும் மாதத்திற்குக் குறைந்தபட்சம் 20 வழக்குகளில் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழிகாட்டி உள்ள நிலையில், அம் மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 100 வழக்குகள் தீர்க்கப்படும்.

ஆனால் அம் மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 500 வழக்குகள் புதிதாகத் தாக்கல் செய்யப்படும் நிலையில் வழக்குகளின் தேக்கம் நீதிமன்றம் தீர்க்கும் வழக்குகளுக்கு ஏற்ற விகிதாசாரத்தில் இருக்காது. இதைப்போன்ற நிலையே இந்தியா முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வருகிறது.

இதனால்தான் புதிதாக ஒரு சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வழக்குகள் அந்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், புதிதாகத் தாக்கல் செய்யப்படும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகிறது.

இவ்வாறு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதன் மீது வழக்கில் தோல்வியுற்ற தரப்பினர் மேல்முறையீடு செய்வதால் அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏற்படுவதற்கு மீண்டும் காலதாமதம் ஏற்படுகிறது.

உதாரணமாக, ஒரு நடுத்தரக் குடிமகன் தமது வாழ்க்கையில் பல ஆண்டுகள் சேமித்து தமக்கென ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஒரு காலி மனையிடத்தை விலைக்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இதற்காக அவர் காலி மனையிடங்களை உருவாக்கி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தை அணுகுகிறார்.

அவர்கள் அந்த நடுத்தரக் குடிமகன் வசிக்கும் நகரை ஒட்டியே சுமார் 200 காலிமனையிடங்களைக் கொண்ட ஒரு புதிய குடியிருப்பை அரசிடம் அங்கீகாரம் பெற்று உருவாக்கியுள்ளார்கள். இதில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து நடுத்தரக் குடிமகன் காலி மனையிடத்தையும் வாங்கி விடுகிறார். அதன் பின்பு அவர் வீடு கட்ட நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வருகிறது.

அதைப் பார்த்தால் இவருக்கு அழைப்பாணை வந்தது போலவே அந்தக் குடியிருப்புப் பகுதியில் காலி இடங்களை வாங்கிய 200 நபர்களுக்கும் அழைப்பாணை வந்துள்ளதை அவர் அறிகிறார்.

இப் பிரச்னையின் விவரம் என்னவென்றால், இந்த 200 காலி மனையிடங்களை உருவாக்க நிலத்தை வாங்கும்போது அந்நிலத்தின் விற்பனையாளரின் மகன் மைனராக இருந்துள்ளார். அவரது மகன் தற்போது இது பூர்வீகச் சொத்து என்றும், நிலத்தில் காலி மனையிடங்களை வாங்கியது தவறு என்றும், இச்சொத்தில் தமக்குப் பங்கு உள்ளது என்றும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதே ஆகும்.

இந்த வழக்கு முடிய சுமார் 5 ஆண்டுகள் எடுத்துக்கொள்வதாக வைத்துக் கொண்டால்கூட வழக்கு முடியும் வரை சொந்த வீட்டுக் கனவுடன் வீடு வாங்கிய 200 நடுத்தர மக்கள் தமது கனவுகளைக் கேள்விக்குறியாகத் தங்களது வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. வழக்குகள் விரைவாக முடிக்கப்படாவிட்டால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

எனவே, சிவில் வழக்குகளைப் பொறுத்தவரை ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் அதிகபட்சம் ஓராண்டுக்குள்ளாக வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வழக்கில் மேல்முறையீடுகள் ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டால் அதிகபட்சம் 6 மாத காலத்திற்குள் அம்மேல் முறையீட்டில் முடிவு காணப்பட வேண்டும். இல்லாது போனால் பொதுமக்களின் அமைதியும் மகிழ்ச்சியும் கேள்விக்குறியாகிவிடும்.

வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்கு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ஏற்பத் திட்டம் வகுத்து அதிகமான நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு கூடுதலான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் நீதிமன்றங்களில் போதுமான நீதிமன்றப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

நீதிமன்றங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வேலைகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். உதாரணமாக, சென்னையில் உள்ள ஒருவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பின் நகல் பெற வேண்டும் என்றால் அவர் நாகர்கோவிலுக்குச் சென்று வழக்கறிஞரை அமர்த்தி மனு தாக்கல் செய்து சில நாள்களுக்குப் பின்பு அதனைப் பெற வேண்டி உள்ளது.

இணையதளம் வசதிகள் மூலம் நீதிமன்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியம், வழங்கப்பட்ட தீர்ப்புரை, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் பதில் மனு உள்ளிட்ட எதனையும் ஒருவர் தாம் வசிக்கும் ஊரிலேயே அங்குள்ள நீதிமன்றத்தை அணுகி குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி அதிகபட்சம் ஒருமணி நேரத்திற்குள் பெற்றுவிடும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை நவீனப்படுத்த முடியும்.

நீதிமன்றங்களை அதிகரித்து நீதிமன்றப் பணியாளர்களை அதிகரித்து நவீன மயம் செய்யப்பட்டுவிட்டால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்குகளை இழுத்தடிக்கிறார்கள் என்ற தவறான எண்ணம் மறைந்து போவதோடு விரைவான நீதியை எளிதில் வழங்க முடியும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய பணிகளைச் செய்வதற்கு உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் எப்போதும் தயாராகவே இருந்து வருகிறது. ஆனால் இப்பணிகளைச் செய்வதற்குப் போதுமான நிதி ஆதாரம் வேண்டும். புதிய நீதிமன்றங்களை உருவாக்கும்போது அதற்கான கட்டடம் தேவைப்படுகிறது.

அங்கு நியமனம் செய்யப்படும் நீதிபதிகளுக்கும் பணியாளர்களுக்கும் மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டி உள்ளது. நீதிமன்றங்களை நவீனப்படுத்துவதற்குச் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய நிதி ஆதாரத்தை ஒதுக்கீடு செய்வது சட்டமன்றங்களும் நாடாளுமன்றமுமே ஆகும். ஆண்டுதோறும் மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் நீதித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை.

குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவில் முடிக்கப்படுவதில்லை என்பதோடு பல சமயங்களில் நடுத்தெருவில் குற்றம் செய்தவர்கள்கூட விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் உண்டு.

நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வது காவல் துறையினர். வழக்குகளில் சாட்சிகளை விரைவாக அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் மட்டுமே வழக்குகளை விரைவாக முடித்துவிட முடியும். அதைப்போல சரியாகப் புலன் விசாரணை செய்து உண்மையான சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து அவர்களைச் சரியாக சாட்சியம் அளிக்கச் செய்யும் கடமை காவல் துறைக்கும் நீதிமன்றத்தில் உள்ள அரசு வழக்கறிஞருக்கும் உண்டு. இவற்றைச் சரிவரச் செய்யாமல் போகும்போது சாட்சியங்களின்றி தண்டனை அளிப்பது என்பது நீதிமன்றங்களால் இயலாது.

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் நீதியை எளிதில் பொதுமக்கள் அடைவதற்கான வழிவகைகளை உருவாக்குவதோடு இதில் உள்ள தடைகளை நீக்குவதற்குத் தக்க திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துவது அவசியமாகும்.

மனித உரிமைகளான விரைவான நீதியும் அதனை எளிதில் அணுகும் தன்மையும் மக்களுக்குக் கிடைக்க சமூகத்தில் அதற்கான நடவடிக்கைகளில் தக்க பங்களிப்பை மனிதர்களாகிய பொதுமக்கள் அனைவரும் செய்ய வேண்டியது சமூகக் கடமையாகும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

எம் . சடகோபன் (Published in Dinamani)

வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் சிக்கலின்றி ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், கல்வி மிகமிக அவசியம். கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பொருத்துத்தான் அந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.

கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும். அனைத்துத் துறைகளிலும் மேல்நிலை அடைந்தால்தான் வல்லரசாக முடியும்.

ஆராய்ச்சிகளுக்கும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி இல்லாதபோது எவ்வாறு வல்லரசாக முடியும்?

இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடிப்பவர்களில் 10 சதவீதம் பேர்தான் உயர்கல்வி பயிலச் செல்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆரம்பக் கல்வியைக் கூட தட்டுத்தடுமாறி முடிக்க வேண்டிய நிலையில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்றளவில் உயர்கல்வி என்பது எட்டாக்கனிதான்.

மக்கள்தொகை அதிகரிப்பு, நாட்டின் செல்வ வளம் அதிகரிப்பு, இடைநிலைக் கல்வியின் விரிவாக்கம் போன்றவற்றின் காரணமாக உயர்கல்வியின் தேவையும் அதிகரிக்க நேர்ந்தது. தனிமனிதனைப் பொருத்தவரை உயர்கல்வி என்பது அவனது சமூக அந்தஸ்தை உயர்த்தத் தேவைப்படுகிறது. தேசிய நிலையில் பார்த்தால் சமூகத்தை மறுசீரமைக்கவும், நாட்டின் மனித வளத்தைப் பெருக்கவும் உயர்கல்வி விரிவாக்கம் அவசியமாகிறது.

இன்று கல்விக்கூடங்கள் தனியார்களின் பிடியில் சிக்கியுள்ளன. பெரும்பாலான கல்விக்கூடங்கள் கல்வி விற்பனைக் கூடங்களாக மாறிவிட்டன. அரசு கல்விக்கூடங்களில் பெரும்பாலானவை ஆள் இல்லா பாலைவனங்களாகக் காட்சி அளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பற்றாக்குறை, பணத்துக்காக நியமனம், விடைத்தாள் திருத்தலில் அலட்சியம், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி, போலிச் சான்றிதழ்கள் என்று கல்வியின் தரம் தாழ்ந்து கொண்டே செல்கிறது.

அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த இந்த மண்ணில் குறிப்பாக வடமாநில கிராமங்களில் ஆரம்பக் கல்வியே எட்டாக்கனியாக உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, அவர்கள் எவ்வாறு உயர்கல்வியைப் பற்றிச் சிந்திக்க முடியும். பணக்காரக் குடும்பங்களில் உள்ள வடஇந்திய மாணவர்கள் ஆரம்பக் கல்விக்குப் பின் உயர்கல்விக்காக தென்இந்தியாவை நோக்கிப் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தென் இந்தியாவில் தனியார் பொறியியல் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழங்களும் அதிகம் உள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.

அண்மைக்காலங்களில் அகில இந்திய அளவில் ஏராளமான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு தென்இந்தியாவில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

முறைகேடாகச் சம்பாதித்த பணத்துக்கு முழுப் பாதுகாப்பான முதலீட்டுச் சந்தையாக இருப்பது பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்தான்.

எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் புதிது புதிதாக பொறியியல் கல்லூரிகளையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் துவக்குவதிலிருந்து இதை அறியலாம்.

இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்களாகி மரியாதையை இழந்து வருகின்றன. மேலும், கல்வியின் தரமும் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது.
சில அரசியல்வாதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழங்களின் வேந்தராகவும், சிலர் ஏராளமான கல்வி நிறுவனங்களின் சொந்தக்காரர்களாகவும் கோலோச்ச முடிவதற்குக் காரணம் அரசியல் தலையீடுதான்.

ஒருகாலத்தில் தமிழகப் பொறியியல் மாணவர்கள் அமெரிக்காவில் ஐ.டி. உள்பட பல்வேறு துறைகளில் உயர்பதவிகளை வகித்தனர். அப்போது ஆசிரியர்கள் முதல் துணைவேந்தர் வரை உள்ள பதவிகளுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் இருந்ததே முக்கியக் காரணம். ஆனால் இன்று... துணைவேந்தர் நியமனம் அரசியல் கட்சியினரின் குறிப்பாக ஆளுங்கட்சியினரின் சிபாரிசு இல்லாமல் நடப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உழைப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

மேலும், கோடான கோடிப் பணத்தை இறைத்து, தேர்தலில் வெற்றி பெற்று வரும் மக்கள் பிரதிநிதிகள் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக உழைக்க முடியுமா?

இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இளைஞர்கள்தான் உள்ளனர். அதுவும் கிராமப்பகுதியில்தான் அதிகம் உள்ளனர். அவர்களை அறிவுடையவர்களாக வளர்த்தால்தான் நாட்டின் பொருளாதாரம் செழுமை பெறும்.

வரும்காலத்தில் ஏழை, பணக்கார நாடு என்ற பாகுபாடு மறைந்து அறிவாளிகள், அறியாமையாளர்கள் நாடு என்ற பாகுபாடுதான் இருக்கும் என்பதை கல்வி முதலீட்டாளர்கள் அறிய வேண்டும். தங்கள் கல்லூரி பற்றி பிரபலப்படுத்தி மூளைச்சலவை செய்வதுடன், மாணவர்களின் பெற்றோர்களை கடனாளிகளாக்கும் இவர்கள் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் சிந்தை கொள்ள வேண்டும்.

