Tuesday, December 15, 2009

உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம் செய்​வோர் எண்​ணிக்கை பெருகி வரு​வ​ தும்,​​ அத​னால் பலர் பய​ன​டைந்து வரு​வ​தும் மகிழ்ச்சி தரும் செய்​தி​கள்.​ உடல் உறுப்பு தானம் பற்​றிய விழிப்​பு​ணர்வு,​​ ஹிதேந்​தி​ர​னின் உடல் உறுப்​பு​க​ளைத் தானம் அளிக்க முன்​வந்த டாக்​டர் தம்​ப​தி​யால் தமிழ்​நாடு முழு​வ​தும் பர​வ​லா​யிற்று.​ தற்​போது மூளைச் சாவு ஏற்​பட்ட நோயா​ளி​க​ளின் உறுப்​பு​க​ளைத் தான​மாக அளிக்க முன்​வ​ரு​வோர் எண்​ணிக்​கை​யும் அதி​க​ரித்து வரு​கி​றது.​ ​


தமிழ்​நாடு சுகா​தா​ரத் துறைச் செய​லர் சுப்​பு​ராஜ் குறிப்​பி​டு​வ​தைப் போல,​​ சரா​ச​ரி​யாக வாரம் ஒரு உறுப்பு தான உடல் வந்​து​கொண்​டி​ருந்த நிலைமை மாறி​யுள்​ளது.​ இம்​மா​தம் 10,​ 12 ஆகிய இரு நாள்​க​ளில் 5 உறுப்​பு​தான உடல்​கள் பெறப்​பட்டு,​​ பல்​வேறு உறுப்​பு​மாற்று அறு​வைச் சிகிச்​சை​யால் 15 பேர் ​ பய​ன​டைந்​துள்​ள​னர்.​ ​ இது​வரை 100 சிறு​நீ​ர​கங்​கள்,​​ 14 கல்​லீ​ரல்​கள் தேவை​யான நோயா​ளி​க​ளுக்​குப் பொருத்​தப்​பட்​டுள்​ளன.​

விழிப்​பு​ணர்வு மேலும் அதி​க​ரிக்​கும்​போது உறுப்​பு​தான உடல்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் கிடைக்​கும் என்​ப​தில் சந்​தே​க​மில்லை.​ ஆனால் இந்த உறுப்​பு​க​ளைப் பெறு​வ​தில் சங்கி​லித் தொடர் நிறு​வன மருத்​து​வ​ம​னை​கள் முன்​னு​ரிமை பெறு​வ​தை​யும்,​​ பண​வ​சதி படைத்​த​வர்​கள் மட்​டுமே இத்​த​கைய மருத்​து​வ​ம​னை​க​ளில் ​ உறுப்பு மாற்​றுச் சிகிச்​சை​யால் பயன்​பெ​று​கி​றார்​கள் என்​ப​தை​யும் பார்க்​கும்​போது,​​ பழை​ய​ப​டியே முறை​கே​டு​கள் தொடங்​கி​வி​டுமோ என்ற அச்​சம் எழு​கி​றது.​

உடல்​தா​னம் செய்​யும் குடும்​பத்​தி​னர் ஏழை,​​ நடுத்​தர வரு​வாய்ப் பிரி​வி​னர்,​​ பணக்​கா​ரர்​கள் என்று பல வித​மாக இருக்​கி​றார்​கள்.​ அவர்​கள் இந்த உறுப்​பு​கள் யாருக்​குப் பொருத்​தப்​பட வேண்​டும் என்று விருப்​பம் தெரி​விப்​ப​தில்லை.​ விருப்​பம் தெரி​விக்​க​வும் முடி​யாது.​ உடல்​உ​றுப்பு மாற்​றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இய​லும் என்​ப​தை​யும்,​​ தானம் பெற்ற உறுப்​பின் அளவு,​​ திசுக்​கள் அதைப் பொருத்​திக்​கொள்​ளும் நோயா​ளி​யின் உடல் ஏற்​குமா என்​ப​தை​யும் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மருத்​துவ வல்​லு​நர் குழு​தான்.​உறுப்பு மாற்​றுச் சிகிச்​சைக்​கான நவீன மருத்​து​வக் கரு​வி​களை வைத்​தி​ருக்​கும் மருத்​து​வ​ம​னை​கள் அனைத்​துமே பெரிய,​​ நிறு​வ​ன​மாக்​கப்​பட்ட மருத்​து​வ​ம​னை​க​ளாக உள்​ளன.​ விதி​வி​லக்​காக,​​ சென்​னை​யில் தலைமை அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ​ அதி​க​பட்​ச​மாக ஸ்டான்லி மருத்​து​வ​மனை அல்​லது கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​க​ளில் இந்த வசதி இருக்​கக்​கூ​டும்.​ மற்​ற​படி,​​ மாவட்ட அள​வி​லான அரசு மருத்​து​வ​ம​னை​க​ளில் இதற்​கான வாய்ப்​பு​கள் இல்​லவே இல்லை என்​ப​து​தான் ​ நிலைமை.​