பெரும் பணக்காரர்கள் மட்டுமே உயர்கல்வியை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலைக்குக் கல்வியை அரசியல்வாதிகள் கொண்டு சென்று விட்டனர். பணம் ஒன்றே குறிக்கோள் என்ற நிலையில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களால் சாமானியனுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. அரசியல் சதுரங்கத்தால் வீணாய்ப்போகும் கல்வியை மீட்க வேண்டியது அரசின் கடமை. இனியும் காலம் தாழ்த்தாமல், ஏழை எளியவர்களுக்கும் உயர்கல்வி தாராளமாகக் கிடைக்க அரசு முற்போக்குத் திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியமாகும்.

Tuesday, September 22, 2009

இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம்.

இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது.

அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு.

அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதிதிரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும். இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்?

ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்:

"இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''.

இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி.

இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி. ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே!
இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபட்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே!

Saturday, September 19, 2009

மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.


கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், "பரிசு' என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய "ஃபைசர்' நிறுவனம்-

வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி "வையோக்ஸ்' என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...

ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?.

Wednesday, September 16, 2009

குணம்நாடிக் குற்றமும் நாடி...!

இல. கணேசன்
ஜஸ்வந்த் சிங்கை புத்தகம் எழுதியதற்காக பாரதிய ஜனதா கட்சி நீக்கிவிட்டது என்பதாகச் சிலர் நீட்டி முழக்கி எதிர்ப்புத் தெரிவிக்க முனைந்து வருகிறார்கள். ஜஸ்வந்த் சிங், கட்சியிலிருந்து நீக்கப்பட்டது ஜின்னாவைப் புகழ்ந்தார் என்பதற்காக மட்டுமல்ல; வல்லபாய் படேல் குறித்து தவறாக எழுதிவிட்டார் என்பதற்காகத்தான்.
யார் இந்த வல்லபாய் படேல்?

ஆங்கிலேயன்தான் இந்த நாட்டை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்திவிட்டான் என்று அறியாமையில் சிலர் பேசித் திரிகிறார்கள். ஆனால் உண்மை என்ன? ஆங்கிலேயன் பாரதத்துக்கு சுதந்திரம் தருவதற்கு முன் அது குறித்து லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினான்.

அப்போது பாரத நாடு, ஆங்கிலேயனது நேரடி ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்றும் மன்னர்கள் ஆட்சிக்கு உள்பட்டு ஆனால், ஆங்கிலேயனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதி என்றும் இரு பகுதிகளாக நிர்வாக ரீதியில் செயல்பட்டன.

தன்னுடைய நேரடி ஆதிக்கத்தில் இருக்கின்ற "பிரிட்டிஷ் இந்தியா' பகுதிக்குச் சுதந்திரம் வழங்குவதாகவும், சமஸ்தானங்களைப் பொருத்தவரை அவை விரும்பினால் இந்திய யூனியனில் இணையலாம் அல்லது அவை விரும்பினால் பாகிஸ்தானோடு இணையலாம் அல்லது அவை விரும்பினால் சுதந்திரமாகவே நீடிக்கலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றியவன்தான் ஆங்கிலேயன்.

அவனது கற்பனை, தான் போன பிறகு பாரதம் சிதறுண்டு போக வேண்டும் என்பதுதான். ஆனால், இறைவன் அருளால் நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் பொறுப்பேற்றுக் கொண்ட காரணத்தால் 600 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், இந்திய யூனியனில் இணைந்தன - மூன்றைத் தவிர. ஒன்று ஜுனாகட், இரண்டு ஹைதராபாத், மூன்று ஜம்மு - காஷ்மீர். இதில் ஜுனாகட்டையும் ஹைதராபாதையும் பாரதத்துடன் இணைக்கும் பொறுப்பை படேல் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாக அவை பாரதத்துடன் இணைந்தன.

ஜம்மு - காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் பொறுப்பை ஜவாஹர்லால் நேரு ஏற்றுக் கொண்டார். இன்னும் அது தடுமாற்றமாகவே இருக்கிறது.

கலாசார ரீதியாக பன்னெடுங்காலமாக பாரதம் ஒரே நாடாக இருந்தாலும்கூட அரசியல் ரீதியாக இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திய பெருமை எவரையேனும் சேருமானால் அது வல்லபாய் படேலைத்தான் சேரும்.

அதுமட்டுமல்ல, பாரதம் மீது படையெடுத்து சோமநாதபுரம் ஆலயத்தைத் தகர்த்து கொள்ளையடித்துச் சென்ற அந்தக் கறையைப் போக்குவதற்காக சபதம் ஏற்றவர் படேல். அதன்படி மீண்டும் அதே இடத்தில் பிரம்மாண்டமான சோமநாதபுரம் ஆலயத்தை நிர்மாணித்து அதை நிறைவேற்றியும் காட்டினார்.

இந்த இரண்டு காரணங்களுக்காக, நாட்டின் வரலாறு தெரிந்த தேசபக்தர்கள் வல்லபாய் படேலைப் போற்றுகிறார்கள்.

எந்தவொரு மனிதனிடமும் நற்குணங்களும் தீய குணங்களும் கலந்தே இருக்கும். ஆனால், அவனது வாழ்க்கையில் எது மிகுதியாக வெளிப்படுகிறதோ அதுவே அவனது அடையாளமாகக் கருதப்படும்.

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடும் மரபே இந்நாட்டின் மரபு.

அதன் காரணமாகவே சிலரது பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே மக்களுக்கு அவரிடம் எத்தகைய பண்பு கூடுதலாக இருக்கிறதோ அல்லது இருந்ததோ அதுவே நினைவுக்கு வரும்.

கர்ணன் என்றால் கொடை நினைவுக்கு வரும். ராமன் என்றால் அறம் நினைவுக்கு வரும். சகுனி என்றால் சூது நினைவுக்கு வரும், மகாத்மா என்றால் அஹிம்சை நினைவுக்கு வரும்.

இதேபோல வல்லபாய் படேல் என்று சொன்னமாத்திரத்தில் நாட்டை ஒற்றுமைப்படுத்தியவர் என்பதே நினைவுக்கு வரும்.

ஜின்னா என்று சொன்னமாத்திரத்தில் இந்த நாட்டின் பிரிவினைக்கு வித்திட்டவர் என்பதே நினைவுக்கு வரும்.

ஜஸ்வந்த் சிங், படேல் குறித்து, தவறாக எழுதிவிட்டார் என்பதற்காக எந்தவித விசாரணையும் இல்லாமல் அவரை நீக்கலாமா? என்று ஜஸ்வந்த் சிங்கின் திடீர் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒரு கற்பனைக்காக, ஜஸ்வந்த் சிங் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்குமானால் என்ன ஆகியிருக்கும்?

புத்தகம் வெளியிட்ட 24 மணிநேரத்துக்குள், "நாமெல்லாம் தெய்வமாகப் போற்றக்கூடிய வல்லபாய் படேல் குறித்து பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஒருவர் அவதூறாக எழுதிவிட்டார்' என்று குஜராத் மக்களிடையே காங்கிரஸ் கட்சி பிரசாரம் மேற்கொண்டிருக்கும். அதோடு மக்களின் உணர்வுகளைப் பாரதிய ஜனதாவுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, கலவரத்தை உண்டாக்கி, அதன் காரணமாக சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டிருக்குமானால் அது எத்தகைய விபரீதத்தில் முடிந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆனால், படேலை தெய்வமாகப் போற்றுகிற குஜராத் மக்கள், இப்போது மோடியின் நற்செயலுக்காக அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.
அப்படியானால் மோடியைக் காப்பாற்றவா ஜஸ்வந்த் சிங்கை பலியாக்கினார்கள் என்ற கேள்வி ஏழலாம்.

பாரதிய ஜனதாவில் எந்த ஒரு முடிவும் எந்த ஒரு தனி நபரும் எடுப்பதில்லை. தலைவராக இருந்தாலும், ஒரு குழு கூடித்தான் எந்த ஒரு விஷயம் குறித்தும் முடிவு செய்கிறது.

ஜஸ்வந்த் சிங் குறித்து கட்சித் தலைமை இதுவரை பகிரங்கமாக எதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாம். அநேகமாக சொல்லவும் மாட்டார்கள். கட்சிக்குள் இருந்தவர் குறித்து, அவரை கட்சியைவிட்டு வெளியேற்றிய பிறகு களங்கம் விளைவிக்கும் விதமாகப் பேசுவது என்பது மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போன்றது. பாரதிய ஜனதா இதை ஒருபோதும் செய்யாது. செய்ததில்லை.

ஆனால், இந்த அரசியல் நாகரிகத்தையே பலவீனமாகக் கருதி, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அன்றாடம் வீசிவரும் அக்னி ஏவுகணைகள், இதுநாள் வரை வெறும் வாயை மென்று கொண்டிருந்த பலருக்கு, அவல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

ஜஸ்வந்த் சிங் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பார்க்கும்போது, கட்சியில் நான்காம் இடத்தில் இருந்த ஒருவரை கட்சித் தலைமை நீக்கியிருப்பதன் மூலம் ஏதோ நியாயமான ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தொண்டர்கள் உறுதியாக உள்ளார்கள். அதிலும் அந்த நபர் வெளியே வந்தபிறகு பேசும் பேச்சுகளைக் கேட்ட பிறகு, இந்த நபரை இத்தனை நாள் எப்படி வைத்திருந்தார்கள் என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.

பாரத நாட்டின் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அச்சமின்றி வழிபாட்டு உரிமையோடு வாழ்ந்து வருகிறார்கள். பாரத நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமை ஒரு இஸ்லாமியனுக்கும் இருக்கிறது; ஒரு கிறிஸ்தவனுக்கும் இருக்கிறது.

பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானிலோ அல்லது வேறுசில அரபு நாடுகளிலோ இத்தகைய உரிமையை எதிர்பார்க்க முடியுமா?

இந்திய நாட்டு முஸ்லிம், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களைவிட அதிக சுதந்திரத்துடன்தான் வாழ்ந்து வருகிறான். சொல்லப்போனால், இந்த தேசத்துப் பெரும்பான்மை இந்துக்களுக்கு இல்லாத உரிமைகளெல்லாம் சிறுபான்மை மதத்தவருக்கு உள்ளது என்பதுதான் பிரச்னையே.

அத்வானி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் நாட்டு மரபுப்படி பாகிஸ்தானின் தந்தையாகக் கருதப்படுகின்ற ஜின்னாவின் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அத்வானியும் சென்றார். அங்கிருந்த பதிவுக் குறிப்பேட்டில், விருந்தினரான அத்வானி, தனது கருத்துகளைப் பதிவு செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொண்டதால் பதிவு செய்தார்.
பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா, "நான் உருவாக்குகிற பாகிஸ்தானில் இந்துக்கள் ஆலயங்களுக்குச் செல்லலாம். இஸ்லாமியர்கள் தொழுகைக்குச் செல்லலாம். சீக்கியர்கள் குருத்வாராக்களுக்குச் செல்லலாம். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுவதற்கு எவ்விதத் தடையும் இருக்காது' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருப்பதையே ஜின்னா விரும்பினார் எனத் தெரிகிறது' என்றுதான் பதிவு செய்திருக்கிறார்.

"ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று அத்வானி கூறினார்' என்று கூறுவதற்கு இதில் எங்கே இடமிருக்கிறது. எனவே அத்வானி, ஜின்னாவைப் புகழ்ந்தார் என்று கூறுவது உண்மையல்ல. மாறாக, மத வேறுபாடு இல்லாமல் பாகிஸ்தான் இருக்க வேண்டும் என்று ஜின்னாவே சொல்லியிருந்தும் பாகிஸ்தான் மதச்சார்பு உள்ள நாடாக இருக்கிறதே என்று பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருக்கிறார்.

இதே கருத்தைத்தான் மறுநாள், பாகிஸ்தானில் வேறொரு கூட்டத்திலும் பேசியிருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக அத்வானி, ஜின்னாவை மதச்சார்பற்றவர் எனப் புகழ்ந்துவிட்டார் என ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிச் செய்தி வெளியிட, உண்மை என்னவென்று தெரியாமல் பலர் கண்டனங்கள் தெரிவிக்க அதன்பிறகு நடந்த சம்பவங்களை நாடே அறியும்.

ஏனைய அரசியல் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா வேறுபட்டு, நல்ல தன்மை உள்ளவர்கள் தலைவர்களாகவும் தொண்டர்களாகவும் இருப்பதை நடுநிலையாளர்களேகூட ஒப்புக்கொள்வார்கள். இதற்குக் காரணமே ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடித்தளம்தான்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எப்படியோ, தி.மு.க.வுக்கு ஈ.வெ.ரா. எப்படியோ அதுபோலத்தான் பாரதிய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம். ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழிகாட்டுதல், பாரதிய ஜனதாவுக்கு எப்போதும் பெருமை தரும்; உயர்வையும் தரும்.

சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பாரதிய ஜனதா குறித்து திட்டமிட்ட ரீதியில் ஏனைய அரசியல் கட்சிகள் செய்கின்ற தவறான பிரசாரத்தை சிலர் நம்பிவிடுகிறார்கள்.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் உண்மைத் தன்மை என்னவென்று அவர்கள் புரியாமல் இருக்கிறார்கள்.

வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் நடந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் சமமாகவே நடத்தப்பட்டார்கள்.

அமைப்பு ரீதியில் அத்வானி தொடர்ந்து நீடிப்பாரா, இல்லையா என்று சிலர் தாங்களாகவே கேள்வியையும் எழுப்பி, பதிலையும் சொல்லிக் கொள்கிறார்கள். அத்வானி எந்தப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்தான் பாரதிய ஜனதாவின் வழிகாட்டி.

பாரதிய ஜனதா ஆட்சி புரிகிற மாநிலங்களில் குறிப்பாக குஜராத்தில் மக்கள் நலத் திட்டங்கள் ஏராளமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக ஏனைய மாநிலங்களைவிட தனிமனித வருமானம் அம்மாநிலத்தில் கூடியிருக்கிறது. மத வேறுபாடு இல்லாமல் எல்லோரது பசியையும் போக்க வேண்டும்; எல்லோரையும் வளம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்கேற்பவே பாரதிய ஜனதாவின் ஆட்சி பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

பாரதிய ஜனதா மக்கள் முன்வைக்கும் வாதம் மதவாதம் அல்ல. அது தேசிய வாதம். சிலர் இதை வகுப்பு வாதம் என்று முத்திரை குத்தப் பார்க்கிறார்கள்.
காலத்தோடு பொருந்த வேண்டும் என்பதற்காக தங்களது கொள்கைகளை மாற்றிக் கொண்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்குக் கற்பித்திருக்கும் உண்மை. மாறாக, எந்த லட்சியத்துக்காக அரசியல் களத்திற்குள் நுழைந்தோமோ, அந்த லட்சியத்தில் இருந்து மாறாமல், அந்த லட்சியத்தை நோக்கி மக்களை ஈர்த்து, பாரத தேசத்தை உலக அரங்குக்கு இட்டுச் செல்வதுதான் பாரதிய ஜனதாவின் கொள்கை.
பாரதிய ஜனதா கெட்டி தட்டிப் போய்விட்ட இயக்கம் அல்ல. மாறாக இந்த மண்ணில் வேர்விட்டு வளர்ந்திருக்கும் ஆல விருக்ஷம்.

Monday, September 14, 2009

அரசு உருவாக்கும் புதிய இனம்

சமஸ்

உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ. 26,352; பேராசிரியர்களுக்கு ரூ. 62,085 மாத ஊதியமாகக் கிடைக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மிகக் கெüரவமான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. ஒரு சமூகத்தில் கல்வியாளர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை, அந்தச் சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அந்த வகையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.


இந்த அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ. 557.49 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏற்கெனவே, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 30 சத ஊதிய உயர்வு காரணமாக ஆண்டுக்கு ரூ. 5,155.79 கோடி தொடர் செலவினத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழக அரசு மட்டுமல்ல; மத்திய அரசும் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுமே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுச் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளன. மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது என்பது நியாயமானது மட்டுமல்ல; அரசின் கடமையும்கூட.

அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் தவிர்த்து, நாட்டின் பெருவாரியான மக்களுக்கு இந்தச் செய்தி ஏன் உவப்பானதாக இல்லை என்பதை அரசு யோசிக்க வேண்டும். ஏனெனில், இதுவும் அரசின் கடமைதான்.

நம் நாட்டின் ஆகப் பெரும்பான்மையினர் - அதாவது, 93 சதவீதத்தினர் அமைப்புசாரா வேலைகளிலேயே இருக்கின்றனர். நாடு சுதந்திரமடைந்து இந்த 62 ஆண்டுகளில் இவர்களுடைய பணிப் பாதுகாப்புக்கு, பணி நலனுக்கு அரசு செய்தது என்ன என்று கேட்டால், சட்டப் புத்தகங்களிலுள்ள விதிகளைத் தவிர்த்து அரசால் உருப்படியான பதில்களைத் தர முடியாது.

தேசத்தின் உயிர்நாடியான விவசாயிகளின் கூலிப் பிரச்னையில் அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? கடந்த பல ஆண்டுகளாகவே குறைந்தபட்சக் கூலியை ரூ. 150-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு என்ன செய்கிறது? இப்போதுதான் ரூ. 100-ஆக நிர்ணயிப்பது தொடர்பாகவே யோசிக்கத் தொடங்கியுள்ளது.

சரி, நெசவாளிகளின் நிலை எப்படி இருக்கிறது? 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையைவிட இப்போது இன்னும் மோசம். ஒரு நெசவாளி - குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு நாள் முழுவதும் உழைத்தால்கூட மாதம் ரூ. 5,000 ஈட்டுவது கடினம். நெசவாளிகளுக்கு உதவும் "சிகிடா'க்கள் ரூ. 2,000 ஈட்டினால், அது அதிர்ஷ்டம்.

இவர், அவர் என்றில்லாமல் நாட்டின் பெரும்பான்மைத் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை இதுதான். இவர்களுடைய நலன்களில் அரசு எடுத்துக்கொள்ளும் அக்கறை என்ன?

முன்னெப்போதுடனும் ஒப்பிட முடியாத இப்போதைய மோசமான சூழலையே எடுத்துக்கொள்வோம். விலைவாசி கடுமையான உச்சத்திலிருக்கும் இன்றைய சூழலில்தான் இந்திய முதலாளிகள், உலகப் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு என்று "தீபாவளி' கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலனில் அரசு காட்டும் அக்கறை என்ன?

ஆக, அரசு என்ன நினைக்கிறது என்றால், அதிகாரத்தைத் தம்முடன் பகிர்ந்துகொள்ளும் சக பங்காளிகளின் நலன் மட்டுமே தன்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறது. எஞ்சியோருக்கு ரூ. 1-க்கு ஒரு கிலோ அரிசி, ரூ. 80 கூலி, 100 நாள் வேலை போதும் என்று நினைக்கிறது.

இந்தப் போக்கு அநீதியானது மட்டுமல்ல; ஆபத்தானதுமாகும். அரசின் மனோபாவம் இந்தியாவில் அரசு ஊழியர்களை மட்டும் சகல கடவுளர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக மாற்றி வருகிறது.

சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக் கூடிய ஒரு புதிய இனமாக அரசு ஊழியர்களை மாற்றி வருகிறது.

இந்த உண்மையை எல்லோரையும்விட சாமர்த்தியசாலிகள் - குறிப்பாக - அரசு ஊழியர்கள் சீக்கிரம் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பாருங்கள். ஓர் அரசு ஊழியர் அவர் ஆணோ, பெண்ணோ திருமண வயதில் இருந்தால், அவர் தேடும் இணையை அரசு ஊழியராகவே தேடுகிறார். அரசுப் பணியில் இருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தேடும் வரன்களும் அரசு ஊழியர்கள்தான்.

இப்படியாக ஓர் இனம் உருவாகிறது; சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக்கூடிய ஒரு புதிய இனம். சமூகத்தின் ஏனைய தரப்பினர், அரசையும் அது உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் புதிய இனத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கே போய் முடியும்?

இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம்..

உ . ரா. வரதராசன்

இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய ஒரு பரபரப்பான விவாதம் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்றது.


தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பரபரப்பு சற்றே ஓய்ந்தாலும், இப்பிரச்னை அவ்வப்போது எழுப்பப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுகையில் இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து நாடு வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டின் நிதித்துறைக் கொள்கை, தனி நபர்களின் அடிப்படைச் சொத்துரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, வங்கிக் கணக்குகள் பரம ரகசியமாகப் பராமரிக்கப்படுவதற்கான சட்டத்தையே இயற்றியுள்ளது. இந்த ரகசியப் பாதுகாப்புக்கான சட்டம் 1934-ம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது என்றாலும் அந்த நாட்டு அரசாங்கம் நீண்ட காலமாகவே இது தொடர்பான ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளது. அதன்படி வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.

வரி ஏய்ப்பு ஒரு நிர்வாக நடைமுறைத்தவறு என்று மட்டுமே பார்க்கப்படும். வரி மோசடி என்பதைத்தான் அந்த நாடு சற்று கடுமையாகக் கையாளும். இந்த நடைமுறை சுவிஸ் நாடு சுதந்திரமடைந்த 13-ம் நூற்றாண்டில் இருந்தே அங்கு அமலில் இருந்து வந்துள்ளது.

இது ஏதோ சுவிஸ் நாட்டில் மட்டும் நிலவுகிற நடைமுறை என்று கருதிவிடக் கூடாது. சர்வதேச ரீதியில் இவ்வாறு வங்கிக் கணக்குகளை ரகசியமாகப் பேணி வரி ஏய்ப்போருக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை எழுபதுக்கும் மேல் இருக்கும்.

இத்தகைய ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கறுப்புப்பணமே என்பதை விளக்கத் தேவையில்லை. இது அந்தக் கறுப்புப்பணச் சொந்தக்காரர்களுக்கு ஒரு வசதியான ஏற்பாடு. ஆனால் இதனால் சுவிஸ் நாட்டுக்கு என்ன பயன்? சொந்த நாட்டுக்கு வெளியே எடுத்துச்சென்று பாதுகாக்கப்படும் சர்வதேச அளவிலான தனியார் சொத்துகளில், 30 சதவிகிதம் சுவிஸ் நாட்டின் வங்கிகளில் அடைக்கலம் புகுந்துள்ளன.

2008-ல் இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்கள். அந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை வைத்துக் கணக்கிட்டால், இது 15 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த ரகசியக்கணக்கில் பாதுகாக்கப்படும் பணம், வாடிக்கையாளரின் மறைவுக்குப் பின்னால், அவரது வாரிசுகளுக்கே கூடத் தெரியாமல் போய் விடுவதால், கோரிக்கையற்றுப் போய், அந்த வங்கிகளுக்கே சொந்தமாகி விடுவதும் உண்டு.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை, இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் கறுப்புப்பணத்தில், இந்தியர்களுக்குச் சொந்தமான பணம் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி டாலர்கள். இந்திய ரூபாய்க் கணக்கில் இதன் மதிப்பு சுமார் 75 லட்சம் கோடிகள்! இந்த வகையில் சுவிஸ் நாட்டில் பணத்தைப் பதுக்கிவைக்கும் வெளிநாட்டவர்களின் சொத்து மதிப்பில் இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது. எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் இது!

இப்படிக் கறுப்புப்பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திக் கொண்டு போய் ரகசியமாகப் பதுக்கி வைப்பது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. வளரும் நாடுகளிலிருந்து வெளியேறும் இந்தப் பதுக்கல் பணம் ஆண்டொன்றுக்கு சுமார் 10 லட்சம் கோடி டாலர் என்றால் இதில் இந்தியாவின் பங்கு 2200 முதல் 2700 கோடி டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

160 வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தை இந்த வகையில் எட்டிப்பிடித்துள்ளது. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல. சுதந்திர இந்தியாவில் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிகழ்வு. இப்போது தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிற சூழலில், இப்படி இந்தியாவிலிருந்து புலம்பெயரும் கறுப்புப்பணம் பந்தயக் குதிரைப்பாய்ச்சல் போலப் பறக்கிறது. அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு முதலீட்டுக்காக என்று இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் 2004-05-ம் ஆண்டில் 96 லட்சம் டாலராக இருந்தது.

2006 - 2007-ல் 44 கோடி டாலராக உயர்ந்தது. இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீட்டில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகளாக இந்தியாவிலிருந்து அன்னியச் செலாவணி வெளியேறுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கும் பிடிபடாத வகையில் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் கறுப்புப்பணத்தின் பரிமாணம் என்ன என்பதை சுவிஸ் வங்கிகள்தான் அறியும்.

இந்தப் பிரச்னை இவ்வளவு வெளிச்சத்துக்கு வந்து விவாதப் பொருளாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, 2008 செப்டம்பரில் தொடங்கி வெடித்துள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடி. இது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நிதித்துறையையே சுனாமிப் பேரழிவு அலையாகத் தாக்கியுள்ளதால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய பல நாடுகளும், இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களில் குவிந்துள்ள தங்கள் நாட்டினரின் கணக்குகளைத் தேட ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா, 34 நாடுகளைக் குறி வைத்து வரி ஏய்ப்புத் தடுப்புக்கான சட்டம் ஒன்றையே நிறைவேற்ற முற்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தை அந்த நாட்டின் வங்கி ரகசியப் பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடும் நிர்பந்தம் அளித்து வருகிறது.

அமெரிக்கா சுவிஸ் நாட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களான 52,000 அமெரிக்கக் குடிமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. யுபிஎஸ் என்ற சுவிஸ் நாட்டு வங்கிக்கு எதிராக அமெரிக்க நாட்டின் சட்ட அமைச்சகம் இதற்காக ஒரு வழக்கையே தொடுத்தது. இந்த ஆண்டுத் துவக்கத்தில், அமெரிக்கப் பணமுதலைகள் 2000 கோடி டாலர்களை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்து, வரி ஏய்ப்புச் செய்துள்ள விவகாரத்தில், இந்த யுபிஎஸ் வங்கி 78 கோடி டாலரை அபராதமாகச் செலுத்தியது.