உடல்​தா​னம் செய்​வோர் எந்​த​வித பிர​தி​ப​ல​னும் எதிர்​பா​ரா​மல்,​​ மூளை இறப்​புக்கு உள்​ளான தங்​கள் குடும்ப அங்​கத்​தி​ன​ரின் உடல்​உ​றுப்​பு​கள் யாருக்​கா​வது பயன்​ப​டட்​டுமே என்​கிற நல்​லெண்​ணத்​தில் மட்​டுமே அளிக்​கின்​ற​னர்.​ இவ்​வாறு இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டும் உடல்​உ​றுப்​பு​கள் எந்​த​வொரு தனிப்​பட்ட மருத்​து​வ​ம​னைக்​கும் சொந்​த​மா​னது அல்ல.​ தற்​போ​தைய நடை​மு​றை​யில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான ஒருங்​கி​ணைப்​பா​ளரை அரசு நிய​மித்து,​​ தான​மா​கக் கிடைத்த உறுப்​பு​கள் யாருக்கு அளிக்​கப்​பட வேண்​டும் என்​பது முறைப்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இந்த நடை​மு​றை​யில் வெளிப்​ப​டைத் தன்​மையை தமி​ழக அரசு புகுத்த வேண்​டும்.​ ​

தமிழ்​நாட்​டில் உடல்​உ​றுப்பு தானத்தை எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கும் அனைத்து நோயா​ளி​க​ளும் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​ய​வும்,​​ அவ்​வாறு பதிவு செய்து காத்​தி​ருப்​போர் பட்​டி​யலை வெளிப்​ப​டை​யாக இணைய தளத்​தில் வெளி​யி​ட​வும் வேண்​டும்.​ அமெ​ரிக்​கா​வில் உறுப்பு பெறு​தல் மற்​றும் மாற்​றிப்​பொ​ருத்​து​தல் இணை​யம் ​(ஞட​பச)​ உள்​ளது.​ இதில் நோயா​ளி​கள் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​து​கொள்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நோயின் தீவி​ரம் மற்​றும் திசுப் பொருத்​தம் ஆகி​ய​வற்​றைக் கொண்டு மருத்​து​வக் குழு அப்​பட்​டிய​லில் உள்ள நோயா​ளி​க​ளைத் தீர்​மா​னிக்​கி​றது.​ அதே​போன்ற நடை​முறை தமிழ்​நாட்​டி​லும் உரு​வாக்​கப்​பட வேண்​டும்.​ ​ சிறு​நீ​ர​கத் திருட்​டு​கள் நடை​பெற்ற தமி​ழ​கத்​தில்,​​ இத்​த​கைய வெளிப்​ப​டைத் தன்மை மிக​வும் அவ​சி​ய​மா​கி​றது.​ ​