இப்போது ஆகஸ்ட் 13 அன்று பெருந்தொகைகளைப் பதுக்கி வைத்துள்ள 5000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தருவதற்கு இதே யுபிஎஸ் வங்கி, அமெரிக்க சட்ட அமைச்சகத்துடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் சுவிஸ் நாட்டு வங்கித்துறையின் எஃகுக் கோட்டைக்குள் எட்டிப் பார்ப்பதற்கு ஒரு சிறிய துவாரம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் அமெரிக்காவையோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளையோ பின்பற்றி இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களுக்குள் நுழைந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான வங்கிக்கணக்கு விவரங்களை வெளிக்கொணருவது இந்திய அரசாங்கத்துக்கு அவ்வளவு சுலபமான வேலையல்ல.

சுவிஸ் நாட்டு அரசாங்கம் "இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடந்த மாதம் தகவல் தெரிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒருவேளை சுவிஸ் நாடு தகவல்களை இந்தியாவுக்குத் தந்தாலும் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

சுவிஸ் நாட்டிலோ, இதர வரி ஏய்ப்பு சொர்க்கங்களிலோ பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் என்பது, இந்தியப் பொருளாதாரத்தில் புழங்கும் ஒட்டுமொத்த கறுப்புப்பணத்தின் ஒரு சிறு பகுதியே. உள்நாட்டிலேயே நிழல் பொருளாதாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு, புலம் பெயர்ந்த கறுப்புப்பணத்தை விடப் பல மடங்காகும். இதை மதிப்பிடுவதற்கான முயற்சியைக்கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

இது தொடர்பான மதிப்பீடு ஒன்றை பொது நிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசியக்கழகம் மேற்கொண்டது 1985-ல் தான். அப்போது, 1983 - 84-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் ரூ. 31,584 கோடி முதல் ரூ. 36,786 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு, சர்வதேச அளவிலான ஊழல் விவகாரங்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் வெடித்துள்ள காலச்சூழலில், கறுப்புப்பணத்தின் இன்றைய பரிமாணத்தைக் கணக்கிடுவதற்கான எந்த ஆய்வுக்கும், கடந்த 25 ஆண்டுகளில் மத்திய அரசு உத்தரவிடவில்லை என்பது தற்செயலான நிகழ்வில்லையே.

ஏற்கெனவே சேமித்துப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதும், அதன் சொந்தக்காரர்களை சட்டத்தின் கீழ் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுவதும் முக்கியமானதுதான். ஆனால் அதைப்போலவே முக்கியத்துவம் பெற்றது, கறுப்புப்பணத்தைச் சேமிக்க விடாமலும், அதை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்காமலும் தடுப்பதற்கான நடவடிக்கை.

இந்தத் திசையில் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்கக்கூட மறுத்து வருவது கவலை தரும் போக்காகும். தாராளமயப் பொருளாதாரத்தின் கீழ் வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வந்துள்ள வரிச்சலுகைகளும், வரி ஏய்ப்புக்கு வழியைத் திறந்து விடும் சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளும், வழக்குகளின் பெயரால் முடக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி பாக்கிகளும், இன்ன பிறவும்தான் கறுப்புப் பணக் குவியலுக்கான ஊற்றுக்கண். இதை அடைப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.

மொரீஷியஸ் உள்ளிட்ட 76 நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்புத் தடுப்பு ஒப்பந்தங்கள், வரி ஏய்ப்புக்கும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கும் போடப்பட்டுள்ள ராஜ பாட்டைகள். இந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை கூடத் தொடங்கப்படவில்லை.

நம் நாட்டுக்குள் நுழைகின்ற அன்னிய நிதி முதலீடுகளில் ஒரு பெரும் பகுதி, உரிமையாளர் யார் என்று அறிவிக்கப்படாத அனாமதேயப் பங்கேற்புப் பத்திரங்கள் வழியாகத்தான் வருகின்றன. இந்தப் பங்கேற்புப் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரே பரிந்துரைத்தும்கூட, அது மத்திய அரசால் ஏற்கப்படவுமில்லை; தடை விதிப்பதற்கான முயற்சியும் இல்லை. நாட்டின் மூலதனச் சந்தையில் - குறிப்பாகப் பங்கு வர்த்தகத்தில் - ஈடுபடுத்தப்பட்டு, சூதாட்ட பேரங்களில் பெறப்படும் கொழுத்த லாபங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளதும் தொடர்கிறது. இதுவும் கறுப்புப்பணப் பெருக்கத்திற்கான இன்னொரு வாய்ப்பு வாசல். இந்த லாபங்களை வரிவிதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு செவிமடுப்பதேயில்லை.

எனவே, சுவிஸ் வங்கிகளின் எஃகுக் கோட்டை பாதுகாப்பில் பதுக்கப்பட்டுள்ள நம் நாட்டவர்களின் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டு, வெளிக்கொணரப்படும் என்பது இப்போதைக்கு வெறும் பேச்சு ஆரவாரம் மட்டுமே!

ஊழல்: கிளைகளை வெட்டினால் போதுமா?

ப.செ. சங்கரநாராயணன்
தேர்தல்கள் மூலம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசில் ஆள்வோருக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து வருபவை ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் என்றால் அது மிகையல்ல.

ஊழல்வாதிகள் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்க இயலாத, பலகீனமான தலைமையை நாடு பெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது.

இந்திய ஜனநாயகத்தை செல்லரிக்க வைத்துக் கொண்டிருப்பதே ஊழல் அரசியல்வாதிகள்தான்.

வலுவற்ற சட்டங்களால் 94 சதவீதம் பேர், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி விடுவதாகக் கூறப்படுகிறது.

சட்டம் என்பது சாமானியர்களைத் தண்டிக்க மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு.

"பொறியில் மாட்டிக் கொண்ட எலி, தப்பிக்கும் வாய்ப்பை கடைசிவரை நழுவ விடாது...'

அதேபோல, லட்சக்கணக்கில் ஊழல்செய்து மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள், நெஞ்சுவலியை (?) காரணம் காட்டி ஜாமீனில் வெளிவருகின்றனர்.

அதன்பிறகு, அவர்களது முதல் பணி, ஊழல் வழக்கிலிருந்து விடுபட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை சாத்தியக் கூறுகளையும் கையாள்வது.

பதவிக்காலத்தில் அரசியல்வாதிகளுக்குச் செல்லப் பிள்ளைகளாக நடந்துகொண்டு, முறைகேடுகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், ஊழல் வழக்குகளில் சிக்கினாலும், சிறிது காலத்தில், அதிலிருந்து லாவகமாக வெளிவந்து, மீண்டும் பதவிகளைப் பெற்றுவிடுவதை நடுநிலையாளர்கள் கவலையோடு பார்க்கின்றனர்.

உதாரணமாக மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளைச் சொல்லலாம்.

ஆறுகளில் 3 அடிக்கு கீழே, மணல் அள்ளக்கூடாது என்பது விதி. அதனை வலியுறுத்தி, குவாரிகளில் ஒப்புக்குப் பதாகை வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், குவாரிகளில் 20 அடிக்கும் குறையாமல் மணல் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டால், இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதால் எத்தனை அடிகள் அள்ளுகின்றனர் என்பதைக் கணக்கிட இயலவில்லை எனச் சாதாரணமாக பதில் அளிக்கின்றனராம்.

3 அடி ஆழத்துக்கும், 20 அடி ஆழத்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

தற்போது ஊழல் நோய் முற்றி, அனைத்துத் துறைகளிலும் புரையோடி விட்டதால், 50 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசுகள், திடீரென விழித்துக் கொண்டு ஊழலை ஒழித்து, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கப் போவதாக அறிவித்து, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தன.
ஆனால், அச் சட்டத்தின் பல ஷரத்துகள் சாமானிய மனிதர்களைச் சென்றடையும் வகையில், முழுமையாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.
ஊழலுக்கு எதிரான சட்டங்கள் பலமாக இல்லாததே, அதில் ஊறித் திளைப்போருக்கு சாதகமாக உள்ளது என்கிற அடிப்படை உண்மை கூடவா அரசுக்குத் தெரியாமல் போனது!

முறைகேடுகளுக்குத் துணைபோகாத, சிபாரிசுகளை ஏற்காத நேர்மையான அதிகாரிகளின் துறைகளை மாற்றிப் பந்தாடுவதும், லாயக்கற்றவர்களை, தமக்கு வேண்டியவர்களை உயர் பதவிகளில் அமரவைத்து, காரியம் சாதித்துக் கொள்வதும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது.

திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறெங்கும் பதுக்கப்படாமல், முழுமையாகச் செலவிட்டாலே போதும் நாடு வல்லரசாகும்... சுவிஸ் வங்கிகள் திவாலாகும்!

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா வெகுவேகமாக பின்னேறிச் செல்வதற்கு முக்கியக் காரணம், கூட்டுவைத்துக் கொள்ளை அடிக்கும் மனோபாவம்தான்.
தேர்தலின்போது அணிமாறும் அரசியல் கூட்டணியை விட, இக்கூட்டணி ஆபத்தானது.

சில நேர்மையான அலுவலர்களையும் டிரான்ஸ்பர், டம்மி போஸ்ட் என இக்கூட்டணி நோகடிக்கச் செய்கிறது.

ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியா தற்போது 74-வது இடத்தில் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
ஊழலின் வேர்களை அழிக்காமல், கிளைகளை மட்டும் வெட்டிக் கொண்டே இருந்தால், இப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

தேசிய முதியோர் அவமானத் திட்டம்!

ச.ம.ஸ்டாலின்

தான் கனவு காணும் இந்தியா குறித்து காந்தி அடிகள் இப்படிச் சொன்னார்: ""நாட்டின் கடைக்கோடி ஏழை இந்நாட்டை தன்னுடைய நாடு என்று கருத வேண்டும்; அப்படிப்பட்ட தேசமாக இந்தியா திகழ வேண்டும்.''

இந்திய அரசியல்வாதிகளுக்கும் மகாத்மா காந்தியின் கனவுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனாலும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் 45.58 கோடிப் பேர் வாழும் ஒரு தேசத்தில் ஏழைகளைத் தவிர்த்த அரசியல் சாத்தியமானதில்லை என்பதாலேயே இந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்காக ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. என்ன பயன்? அரசியல்வாதிகள் அசைந்துகொடுத்தாலும் அதிகார வர்க்கத்தின் சிகப்பு நாடாக்களில் சிக்கிக் கழுத்தறுபடுகின்றன அரசுத் திட்டங்கள்.

நாட்டின் மூத்தகுடிமக்களுக்கு முன்னுரிமை, சலுகைகளை அளிப்பது உலகெங்கும் உள்ள ஒரு நடைமுறை. மக்கள் நல அரசுகளுக்கு அது ஒரு கடப்பாடும்கூட.

இந்தியாவில் மூத்தகுடிமக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவையும்கூட படித்த - ஓரளவுக்கேனும் வசதியுடையவர்கள் அடையக்கூடியவையாகவே இருக்கின்றன.

இந்நிலையில், வறுமை ஒழிப்புத் திட்டங்களில் ஒன்றாக வசதியற்ற மூத்தகுடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம். சொத்துகள் ஏதுமற்ற, வருமானத்துக்கு வழியில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ரூ. 400 ஓய்வூதியம் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.

மாதம் ரூ. 400-ஐ மட்டுமே வருமானமாகக் கொண்டு இந்தக் காலத்தில் ஒருவர் - அதுவும் ஒரு முதியவர் வாழ்க்கையைக் கடத்திவிட முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனாலும், நம்முடைய அரசு இந்நாட்டு ஏழைகளுக்கென்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி வைத்திருக்கிறது. ரேஷன் கடைகளில் ரூ. 1 அல்லது ரூ. 2 விலையில் ஒரு கிலோ அரிசி, மலிவு விலை மண்ணெண்ணெய், மளிகைப் பொருள்கள், பண்டிகையையொட்டியோ, அரசியல் தலைவர்கள் பிறந்த நாளையொட்டியோ ஆண்டுக்கொரு முறை வழங்கப்படும் இலவச வேஷ்டி - சேலை, நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனை என்று அந்த வாழ்க்கை முறை விதிக்கப்பட்டவர்களுக்கு இன்றைக்கும் ரூ. 400 குறிப்பிடத்தக்க ஒரு தொகையாகவே இருக்கிறது.

தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்திலுள்ள ஒரு நல்ல விஷயம், ஓர் ஊரில் அல்லது ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் இத்தனை பேரைத்தான் இத்திட்டத்தில் சேர்க்கலாம் என்ற வரையறை ஏதும் கிடையாது என்பதாகும். ஆகையால், வருமானத்துக்கு வாய்ப்பற்ற 65 வயதைக் கடந்த இந்நாட்டு மூத்தகுடிமக்கள் அனைவருக்குமே இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கலாம்.