இதனை வலி​யு​றுத்த இன்​னொரு முக்​கிய கார​ணம்,​​ தமி​ழ​கத்​தில்​தான்,​​ முதல்​மு​றை​யாக தானம்​பெற்ற கல்​லீ​ரல் ஒரு அயல்​நாட்​ட​வ​ருக்கு அண்​மை​யில் பொருத்​தப்​பட்​டுள்​ளது.​ சென்னை தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் கல்​லீ​ரல் அழற்சி நோயால் அவ​திப்​பட்டு வந்த இராக் நாட்​டைச் சேர்ந்த நோயாளி பய​ன​டைந்​தி​ருக்​கி​றார்.​ ஸ்டான்லி அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ஒரு தனி​யார் மருத்​து​வ​ம​னை​யி​லும் கல்​லீ​ரல் மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான பொருத்​த​மான ​ நோயா​ளி​கள் இருக்​கி​றார்​களா என்று தேடி​ய​போது,​​ அங்கு இல்​லாத கார​ணத்​தால்,​​ ஒரு உறுப்பு வீணா​கி​வி​டக் கூடாதே என்​கிற நோக்​கில்,​​ அயல்​நாட்​ட​வர் தேர்வு செய்​யப்​பட்​ட​தாக விளக்​கம் தரப்​ப​டு​கி​றது.​ இது உண்​மை​யாக இருக்​க​லாம்.​ இருப்​பி​னும்,​​ இதே​போன்ற நிலைமை தொட​ரக்​கூ​டாது.​ ஏனென்​றால்,​​ இந்​தி​யா​வுக்கு மருத்​து​வச் சிகிச்​சைக்​காக வரு​வோர் எண்​ணிக்கை ஆண்​டு​தோ​றும் அதி​க​ரித்​துக்​கொண்டே வரு​கி​றது.​ அமெ​ரிக்​கா​வில் ஆகும் செல​வைக் காட்​டி​லும் மிகக் குறைந்த செல​வில்,​​ இங்கே ஐந்​து​நட்​சத்​திர ஹோட்​டல் போன்ற வச​தி​யுள்ள தனி​அ​றை​க​ளில் தங்கி,​​ தர​மான சிகிச்சை பெற்று நல​மா​கத் திரும்ப முடி​கி​றது என்​ப​து​தான் இதற்​குக் கார​ணம்.​ அவ்​வாறு வரு​வோர் எவ்​வ​ளவு பணம் வேண்​டு​மா​னா​லும் செல​வ​ழிக்​கத் தயா​ராக வரு​கின்​ற​னர்.​

அமெ​ரிக்கா உள்​ளிட்ட மேலை நாடு​க​ளில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​காக ஒரு சிறு​நீ​ர​கமோ அல்​லது கல்​லீ​ரலோ,​​ இத​யமோ வேண்​டும் என்​றால் அதற்​கா​கக் காத்​தி​ருப்​போர் பட்​டி​யல் மிக​மிக நீள​மாக இருக்​கும்.​ கிடைத்​தா​லும் அதற்​கான செலவு குறைந்​தது ஒரு லட்​சம் டாலர் ஆகி​றது.​ இது போதுமே-​இந்​திய மருத்​துவ உல​கில் முறை​கே​டு​களை முடுக்​கி​வி​டு​வ​தற்கு!​

உடல்​தா​னம் குறித்த விழிப்​பு​ணர்வு பர​வ​லா​கும் இந்த வேளை​யில்,​​ உடல்​உ​றுப்​பைத் தானம் பெறக் காத்​தி​ருப்​போர் மற்​றும் தானம் அளித்​தோர்,​​ சிகிச்சை நடை​பெற்ற மருத்​து​வ​ம​னை​கள் பற்றி வெளிப்​ப​டை​யாக அறி​விப்​பது முறை​கே​டு​க​ளைப் பெரு​ம​ளவு குறைக்​கும்.

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!

அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​

அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!

தெலுங்கு,​​ ஆனால்...