ஆனால், இத்திட்டத்தில் சேர அதிகார வர்க்கம் உருவாக்கியுள்ள நடைமுறை தன்மானமுள்ள எவரையும் தலைகுனியவைப்பதாக அமைந்திருக்கிறது.

ஒரு முதியவர் இத்திட்டத்தில் சேர விரும்பினால், அதற்கு விண்ணப்பத்தில் கீழ்காணும் உறுதிகளை அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்.

""ஐயா, எனக்கு 65 வயதாகிவிட்டது. நான் ஓர் அனாதை. எனக்குச் சொத்துகள் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. நான் பிச்சை எடுக்கவில்லை. ஆனால், அதரவற்ற நான், இன்னார் வீட்டுத் திண்ணையில் தங்கி அருகிலிருப்போர் தரும் உணவை உண்டு வாழ்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவித்தொகை அளியுங்கள்.''

அதாவது, ""நான் தெருவில் அமர்ந்து பிச்சை எடுக்கவில்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பிச்சையாகத் தரப்படும் உணவை உண்டு வாழ்கிறேன்'' என்று சொல்லாமல் சொல்லச் சொல்கிறார்கள் அதிகாரிகள். தொடர்ந்து, விண்ணப்பிப்பவரின் இந்த வாக்கியங்களையே வருவாய்த் துறை அலுவலர்கள் சான்றாகத் தருவார்கள். அதன் பின்னரே உதவித்தொகை. முரண்பாடுகள் மிக்க, மிக அபத்தமான ஒரு நடைமுறை இது. ஓர் அரசாங்கம் தன்னிடம் உதவி கேட்டு வரும் தன்னுடைய மூத்தகுடிமக்களை இதற்கு மேல் இழிவுபடுத்த முடியுமா என்று தெரியவில்லை.

உண்மையில் இத்திட்டத்தில் சேருவதற்கு அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு வேலையே இல்லை. ஆனால், பயனாளி வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பயன்படுத்தி இத்தகைய அவலத்தை அரங்கேற்றி வருகிறார்கள் அதிகாரிகள். இந்தியாவைப் பொறுத்த அளவில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பான்மையினர் விவசாயக் கூலித் தொழிலாளிகள்தான். நம் நாட்டில் பிச்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையினரும் இவர்களே. நாட்டுக்கே உணவிட்டவர்கள் ஒரு வேளை சோற்றுக்குக் கையேந்தும் நிலை ஏற்பட்டது நாட்டை வழிநடத்துபவர்கள் செய்யும் தவறுகளால் ஏற்பட்ட விளைவு. இந்தத் தவறுகளில் அதிகார வர்க்கத்துக்கும் பெரும் பங்குண்டு.

குறைந்தபட்சம் இந்தப் பாவத்துக்கான பரிகாரமாகவேனும் அதிகாரிகள் இத்தகைய மோசமான நடைமுறைகளைக் கைவிட வேண்டும். முதியோரை மதிக்காத வீடும் நாடும் என்னவாகும் என்று வரலாற்றையோ, புராணத்தையோ படித்தாவது தெரிந்துகொள்ள வேண்டும்!

காத்திருக்கும் ஆபத்து...

கே.எஸ். இராதாகிருஷ்ணன்  --தினமணி.

அப்பப்பா என்ன வெயில்? தாங்க முடியவில்லையே! மலை வாசஸ்தலங்களிலும் வெயிலின் சூடு தாங்க முடியவில்லை என்ற பேச்சு எல்லா இடங்களிலும் நமக்குக் கேட்கிறது. பூமிப்பந்து ஆபத்தான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இப்பூவுலகில் இதனால் மக்கள்தொகையே குறைந்துவிடும் என்கிற அபாய அறிகுறிகளும் தென்படுகின்றன.

2040-ம் ஆண்டில் ஆர்டிக் போன்ற பனிப் பாறைகள் மட்டுமல்லாமல் இமயத்தில் உள்ள பனிப்பாறைகளும் உருகி, இல்லாமல் போய்விடும் என்ற ஆராய்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளான பூமத்திய ரேகைக்குத் தென் பகுதியில் உள்ள நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகளில் உள்ள மக்கள் இந்தப் புவி வெப்பத்தால் பெரும் அபாயத்திற்கு உள்ளாக இருக்கின்றனர். இந்தக் கொடிய இயற்கைச் சூழலை மாற்ற உலக சமுதாயம் உடனே நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறான பாதுகாப்பற்ற சுற்றுச்சூழலுக்குக் காரணம் என்ன என்று பார்த்தால் மக்காத - அழியாத கழிவுகளை பூமியில் சேர்ப்பது, அணு சோதனை, அணுக்கழிவுகளால் ஏற்படும் வெப்பமும் அதனுடைய விஞ்ஞான மாற்றங்கள் போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணிகளாக அமைந்துள்ளன. கார்பன் டை ஆக்சைடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்படுவதால் சூரிய வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டிய ஓசோன் படலத்தில் பல இடங்களில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஓட்டைகளுக்குக் காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் ஓடும் மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு ஆகும். இன்றைக்கு உள்ள வெப்பத்தைவிட இன்னும் 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் உலகம் பெரும் கேட்டிற்கு உள்ளாகும். மானுடம் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இந்த ஆபத்துகள் நமக்கு எதிராக நாமே உருவாக்கியவை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

இந்த இயற்கைச் சூழல் குறித்து உலக அளவில் பேசப்பட்டும், நடவடிக்கைகள் வேண்டும் என்று முயற்சிகள் எடுத்தும் இதுவரை அவையெல்லாம் முயற்சிகளாகவே தொடர்கின்றனவே தவிர செயல்பாட்டில் இல்லை. மேலை நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத உற்பத்தி, போர்க்கருவிகள் போன்றவற்றால் இந்தத் தேவையற்ற ஆபத்தான இயற்கைச் சூழல் ஏற்பட்டுள்ளது. இச்சூழல் குறித்து 10-15 ஆண்டுகளாக உலக அளவில் உச்சி மாநாடுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன.

ஆர்ஜென்டினா தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மாநாட்டில் பசுமைப் பாதுகாப்புப் பற்றியும், உலகத்தில் வெப்பத்தாக்குதல் பற்றியும் முதன்முதலில் பேசப்பட்டன. தொடர்ந்து க்யூட்டோ மாநாட்டில் அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் தலைமையில் நடந்த மாநாட்டில் இதுகுறித்து பேசியபோது, அமெரிக்கா தெளிவான விளக்கங்களை அளிக்காமல் கருத்துச் சொல்வதையே தவிர்த்துவிட்டது. அப்போது மற்ற நாடுகள் இதைக் கண்டிக்கவும் செய்தன.

ஒபாமா தேர்தலில் போட்டியிட்டபொழுது புவி வெப்பத்தைக் குறைப்பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பின் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவையில் இதுகுறித்து விவாதித்து உரிய திட்டங்களும், சட்டங்களும் வரையறுக்கப்பட்டன. கடந்த ஜூன் 8-ல் இத்தாலியில் நடைபெற்ற ஜி-8 நாடுகள் மாநாட்டில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா, சீனா, பிரேசில், தென் அமெரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 17 நாடுகள் கூடி புவி வெப்பத்தைத் தணிப்பது குறித்து விவாதித்து செயல் திட்டங்களை வரையறுத்தன.

கடந்த தொழிற்புரட்சி காலத்துக்கு முன்னால் இருந்த வெப்பநிலையைக் காட்டிலும் சற்று கூடுதலாகப் புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸýக்குக் குறைக்க நடவடிக்கைகளில் இறங்குவது என்பதில் அனைவரும் கருத்து ஒற்றுமை தெரிவிக்கிறோம். ஆனால், இது எப்போது சாத்தியமாகும் என்கிற காலவரையறையை நிர்ணயிப்பதில் பல குழப்பங்கள் எழுந்துள்ளன. 2050-ம் ஆண்டு என்ற காலவரையறை சரியாக வராது என்றும் குறைந்தபட்சம் 2030-க்குள் இந்த நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஓரளவு வெப்பத்திலிருந்து பூமியைக் காக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வளர்ந்த நாடுகளால்தான் இந்தக் கேடுகள் யாவும் ஏற்பட்டன. ஜி-8 நாடுகள்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஈடுபட வேண்டும். பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மாசு நிறைந்த வாயுக்களைக் கட்டுப்படுத்துவது பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டும். 4.50 டன் அளவுக்கு ஒரு தனி மனிதன் மூலம் இந்த மாசு வாயுக்கள் வெளியேறுகின்றன. இது எதிர்காலத்தில் கூடுதலாகிவிடும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, சீனா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளிலிருந்து வெளியேறும் இந்த மாசு வாயுக்களைக் குறைத்தாலே ஓரளவு பிரச்னையை எதிர்கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் இந்தப் பிரச்னையைத் தட்டிக் கழிக்கின்றன. இந்தியா போன்ற முன்னேறும் நாடுகள் மீது வளர்ந்த நாடுகள் இதுகுறித்து தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. வளரும் நாடுகளுக்கு இடையே பன்னாட்டு ஒப்பந்தங்களில் வளர்ந்த நாடுகள் விதிக்கும் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தப் பிரச்னைக்குத் தாங்கள் முயற்சி எதுவும் மேற்கொள்ள மறுக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால் சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற நிலைதான்.

அமெரிக்கா 93 சதவிகிதம் தன்னுடைய இந்த மாசுக்களைக் குறைத்தால் போதும். அமெரிக்கா இந்தியாவைக் காட்டிலும் 20 மடங்குக்கு அதிகமாக இந்த விஷ மாசுபடுகின்ற வாயுக்களை வெளியேற்றுகிறது. அப்படி இருக்கும்போது, இந்தியா மற்றும் வளரும் நாடுகள் 2050-க்குள் 80 சதவீதம் இந்த மாசு வாயுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் உத்தரவிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

இப்படிக் கட்டுப்பாடுகள் விதிப்பதால் ஒருபுறம் வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது வளர்ச்சியில் பாதிப்பே இல்லாமல் தங்களைக் காத்துக் கொள்ளும். தான் மட்டும் தவறு செய்யலாம். மற்றவர்கள் தவறைக் குறைக்க வேண்டும் என்று வல்லான் வகுத்த விதிபோல் அமெரிக்காவும் ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளும் இந்தப் புவி வெப்பத்தைக் குறைக்க வேண்டி வளரும் நாடுகளின் விஷயத்தில் நடந்து கொள்வதை வன்மையாகக் கண்டிக்காமல் இருக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் 2050-க்குள் இதுகுறித்து கால நிர்ணயம் செய்யப்பட்டு இடைக்காலத்தில் இலக்குகள், நடவடிக்கைகள் என்ன என்பது ஜி-8 மாநாட்டில் குறிப்பிடாதது பெரிய சறுக்கல். இதை ஐ.நா. மன்றமும் வலியுறுத்தி உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை வரையறுப்பதற்கு எந்த ஆண்டை அடிப்படையாகக் கொள்வது என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. க்யூட்டோ மாநாடு 1990 என்று அறிவித்தது.

இந்த அடிப்படையை அமெரிக்கா 2005-க்கு மாற்றிவிட்டது. அப்படியானால் 2005-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டால் முடிவு செய்யப்பட்ட இலக்கும், பணிகளும் 1990-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது மிகக் குறைந்த அளவுகோலாகிவிடும்.

இந்த நடவடிக்கைக்கு உரிய நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், சர்வதேசச் சட்டங்களில் மாற்றம், அதற்கான ஒருங்கிணைப்புகள் குறித்து ஜி-8 மாநாட்டில் எந்தவிதமான திட்டங்களும் இல்லை. அதுமட்டுமல்லாமல், உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்போ ஒற்றுமையோ இல்லாத நிலையில் இதற்கான தீர்வு எப்படிக் கிடைக்கும் என்பதும் இன்றைய கேள்விக்குறி. புவி வெப்பத்தைத் தடுக்க உலக அளவில் உச்சி மாநாடுகள், விவாதங்கள், ஆய்வுகள் நடந்தவண்ணம் இருந்தாலும் இதுவரை ஆக்கபூர்வமான ஒரு முடிவை எட்டவில்லை என்பதும் வேதனையைத் தருகிறது.

இந்தக் கொடிய இயற்கைச் சூழலுக்குக் காரணமான, அதனால் லாபம் அடையும் நாடுகள் ஏதோ வேண்டா வெறுப்பாக அதனைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் போடப்பட்ட அணுகுண்டுகளால் ஏற்பட்ட கொடூர நிகழ்வுகளைவிட இந்த வெப்பம் தாக்குவதால் ஏற்பட இருக்கும் அழிவு அதிகம். அதுமட்டுமல்லாமல், மனிதகுலம் அழிந்து பூவுலகம் அழிவதற்குத்தான் தேவையற்ற விஞ்ஞானமா என்கிற கேள்வியும் எழுகிறது. புவியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க எரிமலைகள் வெடிக்கும். நில அதிர்வுகள், பூகம்பங்கள், சுனாமி, வறட்சி என்ற இயற்கைச் சீர்கேடுகள் ஏற்படும். இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லையே, ஏன்?