தெலங்​கானா எனப்​ப​டும் ஹைத​ரா​பாத் மாநி​லத்தை,​​ அன்​றைய பிர​த​மர் ஜவா​ஹர்​லால் நேரு,​​ ஆந்​திர மாநி​லத்​து​டன் 1956-ம் ஆண்​டி​லேயே சேர்ப்​ப​தற்கு உத்​த​ர​விட்​டார்.​ அதற்கு ஒரு நியா​ய​மான கார​ணம் இருந்​தது.​ மொழி​வாரி மாநி​லம் என்ற அள​வு​கோல் வைக்​கப்​பட்ட பிறகு,​​ ஒரே மொழி பேசும் இரு மாநி​லங்​கள் அமை​யு​மா​னால்,​​ அது தவ​றான முன்​னு​தா​ர​ண​மாக அமைந்​து​வி​டும் என்று நேரு கரு​தி​னார்.​ மேலும் மறு​சீ​ர​மைப்பு செய்​யப்​ப​டும் மற்ற மொழி​வாரி மாநி​லங்​க​ளி​லும் இத்​த​கைய கருத்​து​கள் எழக்​கூ​டும் என்​றும் கரு​தி​னார்.​

நேரு​வின் எண்ண ஓட்​டத்​தில் தவறு காண முடி​யாது.​ ஒரே மொழி பேசும் இரு மாநி​லங்​கள் அமைந்​தி​ருந்​தால்,​​ தமிழ்​நாட்​டில்​கூட கொங்​கு​நாடு,​​ தொண்​டை​நாடு,​​ பாண்​டி​நாடு,​​ நாஞ்​சில் நாடு என்று தனித்​த​னி​யா​கக் கோரிக்கை எழுந்​தி​ருக்​கும்.​ இதே​போன்ற மன​நிலை கர்​நா​ட​கத்​தி​லும் கேர​ளத்​தி​லும் ஏன் இந்​தி​யா​வின் வேறு பல மாநி​லங்​க​ளி​லும் ஏற்​பட்​டி​ருக்க வாய்ப்பு உண்டு.​

ஆந்​திர மாநி​லத்​தில் ஏறக்​கு​றைய 40 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக ஆட்சி செய்த காங்​கி​ரஸ் கட்சி,​​ தெலங்​கா​னா​வின் ஆதங்​கம் கருத்​தில் கொள்​ளப்​ப​டும் என்று நேரு அளித்த வாக்​கு​று​தியை மறந்து,​​ தெலங்​கானா என்​ற​ழைக்​கப்​ப​டும் 10 மாவட்​டங்​க​ளின் ​(ஹைத​ரா​பாத்,​​ அடி​லா​பாத்,​​ கரீம்​ந​கர்,​​ கம்​மம்,​​ மக​பூப்​ந​கர்,​​ மேடக்,​​ நல​கொண்டா,​​ நிஜா​மா​பாத்,​​ ரெங்​கா​ரெட்டி,​​ வரங்​கல்)​ வளர்ச்​சி​யில் அக்​கறை காட்​ட​வில்லை என்​ப​தால்​தான் இன்​ன​மும் தெலங்​கானா பிரச்னை உயிர்ப்​பு​டன் மீண்​டும் எழு​கி​றது.​ ​

தெலங்​கா​னா​வில்​தான் படிப்​ப​றி​வில்​லா​த​வர் அதி​கம்,​​ இங்​கு​தான் ஏழை விவ​சா​யி​கள் தற்​கொலை செய்​து​கொள்​வ​தும் அதி​கம்.​ இங்​கு​தான் வறுமை தாண்​ட​வ​மா​டு​கி​றது.​ குழந்​தை​களை விற்​கி​றார்​கள்.​ கிருஷ்ணா கோதா​வரி நதி​கள் ஓடி​னா​லும் வறட்​சி​தான் மிச்​சம்.​ தெலங்​கா​னா​வில்​தான் ஆந்​திர மாநி​லத்​தின் ஒரே ஐஐடி,​​ மண்​டல பொறி​யி​யல் கல்​லூரி உள்​ளது.​ ரயில்வே மண்​டல அலு​வ​ல​கம் உள்​ளது.​ ராம​குண்​டத்தி​லி​ருந்​து​தான் ஏவு​கணை ஏவப்​ப​டு​கி​றது.​ ஆனால் இந்த நிறு​வ​னங்​க​ளில் பணி​யாற்​று​வோர் பெரும்​பா​லோர் தெலங்​கானா பகு​தி​யைச் சேர்ந்​த​வர்​கள் அல்ல.​ இவை​தான் இப்​போது தெலங்​கானா போராட்​டத்​துக்​குத் தூண்​டு​த​லாக இருக்​கி​றது.​