அணுசோதனை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்குத் தேவை என்பதை மறுக்கவில்லை. ஆனால் இன்று பன்னாட்டு அளவில் அணுசக்தி அழிவு சக்தியாக மட்டுமே பயன்படுகிறது என்பதுதானே உண்மை நிலை. விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்ட வசதிகள் அனைத்தும் பேரழிவுக்கு வழிகாட்டும் சக்திகளாக அல்லவா மாறிவிட்டிருக்கின்றன. இவ்வளவு கார்கள் தேவையா? மோட்டார் வாகனங்கள் வெளிப்படுத்தும் கழிவு வாயு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவில்லை. இன்று குளிர் சாதன அறைகள் (ஏ.சி), குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத வீடுகள் பணக்கார, மேல் மத்தியதர வகுப்பினர் மத்தியில் இல்லை. இதன் மூலம் வெளிப்படும் வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிக்கச் செய்கிறது என்பதை எத்தனைபேர் உணர்கிறார்கள்?

உலக சமாதானம், உலக ஒத்துழைப்பு என்று உதட்டளவு அக்கறையுடன் நின்றுவிடாமல், இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்தி இருக்கும் செயற்கை சவாலான பெரும் அபாயத்தைத் தீர்க்க உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் ஒரு குரலாகவும் ஓரினமாகவும் இணைவது காலத்தின் கட்டாயம்.

இதை உணர மறுத்தால், நமது வருங்காலச் சந்ததியினர் சந்திக்க நேரும் பயங்கரமான இயற்கைச் சீற்றங்களை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.

நமது முன்னோர்கள் நமக்கு நல்லதொரு உலகத்தை, நல்ல காற்று, நல்ல மண், நல்ல தண்ணீர் என்று வளமான உலகத்தை விட்டுச் சென்றனர். தொழிற்புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் நாம் பூமிப் பந்தை மாசுபடுத்தி ஓர் ஆபத்தான உலகை வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லப் போகிறோம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாமல் போனால், நாம் "மனிதன்' என்கிற பெயரில் அழைக்கப்படக்கூடத் தகுதி அற்றவர்கள். சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இதுவே. தாமதித்தால் ஆபத்து காத்திருக்கிறது...

இருப்பதெல்லாம் போதாதா?

ஒரு தெலுங்குப் பத்திரிகையில் சில நாள்களுக்கு முன்பு வெளியான ஒரு சிறிய தகவலைச் சொல்லிவிட்டு, விவரத்தைச் சொன்னால்தான், இங்கு சொல்லப்போகும் விஷயத்தின் தீவிரம் புரியும்: "ஹைதராபாதில் எமர்ஜென்ஸி கான்ட்ராசெப்ஷன் (ஈ.ஸி.) மாத்திரைகள் விற்பனை ஒரு மாதத்திற்கு 40,000-க்கும் அதிகம். தில்லி, சென்னை, மும்பை பெருநகர்களில் இது மேலும் அதிக அளவில் இருக்கும்'.


அதற்கென்ன? விற்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும். இந்த மாத்திரை பெண்களின் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பின்விளைவுகளைத் தரக்கூடியவை என்பதும், இதை எப்போதோ ஒருமுறை பயன்படுத்தினால் பரவாயில்லை என்பதற்குப் பதிலாக, எப்போதுமே பயன்படுத்தும் நிலைமை உருவாகி வருகிறது என்பதும்தான் நமது கவலைக்குக் காரணம்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், பாதுகாப்பற்ற கலவி நேர்ந்துவிட்டால், கலவிக்குப் பின்னர் 72 மணி நேரத்துக்குள் ஈ.ஸி. மாத்திரையைச் சாப்பிட்டு, கருவுறுதலைத் தடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில்தான் இந்த மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நடைமுறையில் இதன் பயன்பாடு பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

இந்த மாத்திரையை மூன்று நிறுவனங்கள் மூன்று பெயர்களில் வெளியிடுகின்றன. ஒரு மாத்திரை விலை ரூ. 60 முதல் ரூ. 100 வரை. இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த மாத்திரையை அறிமுகம் செய்தபோது நிர்ணயித்த விலை இதைவிடக் குறைவுதான். விற்பனை கூடக்கூட விலையையும் கூட்டுகிறார்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள், தொடர்ச்சியாக நாள்தோறும் சாப்பிட வேண்டியதாக இருப்பதால், ஒரே ஒருமுறை மட்டுமே, அதுவும் கலவிக்குப் பின்பு, சாப்பிட்டால் போதும் என்கிற ஈ.ஸி. மாத்திரைக்கு பெண்கள் எளிதில் மாறிவிடுகிறார்கள்.

இம் மாத்திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்த நேரிடும் பெண்ணுக்கு முதல் தொந்தரவு ஹார்மோன் சுரப்புகளில் பாதிப்பு. அதைத் தொடர்ந்து மாதவிலக்கு கோளாறுகளுக்கும் அது சார்ந்த உடல் வேதனைகளுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

இந்த மாத்திரை மூலம் கருக்கலைப்பு சாத்தியமில்லை என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறினாலும், இந்த மாத்திரையின் செயல்பாடு என்னவோ "மைக்ரோ-அபார்ஷன்' என்பதாகத்தான் இருக்கிறது.

ஆணாதிக்க உலகம் தங்களுக்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல், பெண்களை ஈ.ஸி. மாத்திரைகளைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கல்வி பயிலும் வளர்இளம் பெண்களுக்கு இந்த மாத்திரை கிடைப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதால், ஆபத்தின் வீச்சு கற்பனைக்கும் எட்டாதது.

இந்திய வாழ்வியல் சூழலில் மிகச்சிறந்த கருத்தடைச் சாதனம் ஆணுறை மட்டுமே. இதனால் கருவுறுதல் தடுக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. தற்போது ஈ.ஸி. மாத்திரைகளின் பயன்பாடு அதிகரிக்குமானால், இத்தகைய பாதுகாப்பு இல்லாமல், நோய்க்குள்ளாவது பெண் சமூகம்தான்.
இந்த மாத்திரைக்கான விளம்பரங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் அதிகமாக இடம்பெறத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பட்டிதொட்டியில் உள்ள கிராமப்பெண்களும்கூட புரிந்துகொள்ளும் அளவுக்குத் தெளிவான தகவலை தருகின்றன இந்த விளம்பரங்கள். ""இந்த மாத்திரைகளை ""வழக்கமான கருத்தடைச் சாதனங்களுக்கு ஒரு மாற்று'' என்பதைப்போல விளம்பரக் காட்சி அமைப்பது கூடாது என்று தில்லியில் நடைபெற்ற ஈ.ஸி. மாத்திரைகளின் பயன்பாடு குறித்த மாநாட்டில் மருத்துவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?
ஒரு பெண்ணுக்குக் கல்வியைக் கொடுத்தால் ஒரு குடும்பத்துக்கே கல்வி கொடுத்ததைப்போல என்று பேசுகிறோம். உடல் நலனைக் கெடுக்கும் மாத்திரைகளை எளிதாகக் கிடைக்கச்செய்து, கல்வியுடன் கலவியையும் பயிலட்டும் என்று அரசே வழிவகுத்தால் அதைவிட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது. சந்தைப் பொருளாதாரத்தை அனுமதிக்கிறோம் என்கிற பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவதும், தவறான பாதைக்குத் திசைதிருப்பப்படுவதும் நல்லாட்சிக்கு அடையாளமல்ல!

கட்டுப்பாடற்ற சமுதாயம் வளர்ச்சியின் அடையாளமல்ல. காட்டுமிராண்டித்தனத்தின் நுழைவாயில்!

Friday, September 11, 2009

சென்னையை ஆக்கிரமிக்கும் பிச்சைக்காரர்கள்

எம். மார்க் நெல்சன் from Dinamani

சென்னை, செப்.10: சென்னையை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.

ஆனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்குப் படை எடுக்கும் பிச்சைக்காரர்கள், தமிழக அரசின் முயற்சிக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பகல் நேரங்களில் கோயில்கள், போக்குவரத்து சிக்னல்கள் என மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பிச்சை எடுத்து இடையூறு ஏற்படுத்தும் இவர்கள், இரவில் சாலையோர நடைபாதைகளையும், பஸ் நிழற் குடைகளையும் இருப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இப்போது மின்சார ரயில் நிலையங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களில் வயதானவர்களும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களும் மின்சார ரயில் நிலைய நடை மேடைகளை நாள் முழுவதும் ஆக்கிரமித்திருப்பதால், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் அங்கேயே உணவு உண்பது, மலஜலம் கழிப்பது என பெரும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

எழும்பூர், வியாசர்பாடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் என எந்தவொரு மின்சார ரயில் நிலையத்தையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.

சீரழியும் சேத்துப்பட்டு ரயில் நிலையம்:

இதில் பிச்சைக்காரர்களின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருப்பது, பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருக்கும் சேத்துப்பட்டு ரயில் நிலையம்தான். இந்த ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வேக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆந்திரத்திலிருந்து தஞ்சம் புகுந்திருக்கும் 200-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

பகல் நேரங்களிலும், மழைக் காலங்களிலும் இவர்கள் அனைவரும் ரயில் நிலைய நடைமேடைகளை ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் நடைமேடைகள் அனைத்தும் குப்பைக்கூளங்களுடன் சுகாதார கேட்டுடன் காட்சி அளிக்கின்றன.

குடிநீர் வசதியும், கழிவறை வசதியும் இல்லாத இந்த ரயில் நிலையத்தை பராமரிப்பதற்கு ஆட்களும் கிடையாது, அதிகாரிகளும் கிடையாது. பயணிகளின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸôர் ஒரு சிலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களின் பணி ஒரு மணி நேரம் மட்டுமே. ""நடைமேடைகளை ஆக்கிரமித்திருக்கும் பிச்சைக்காரர்களை விரட்டும் பணி எங்களுடையது அல்ல. அதற்கு அதிகாரமும் இல்லை. ரயில்வே போலீஸôர்தான் அதைச் செய்ய வேண்டும்'' என்கின்றனர் அவர்கள்.

இந்த நிலையில், இரவில் இவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஜெகந்நாதபுரம் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவில் மது அருந்திவிட்டு உரத்த குரலில் சண்டையிடுகின்றனர். இதனால் தூக்கம் கெடுகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பலமுறை போலீஸில் புகார் அளித்தும் பயனில்லை என்கின்றனர்.

பயனற்றுப்போன மறுவாழ்வு இல்லம்: பிச்சைக்காரர்களின் மறு வாழ்வுக்கென சென்னை மேல்பாக்கத்தில் அரசு சார்பில் இல்லம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஊனமுற்றோர் மாநில ஆணையத்தின் கீழ் இது செயல்படுகிறது.

இந்த ஆணையத்தின் அதிகாரிகளால் போலீஸôர் உதவியுடன் கைது செய்யப்படும் பிச்சைக்காரர்கள் தண்டனைக் காலம் முடியும் வரை இந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.

தையல், தோட்டக்கலை, மர வேலை, மண் பாண்டங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எலும்பு இல்லாத கறிச் சாப்பாடு உள்ளிட்ட ராஜ உபசாரம் அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த இல்லத்துக்கு பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மருத்துவர், நிர்வாக அதிகாரி, கண்காணிப்பாளர், சமையல் கலைஞர் என 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த இல்லத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியப்போக்கு:1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இல்லம், 950 பேர் வரை தங்கி மறுவாழ்வு பெறும் வசதி கொண்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 950 பேருக்கு மறுவாழ்வு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.

ஆனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் இங்கு கொண்டுவரப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியதில்லை. இந்த ஆண்டுதான் 181-ஐத் தொட்டுள்ளது. ஆனால், நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்பட்டே வருகிறது.

2005-06-ம் ஆண்டில் ரூ. 32.52 லட்சமும், 2006-07-ம் ஆண்டில் 38.24 லட்சமும், 2007-08-ம் ஆண்டில் 45.26 லட்சமும், 2008-09-ம் ஆண்டில் 54.68 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-10-ம் ஆண்டில் ரூ. 72.37 லட்சம் ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரர்கள் சென்னையைத் தொடர்ந்து வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த இல்லமும், அதற்கு ஒதுக்கப்படும் நிதியும் எதற்கு என்பதே பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் காலாற நடக்க முயன்றால் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நச்சரித்து அவர்களை விரட்டியடிப்பது பிச்சைக்காரர்கள்தான்.

பிச்சைத் தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதாலேயே குழந்தைகளைக் கடத்தி ஊனப்படுத்தி பிச்சையில் ஈடுபடுத்தும் ""தாதா'' கும்பல்களும் செயல்படுகின்றன. இது ஒரு சமூகத்தீமை, இதைத் தடுத்தே தீர வேண்டும் என்ற உறுதி அதிகாரிகளிடத்தில் இல்லாவிட்டால் இது தொடர்கதையாகத்தான் இருக்கும்.

Sunday, September 6, 2009

தமிழ்நாடு ஊழலின் உறைவிடம்!

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôர் திடீர் சோதனை நடத்தி, ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது ரூ.1 லட்சம் வரை கணக்கில் வராத தொகையைக் கைப்பற்றினர். அதாவது ஒரு நாள் சராசரி "மாமூல்' அளவு இது!


அரக்கோணத்தில் ரூ. 1.90 லட்சம் பிடிபட்டதுடன், அந்த அலுவலகத்தின் இணை சார்-பதிவாளர் தன் சொந்தச் செலவில் 7 பேரை தினக்கூலிக்கு பணியமர்த்தியிருக்கிறார் என்றால், கையூட்டு எந்த அளவுக்குக் கிடைக்கிறது என்பது வெளிப்படை.

இப்படி திடீர் சோதனைகளை முடுக்கி விட்ட தமிழக அரசையும், தொடர்புடைய அதிகாரிகளையும் பாராட்டத்தான் வேண்டும். அதேநேரத்தில், இவர்கள் மீது உண்மையாகவே நடவடிக்கை எடுத்து, தண்டிக்கப்பட்டால்தான், இந்த அலுவலகங்களில் லஞ்சம் ஓரளவு கட்டுப்படும். இல்லாவிட்டால் இந்த நடவடிக்கைகள் வெறும் விளம்பரத்துக்காக என்பதாய் பிசுபிசுத்துப் போய்விடும்.

இச்சோதனைகளின் விளைவாக, எல்லா கட்டணங்களையும் வங்கி வரைவோலையாகக் கொண்டு வாருங்கள் என்று, ஏதோ பணத்தை கையால் தொடுவதற்கே கூச்சப்படுவதைப்போல, பத்திரப் பதிவகங்களில் தற்போது சொல்லப்படுகிறது. பிரச்னை, கட்டணங்கள் ரொக்கமா அல்லது வரைவோலையா என்பதல்ல. கையூட்டு வாங்குகிறார்களா இல்லையா என்பதுதான்.

பத்திரப் பதிவகங்களில் இந்த அளவுக்கு ஊழல் நடப்பதற்குக் காரணம், நில விற்பனையைப் பதிவு செய்யவும், நில உரிமையாளர் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கும், நிலத்தின் மதிப்பைக் குறைத்துப் பதிவு செய்து, பத்திரச் செலவைக் குறைக்கவும்தான். இந்திய மொத்த வருவாயில் (ஜிடிபி) தற்போது ரியல் எஸ்டேட் வணிகத்தின் பங்கு 10 சதவீதத்துக்கும் மேல். ஆகவே, பத்திரப் பதிவுகளுக்கு கையூட்டும் ஊழலும் மோசடிகளும் அதிகமாகிவிட்டன. கருப்புப் பணத்தைக் கையில் வைத்திருப்போரின் முதல் வேலை நிலம் வாங்குவதுதான். இருந்தும், நியாயமான ஆவணங்களைப் பதிவு செய்யவும் கையூட்டு இல்லாமல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு சீர்கேடான நிலைமை பத்திரப் பதிவகங்களில் இருக்கிறது.

2004-ம் ஆண்டு உலக வங்கி ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில்தான் சொத்துப் பதிவுக்கான செலவினங்கள் மிக அதிகம். மேலும், நில ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் லஞ்சம் ஆண்டுதோறும் ரூ.123 கோடி என்ற தகவல் நிலஅதிர்வு போன்றதுதான்.

மேலும், நிலமதிப்பைக் குறைத்துப் பதிவு செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு, நாட்டின் மொத்த வருவாயில் 1.3 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 2007-ல் இந்தியாவின் மொத்த உற்பத்தி வருவாய் (ஜிடிபி) 1,21,749 கோடி அமெரிக்க டாலர் என்றால், நிலமதிப்பைக் குறைக்கும் மோசடிகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு 1,582 கோடி அமெரிக்க டாலர்கள்! அரசுக்கு வர வேண்டிய ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வருமானத்தையும் இழந்து, இவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து, கையூட்டும் மக்கள் கொட்ட வேண்டும் என்றால் இந்த நிலைமையை என்னவென்பது?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலிப் பத்திர ஊழல் பல ஆயிரம் கோடி அளவுக்கு நடந்தது. அதில் சிலர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். நியாயமாக, ஒவ்வொரு சார்-பதிவாளருக்கும் இந்தக் குற்றத்தில் பொறுப்பு உண்டு. ஒரு வங்கியின் காசாளர் ஒரு நூறு ரூபாய் கள்ளநோட்டைத் தெரியாமல் வாங்கி, அது கண்டுபிடிக்கப்பட்டால், அதை வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது. அந்த இழப்பை அவர்தான் செலுத்த வேண்டும். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான போலிப் பத்திர ஊழலில் சார்-பதிவாளர்கள் தொடர்பே இல்லாதது போல, கழற்றிவிடப்பட்டார்கள்.

போலிப் பத்திரம் எந்த அளவுக்கு புழக்கத்தில் சென்றுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய, நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் பத்திரங்களை நேரில் கொண்டுவந்து மறுமுத்திரை பெற்றுச் செல்ல அறிவுறுத்தி, அந்த நேரத்தில் போலிப் பத்திரத்தைக் கண்டறிவதுடன் நில ஆவணங்களை கணினியில் ஒழுங்குபடுத்தலாம் என்ற நல்ல ஆலோசனையை அரசு முன்வைத்தபோது, அதை அப்படியே அமுக்கி, நடைமுறைப்படுத்த முடியாதபடி செய்தவர்களும் பதிவுத்துறை அதிகாரிகள்தான். காலைச் சுற்றிய பாம்பு கடித்துவிடும் என்ற அச்சம்!

பத்திரப்பதிவுக்கு வரும் வீடு அல்லது நிலத்தின் வழிகாட்டி மதிப்புக்கும், சந்தை மதிப்புக்கும் பெருத்த வேறுபாடு நிலவுகிறது. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பத்திரப்பதிவு அதிகாரிகளுக்குத் தரப்பட்டிருக்கிறது. அதனாலும் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் ஆகியவை சொத்தின் மதிப்பில் சுமாராக 7.7 சதவீதம் வருவதும்தான் இந்த ஊழல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். இதைச் சீர்செய்யாதவரை இத்துறையில் ஊழலை ஒழிக்கவே முடியாது.

ஆவணங்களை முழுமையாக கணினிமயமாக்குவதுடன், ஒவ்வொரு ஊரின் பெயர், நிலத்தின் புல எண் குறிப்பிட்டாலே, அது யார் பெயரில் உள்ளது, எந்த ஆண்டு கடைசியாக விற்பனைப் பரிமாற்றம் நடந்தது, தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை அனைவரும் பார்க்கும் வெளிப்படைத் தன்மை இருந்தாலே போதுமானது - பதிவுத்துறை ஊழலை 99 சதவீதம் ஒழித்துவிட முடியும்

தினமணியில் 27 Aug 2009 ல் தலையங்கமாக வந்தது.

(நன்றி தினமணி)

யாருக்காக, இது யாருக்காக...?

"சொன்னால் வெட்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு' என்கிற கதையாக, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, மறுநாளே எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது தமிழக வேளாண் தொழில்ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் என்கிற மசோதா.

இந்தச் சட்டத்தின் அடிப்படையான ஒரேயொரு விஷயம் ""விவசாயிகளுக்கு வேளாண்மைத் தொழில்நுட்பத்தை சொல்லித் தருவோர் பதிவுபெற்ற வேளாண் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்'' என்பதுதான். இதை மீறினால் சிறை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். இச் சட்டத்தில் இயற்கை, மற்றும் பாரம்பரிய விவசாயத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால், ஒன்று அது யாருக்கோ லாபம் சேர்ப்பதாக இருக்கலாம். அல்லது நாட்டில் பொதுமக்கள் அல்லது குறிப்பிட்ட துறையினர் பாதிக்கப்பட்டு பேரிழப்பு நேர்ந்திருந்தால், மறுபடியும் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டிருக்கலாம்.

சரி, இத்தகைய சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாட்டில் போலி வேளாண் ஆலோசகர்கள் பெருகிப்போய், விவசாயிகள் ஏமாற்றப்பட்டு, நஷ்டமடைந்து, தற்கொலைச் சம்பவங்கள் நடந்துவிட்டதா? அப்படியேதும் நடைபெற்றுவிடவில்லையே! ஏன் கொண்டுவந்தீர்கள் என்று நம் சட்டப்பேரவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளும்கூட கேட்கவில்லை. அமைச்சரும் இதற்கான காரணத்தை விளக்கவில்லை.

மருத்துவத் துறையில் பட்டம்பெற்று பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில்புரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டபோது, பல தலைமுறைகளாக சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவம் அளித்துவந்தோருக்கு, அவர்கள் பரம்பரையாகச் செய்து வருகிறவர்கள் என்பதை நிரூபித்து பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துக்கு தனித்தனியாக கல்லூரிகள் வந்துவிட்டன. மாணவர்களும் அதிக அளவில் சேர்கிறார்கள். இப்போது பரம்பரை வைத்தியர்கள் என்பதை நீக்கினாலும், இந்த இந்திய மருத்துவ அறிவைக் கொண்டு செல்ல ஆட்கள் வந்தாகிவிட்டது.

ஆனால், தமிழகத்தின் பாரம்பரிய, இயற்கை வேளாண்மைக்கு அத்தகைய நிலைமை இல்லை. பாடத்திட்டத்தில் ஒரு சிறு அறிமுகப் பாடமாக இவை இருக்கக்கூடுமே தவிர, தமிழகப் பல்கலைக்கழகங்களில் பாரம்பரிய விவசாயம், இயற்கை வேளாண்மை குறித்த தனியான சிறப்புப் பட்டப்படிப்புகள் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் பாரம்பரிய விவசாயம் அறிந்த விவசாயிகளின் தலைமுறை முடிந்துபோனது. இப்போது இருக்கும் விவசாயிகள் பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயத்துக்குப் பழகியவர்கள். இந்த நிலையில் பாரம்பரிய விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் பணியில் சில விவசாய அமைப்புகள் குழுக்கள் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு இப்போதுதான் பரவலாகப் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி, மண்புழு உரம் என்பதெல்லாம் இப்போதுதான் மீண்டும் கையாளப்படுகிறது. இந்நிலையில் இச்சட்டம் வந்திருப்பது தமிழகப் பாரம்பரிய விவசாயத்தை அழிக்கத்தான் உதவுமே தவிர, காப்பாற்றாது.

தமிழக அரசு தனது தவறைத் திருத்த விரும்பினால் ஒன்றைச் செய்ய வேண்டும். அதாவது, முன்பு மருத்துவத் துறையில் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பார்த்த பாரம்பரிய மருத்துவர்களையும் பதிவு செய்துகொண்டு மருத்துவம் நடத்த அனுமதித்ததைப் போல, தற்போது இயற்கை வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மையில் கருத்தரங்கம், செயல்விளக்கம், பண்ணைவிளக்கம் நடத்துபவர்களையும் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்களில் இதற்கான தனிச்சிறப்பு பட்டப்படிப்புகளில் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் பட்டம் பெற்று வந்தபின்னர், இந்த நடைமுறையில் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய அமைப்புடன் இணைந்து, இயற்கை வேளாண் வல்லுநர் நம்மாழ்வார் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்போவதாக அறிவித்தார். இதில் பயில அடிப்படைத் தகுதி அவர் விவசாயியாக இருந்தால் போதும். அத்தகைய பல்கலைக்கழகம் செயல்பாட்டில் இருக்குமேயானால், அது அரசு அங்கீகாரம் பெற்றிருக்காவிட்டாலும்கூட, அதில் தொடர்புடையவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இந்த விதித் தளர்வுகள்தான் தமிழகப் பாரம்பரிய வேளாண்மையை இந்தத் தமிழ் மண்ணில் நீடிக்கச் செய்யும்.
மண்ணை வீணாக்கும் முயற்சிக்கும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிக்கும் ஊக்கமளிக்கும் இப்படிப்பட்ட சட்டத்தை எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டப்பேரவை நிறைவேற்றி இருப்பதற்கு நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு விழா எடுத்தால் தகும்!
தினமணி 21 Aug 2009

Thursday, September 3, 2009

ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் !

இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணம் ரூ. 60,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது.