சத்​தீஸ்​கர்,​​ ஜார்க்​கண்ட்,​​ உத்​த​ராஞ்​சல் ஆகிய மாநி​லங்​கள்,​​ தற்​போது தெலங்​கானா பகு​தி​யை​விட மிகச்​சி​றிய பரப்​ப​ளவு கொண்​டவை.​ அவற்​றைத் தனி​மா​நி​ல​மாக அறி​வித்​துள்​ள​போது,​​ சுமார் 3.5 கோடி மக்​கள்​தொகை கொண்​டி​ருக்​கும் தெலங்​கா​னாவை ஏன் தனி மாநி​ல​மாக அறி​விக்​கக்​கூ​டாது என்​பது தற்​போது முன்​வைக்​கப்​ப​டும் வாதம்.​ ​

சரி,​​ நேரு​வின் எண்​ணத்​துக்கு மாறாக,​​ ஒரே மொழி​பே​சும் மாநி​லத்தை இப்​போது இரண்​டா​கப் பிரித்​து​விட்​டால் பிரச்னை தீர்ந்​து​வி​டுமா என்​றால் அது​வும் சந்​தே​கம்​தான்.​ தெலங்​கா​னா​வில் எந்​த​வித சுய​மான நிதி​ஆ​தா​ரத்​துக்​கும் வழி​யில்லை.​ ​ இந்த மாநி​லம் உரு​வாக்​கப்​பட்​டால்,​​ அது முழுக்​க​மு​ழுக்க மத்​திய அர​சின் நிதி​யு​த​வியை மட்​டுமே நம்​பி​யி​ருக்க முடி​யும்.​ நக்​ஸல் ஒழிப்பு மற்​றும் வறுமை ஒழிப்​புத் திட்​டங்​க​ளுக்​காக ஆண்​டு​தோ​றும் சில ஆயி​ரம் கோடி ரூபாய் தெலங்​கானா பகு​திக்கு ஒதுக்​கப்​பட்​டா​லும் இவை முறை​யா​கப் போய்ச் சேர​வில்லை என்​கி​ற​போது,​​ தனி மாநி​ல​மாக மாறி​னால் மட்​டும் நிலைமை சரி​யா​கி​வி​டுமா என்​பது சந்​தே​கம்​தான்.​ ​

தெலங்​கானா கோரிக்கை மக்​கள்​பி​ரச்​னை​யாக உரு​வெ​டுத்​துள்​ளது என்று சொல்​வ​தை​விட இது சில அர​சி​யல் தலை​வர்​க​ளின் சுய​லா​பத்​துக்​காக எழுப்​பப்​ப​டு​கி​றது என்​ப​தால்​தான் இந்​தப் புதிய மாநி​லம் உரு​வா​வதை நாம் ஒரு​மு​றைக்கு இரு​முறை ​ஆய்​வுக்கு உள்​ப​டுத்த வேண்​டி​யி​ருக்​கி​றது.​ ​