1991ஆம் ஆண்டிலேயே உலக வங்கி தொலைபேசித் துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டுமென இந்தியாவிற்கு உத்தரவிட்டிருந்தது. அப்போதிருந்த நரசிம்ம ராவ் அரசும் இதைச் சிரமேற்கொண்டு அமல்படுத்தியது. எல்லா பகாசுரக் கம்பெனிகளும் களத்தில் குதித்து, அரசிடமிருந்த தொலைபேசித் துறையின் வளத்தை ஊழல் உதவியுடன் முழுங்க ஆரம்பித்தன. அப்பொது தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வீட்டில் சி.பி.ஐ கட்டுக்கட்டாய்ப் பல கோடி பணத்தைக் கைப்பற்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

பின்னர் வந்த வாஜ்பாய் அரசில் தகவல் தொடர்புத் துறை அசுரவேகத்தில் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஊழலும் அதே வேகத்தில் கொடிகட்டிப் பறந்தது. அரசுக்குக் கட்டவேண்டிய லைசென்சு பணத்தை எல்லா நிறுவனங்களும் கட்டாமல் பட்டை நாமம் போட்டன. இதில் சில ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் சுருட்டப்பட்டது. பா.ஜ.க. அரசும் தனியார் நிறுவனங்களின் இந்தக் கட்டண ஏய்ப்பை அங்கீகரித்து உத்தரவிட்டது. அரசுத் தொலைபேசித் துறையை ஒழித்துத் தனியாரை வளர்ப்பதற்கென்றே “ட்ராய்” என்ற தொலைபேசித் துறை ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு எல்லா புகார் மற்றும் வழக்குகளில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருகிறது. அப்போது தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் இந்த நிறுவனங்களின் தரகராக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொடுத்தார். இந்தச் சூழலில்தான் ரிலையன்சு நிறுவனம் பல மோசடிகளை அரங்கேற்றியது. வில்போன் எனப்படும் வட்டார தொலைபேசி லைசென்சு எடுத்திருந்த அம்பானி அதற்கு மாறாக செல்பேசி சேவையை வழங்கினார். இதில் சில ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதும் ரிலையன்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு அந்த அபராதத் தொகை பல மடங்கு குறைக்கப்பட்டுத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி ரிலையன்சு செய்த பச்சையான மோசடியிலும் அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. மாநகரங்களில் உரிமை அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தனியார் நிறுவனங்கள் புறந்தள்ளின.

இந்தச் சூழலில்தான் மன்மோகன்சிங் அரசின் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்க்க வேண்டும். முதலில் அலைக்கற்றை எனப்படும் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று பார்க்கலாம். 1990க்கு முன்பு நமது தொலைபேசிகள் எல்லாம் கம்பி வழியாக செயல்பட்டன. நாடு முழுக்க கம்பி வலைப்பின்னல் போடப்பட்டு, இந்த தொலைபேசி சேவை இயங்கியது. பின்னர் செல்பேசி வந்ததும் இந்த கம்பிவழி தேவைப்படவில்லை. இதன்படி மின்காந்த அலைகள் ஒரு அலைக்கற்றை வரிசையில் அனுப்பப்பட்டு, செல்பேசியில் இருக்கும் குறியீட்டு வாங்கியினால் பெறப்பட்டுத் திரும்ப அனுப்பப்படுகிறது. கிட்டத்தட்ட ரேடியோ செயல்படும் விதத்தைப் போலத்தான் இதுவும். அதனால்தான் செல்பேசிகளில் எஃப்.எம். வானொலி சேவை கிடைக்கிறது. இந்த அலைக்கற்றைகள் உலகமெங்கும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுப் பல நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இது, பல வானொலி நிலையங்களுக்குப் பல்வேறு அலைவரிசைகளை ஒதுக்குவதற்கு ஒப்பானது.

செல்பேசியைப் பொருத்தவரை இந்த அலைக்கற்றைகளின் வசதி வருடத்திற்கு வருடம் மேம்பட்டு வருகிறது. அதாவது, முதலாவது தலைமுறை அலைக்கற்றை 2001ஆம் ஆண்டில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அதைவிட வேகமாகவும் வசதிகள் கொண்ட அலைக்கற்றைகள் இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் கொண்டு வரப்படுகிறது. இனி வருங்காலத்தில் செயல்பாட்டுக்கு வரும் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பது இணையம் பயன்படுத்துவது உட்பட பல வசதிகளைக் கொண்டிருக்கும். எனவே, இந்த அலைக்கற்றைகளின் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வது என்பது இயற்கையை விற்பது போல என்று கூடக் கூறலாம். இதை வைத்து அந்த நிறுவனங்கள் பல சேவைகளை வாடிக்கையாளருக்கு அளித்து பல்லாயிரம் கோடி ரூபாயைத் திரட்டுகின்றன என்பதுதான் முக்கியம்.

இப்போது சென்ற ஆண்டு இறுதியில் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை எனப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்ட விதத்தைப் பார்ப்போம். 2001ஆம் ஆண்டில் முதல் தலைமுறை அலைக்கற்றை விற்கப்பட்டது. அப்போது அதை வாங்கிய நிறுவனங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி பெறும் வர்த்தக ஆதாயத்தில் அரசுக்குப் பங்கு தர, வருவாய்க்கேற்ற பங்கு என்ற முறையில் விற்கப்பட்டன. அப்போதே விற்பனைத் தொகை மிகவும் குறைவு என்பதோடு, பின் வந்த ஆண்டுகளில் அந்த உரிமையை வாங்கிய நிறுவனங்கள் அந்த தொகையைக் கூடக் கட்டாமல் ஏமாற்றி வந்தன. அரசும், அதிகார வர்க்கமும் இந்த ஏமாற்றுதலை அங்கீகரித்தன.

ஏழு ஆண்டுகளுக்கு பின்பு இப்போது இரண்டாவது தலைமுறை அலைக்கற்றையை விற்கிறார்கள். இப்போதாவது அரசு இதை நல்ல விலைக்கு விற்றதா என்றால் இல்லை. 2001ஆம் ஆண்டில் என்ன விலைக்கு விற்றார்களோ அதே அடிமாட்டு விலைக்கு விற்றிருக்கிறார்கள். அதுவும் பகிரங்கமாக ஏலம் விட்டு இதைச் செய்யவில்லை. முதலில் எந்த நிறுவனங்கள் வருகிறதோ அவைகளுக்கு ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி ரூ.60,000 கோடிக்கு விற்கவேண்டிய சரக்கு வெறும் ரூ.3000 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஸ்வான், யுனிடெக் என்ற இரு நிறுவனங்கள் ஊழல் உதவியுடன் இதைச் சாதித்திருக்கின்றன. காங்கிரசு மற்றும் தி.மு.க. கட்சிகளின் ஆசீர்வாதத்தோடு இந்தத் திருப்பணியை மைய அமைச்சர் ராஜா செய்து முடித்திருக்கிறார்.

ஒரு தொகை என்ற அளவில் இதுவரை நாடு கண்ட ஊழலில் இதுதான் மிகப் பெரியது என்று சொல்லலாம். இத்துடன் ஒப்பிடும்போது போபார்ஸ், ஃபேர்பாக்ஸ் போன்ற ஊழல்களெல்லாம் வெறும் தூசிதான். இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று பொதுவில் நாடு பெரிய அளவுக்கு அதிர்ச்சியடையவில்லை. எதிர்க்கட்சிகள் கூட ஒரு சடங்குக்குப் பேசிவிட்டு முடித்துக் கொண்டன. பா.ஜ.க.விற்கு இதைக் கண்டிப்பதற்கு தார்மீக தகுதியில்லை என்பதாலோ என்னவோ, ஒரு கடமைக்கு மட்டும் பேசியது. இத்தனைக்கும் மேல் மன்மோகன் சிங் அரசு இந்த ரூ. 60,000 கோடி ஊழல் குறித்து ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஸ்வான், யூனிடெக் என்ற இரு கம்பெனிகளும் உண்மையில் “உப்புமா” கம்பெனிகள்தான். இந்த கம்பெனிகள் எதுவும் தொலைத்தொடர்புத் துறையில் எந்தவிதமான அனுபவமோ, ஆட்பலமோ, ஏன் கட்டிடமோ, கருவிகளோ இல்லாத “டுபாக்கூர்” நிறுவனங்களாகும். இந்த இரண்டு நிறுவனங்களிலும் பங்குகள் வைத்திருக்கும் பினாமி நிறுவனங்கள் கருணாநிதி குடும்பத்தினருக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் இரண்டும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வாங்கியபிறகு, தங்களதுப் பாதிப் பங்குகளைப் பல மடங்கு அதிகமான விலையில் கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றன. இதற்குக் காரணம் இவை ஸ்பெக்ட்ரம் உரிமையை மலிவு விலைக்கு வாங்கியிருப்பதால், இவற்றின் மதிப்பு பின்னாளில் பல மடங்கு ஏறியிருக்கும் என்பதுதான்.

மேலும் பல தொலைபேசித் தனியார் நிறுவன்ஙகள் எதுவும் இந்த ஊழலைக் குறித்து பெரிய அளவுக்கு புகார் எதுவும் கிளப்பவில்லை. இது டெண்டர் எடுப்பதற்கு முதலாளிகள் திருட்டுத்தனமாக சிண்டிகேட் அமைப்பதைப் போன்றது. இதன்படி இரண்டு உப்புமா கம்பெனிகளைத் தவிட்டு ரேட்டுக்கு எடுக்க வைத்து, பின்னர் அதை மாற்றிக் கொள்வது என்ற உடன்படிக்கைபடி இது நடந்திருக்கிறது. இப்படி இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் கனகச்சிதமாக அரங்கேறியிருக்கிறது. அதனால்தான் அமைச்சர் ராஜா இந்த முறைகேடு சட்டப்படி நடந்திருப்பதாக திரும்பத் திரும்ப ஓதி வருகிறார். சட்டப்படிதான் இந்திய மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகத்தான் நாமும் கூறுகிறோம்.

தொலை தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவியில் இருந்தபொழுதே, ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அவருக்குப் பின்னர் அத்துறையின் அமைச்சரான ராஜா குற்றஞ்சாட்டினார். அப்போது மாறன் சகோதரர்கள், கருணாநிதியுடன் தகராறில் இருந்தனர். இதன் நீட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மாறன்களது சன் டி.வி.யும் தினகரன் நாளேடும் அதிரடியாக ரூ. 60,000 கோடி ஊழல் குறித்து அம்பலப்படுத்தி வந்தன. இதில் முக்கியமாக அமைச்சர் ராஜாவைக் குறி வைத்தே செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். ராஜாவும் மாறன்களது ஊடகங்கள் தேவையில்லாமல் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவதாகப் பேசி வந்தார். இதற்கிடையில் கருணாநிதி, மாறன் சகோதரர்களது துரோகத்தைக் கவிதையாய், கடிதமாய் முரசொலியில் எழுதி வந்தார். அதற்குப் பதிலடியாய் கலாநிதி மாறனது கடிதம் தாத்தாவோடு நடந்த பாகப்பிரிவினை குறித்து பல விசயங்களை அம்பலப்படுத்தியதோடு, அக்கடிதம் பகிரங்கமாக பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.
இரண்டு கோடீசுவரக் குடும்பங்களும் தங்களது சொத்துக்களை வைத்துத் தகராறு நடத்த தொடங்கிய இந்த நேரத்தில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே வந்ததும் அதில் கருணாநிதியின் பின்னணி இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு என்ன மாயம் நடந்ததோ, இரு குடும்பங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்டு போட்டோவோடு ஊடகங்களுக்கு குடும்பத் தகராறு முடிந்துபோன செய்தியைக் கொடுத்தன. இதை யோசித்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குடும்பத்தினர் அடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விசயம் வெளியே வரக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் பெயரில் மாறன்களுக்குப் பல சலுகைகள் கொடுக்கப்பட்டுப் பூசி மெழுகியிருக்கிறார்கள். அதன் பிறகு மாறன்களது ஊடகங்கள் இந்த ஊழலைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காக்கின்றன. திருமங்கலத்தில் ஸ்பெக்ட்ரம் பணம்தான் தண்ணியாய்ச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வாக்காளர்களுக்கும் கறி விருந்தே நடத்தியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இதை ஊகிக்க முடியும்.

இந்தக் காலத்தில்தான் கனிமொழிக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு திறக்கப்பட்டு, இந்த ஊழல் பணம் அதில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் நம்மிடம் ஆதரமில்லை என்றாலும், அடித்த கொள்ளைப் பணம் இவர்களிடம்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கருணாநிதி குடும்பத்தினர் அடைந்த ஆதாயம் காங்கிரசு அரசின் ஆசீர்வாதத்தோடுதான் நடந்திருக்க வேண்டுமென்பதிலும், அதில் ஒரு பங்கு காங்கிரசுக்கும் சென்றிருக்கலாம் எனவும் உறுதியாகக் கூற முடியும்.

60,000 கோடி ரூபாயைக் கமுக்கமாக அடித்துவிட்டு இந்த ஊழல் பெருச்சாளிகள் கவுரவமாக உலா வருகின்றன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் ஒரு ரூபாய்க்கு பேசும் ஒரு உள்ளூர் அழைப்புக்குப் பயன்படும் செல்பேசி சேவையில் இத்தகைய ஊழலும் கொள்ளையும் கலந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். செல்பேசி சேவை மலிவாகக் கிடைக்கிறது என்று மூடநம்பிக்கை நிறைந்திருக்கும் நாட்டில்தான், இந்த மலைமுழுங்கி மகாதேவன்களது சாம்ராஜ்ஜியம் நடந்து வருகிறது.

புதிய ஜனநாயகம், பிப்’09
http://vinavu.wordpress.com/2009/03/30/spectrum/