தற்​போது தெலங்​கானா ராஷ்ட்​ரிய சமிதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவ் நடத்​திய உண்​ணா​வி​ர​தப் போராட்​ட​மும் கல​வ​ரங்​க​ளும் தெலங்​கானா மாநி​லம் உரு​வாக்​கு​வ​தற்​காக என்​ப​தைக் காட்​டி​லும்,​​ கடந்த சட்​ட​மன்​றத் தேர்த​லில் படு​தோல்வி அடைந்த இக்​கட்​சி​யின் கெüர​வத்தை நிலை​நாட்​ட​வும் தனது தலை​மையை தக்​க​வைத்​துக் கொள்​ள​வும்​தான்.​ கடந்த தேர்த​லில் 45 இடங்​க​ளில் போட்​டி​யிட்டு,​​ 10 இடங்​க​ளில் மட்​டுமே வெற்றி பெற்​றது இக்​கட்சி.​ இதற்கு முந்​தைய தேர்த​லில் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் கூட்​டணி அமைத்து 26 எம்​எல்ஏ,​​ 5 எம்.பி.க்க​ளைப் பெற்று மத்​திய மாநில அர​சில் பங்கு வகிக்​க​வும் செய்த டி.ஆர்.​ எஸ்.​ கட்​சிக்கு இது படு​தோல்வி.​ இதை ஈடு​செய்​யவே தற்​போது நடந்த போராட்​டங்​கள்.​
மேலும்,​​ தற்​போது ஆந்​திர முதல்​வர் ரோசய்​யா​வுக்​குத் தலைவலி கொடுக்க வேண்​டும் என்​கிற ஒரே கருத்​தில் செயல்​பட்​டு​வ​ரும் மறைந்த ராஜ​சே​கர ரெட்​டி​யின் மகன் ஜெகன் மோகன் ரெட்​டி​யின் ஆத​ரவு சந்​தி​ர​சே​கர ராவுக்கு இருக்​கி​றது என்​ப​தும் இப்​போ​ராட்​டத்​தின் நோக்​கத்தை நீர்த்​துப்​போ​கச் செய்​கி​றது.​
தெலங்​கானா தனி​மா​நி​லம் ஆவது குறித்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று சோனியா தலை​மை​யில் நடந்த காங்​கி​ரஸ் கட்​சிக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது.​ இதை​ய​டுத்து சந்​தி​ர​சே​கர ராவ் தனது உண்​ணா​வி​ர​தத்தை முடித்​துக் கொண்​டுள்​ளார்.​ அதே​நே​ரத்​தில் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்​கள் எதிர்ப்​பைத் தெரி​வித்து ராஜி​நாமா செய்​யத் தயாராகி இருக்கிறார்கள்.

இன்​னொரு சிக்​கல் இப்​போதே ஆந்​தி​ரத்​தில் ஆரம்​ப​மா​கி​விட்​டது.​ தெலங்​கானா தனி மாநி​லம் என்​றால் ராய​ல​சீமா எந்த விதத்​தில் குறைவு?​ கட​லோர ஆந்​தி​ரம் எந்​த​வி​தத்​தில் குறைவு?​ அவற்​றை​யும் தனி மாநி​ல​மாக்​குங்​கள் என்ற கோரிக்கை எழத்​தொ​டங்​கி​விட்​டது.​ ஒரு மாநி​லத்​தின் அனைத்து மக்​க​ளுக்​கும் ஒரே வித​மான சலு​கை​கள்,​​ நலத்​திட்​டங்​கள்,​​ நிதி,​​ தொழில்​வ​ளர்ச்​சித் திட்​டங்​கள் கிடைக்​கச் செய்ய வேண்​டிய பொறுப்​பும்,​​ கண்​கா​ணிக்க வேண்​டிய கட​மை​யும் மத்​திய அர​சுக்கு இருக்​கி​றது.​ அதில் தவ​று​கள் நிக​ழும்​போது,​​ இப்​ப​டி​யான போராட்​டங்​க​ளை​யும் நியா​யப்​ப​டுத்​தும் நிலை உரு​வா​கி​வி​டு​கி​றது.​

மக்​க​ளாட்​சி​யில்,​​ ஆட்​சி​யில் இருப்​ப​வர்​கள் மக்​க​ளின் உணர்​வு​க​ளைப் பிர​திப​லிக்​கா​மல் போனால்,​​ தெலங்​கானா போன்ற கோரிக்​கை​கள் எழு​வ​தைத் தவிர்க்க முடி​யாது!

Tuesday, December 1, 2009

"அணு' அளவும் இல்லை

அணுமின் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதால் கடந்த மாதம் 16-ம் தேதி அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி கைது செய்யப்பட்ட பிறகுதான் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசுக்கு துப்பு கிடைத்தது.


சரியாக 12 நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் கார்வார் அருகே உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் மிகை கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது, வழக்கமாக அவர்கள் உட்படுத்தப்படும் சிறுநீர் சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. இதற்குக் காரணம், அணுஉலைக் கூடத்தில் பணியாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர் குடிநீரில் டிரைடியம் கலந்திருந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.

இதுவே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயம். ஆனாலும் இதைவிட ஒரு படி மேலேபோய், "இந்த அணுஉலைக் கூடத்தில் எந்த இடத்திலும் கனநீர் கசிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது' என்று அணுமின் நிலையம் அறிவித்திருப்பது நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அணுமின் நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், வெளியிலிருந்துதான் டிரைடியம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அர்த்தமா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

அணுமின் உலைக்கூடங்களில் யுரேனியம் பயன்படுத்தும்போது அதைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கனநீரின் காரணமாக, மிகச்சிறிய அளவிலான டுடேரியம், டிரைடியம் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இதுதான் ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள். இத்தகைய ஆபத்தான மூலப்பொருள் தற்போது குளிர் குடிநீர்த் தொட்டிக்கு வந்த டிரைடியம், நாளை வெளியே செல்லாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அணுமின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்களஎன்று அமெரிக்கா துப்பு கொடுத்தால், ஏதோ பயங்கரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் வந்து தாக்கியதைப்போல துப்பாக்கிகளுடன் வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அணுமின் நிலையம் போன்ற ஓர் இடத்துள் புக வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வர மாட்டார்கள். விஞ்ஞானிகளுக்கு இணையான அறிவுடன் கருப்பு ஆடுகளாகத்தான் வருவார்கள் என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

டிரைடியம் போன்ற கதிர்வீச்சுப் பொருளை அதே உலைக்கூடத்தின் குடிநீரில் கலப்பது மட்டுமல்ல, எந்தவொரு நகரத்தின் குடிநீர்த் தொட்டியிலும்கூட கலந்துவிட முடியும் என்பதை இந்த அணுமின் நிலையங்களும், அரசும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய அணுஉலைக் கூடங்களைத் திறக்க தயாராகி வருகிறோம். எத்தகைய பாதுகாப்பை இந்திய அரசு நமக்கு வழங்கவுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் கல்பாக்கம் பாதிக்கப்பட்டபோது இந்திரா காந்தி அணுமின் நிலையமும் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணுஉலைக் கழிவுப் பொருள்களும் பேரலையால் வெளியேறியதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் அணுமின் நிலையம் அதை மறுத்தது. சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால், கூடங்குளம், கல்பாக்கம், மும்பை பாபா அணுஉலைக் கூடம் எல்லாமும் கடலோரத்தில்தான் இருக்கின்றன.

பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தின் தொழில்துறை பாதுகாப்பில்கூட நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவை களவுபோகும்போது அந்த நிறுவனமும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் படும் அவதி சொல்லிமாளாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் உள்ள நிறுவனத்தில் பாபா அணுமின் நிலையம் வழங்கிய பயன்படுத்தப்பட்ட யுரேனியம் திருடுபோனது. திருடியவருக்கு அதன் மதிப்போ ஆபத்தோ தெரியாது. அவரைப் பொருத்தவரை அது பொருத்தப்பட்டிருந்த தேனிரும்பு மட்டுமே மதிப்பு கொண்டதாக இருந்தது. பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார். கதிர்வீச்சை அறியும் கருவிகளுடன் பாபா அணுமின் நிலைய அதிகாரிகள் வந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து கதிர்வீச்சு வருவதைக் கண்டுபிடித்து தேடி எடுத்தார்கள்.

ஓராண்டுக்கு முன்பு மணலியில் உள்ள பைப் தயாரிக்கும் கம்பெனியில், பாபா அணுமின் நிலையத்தில் இதேபோன்ற வேதிப்பொருள் திருடுபோனதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தப் புகாரும் பதிவாகவே இல்லை.

இவை நம் உள்நாட்டுத் திருடர்களால், அவர்களுக்கே அதன் மதிப்பு தெரியாமல் நடந்த திருட்டுகள். ஆனால், தீவிரவாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு இத்தகைய கதிர்வீச்சுப் பொருள்களின் மதிப்பு தெரியும், அதன் ஆபத்து தெரியும். அதன் பயன்பாடுகளும் அத்துப்படி. அப்படியானால், தொழில்துறைப் பயன்பாட்டிலும்கூட இந்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது புரியும். இது அரசுக்குப் புரியாதவரை நமக்கு அணு அளவும் பாதுகாப்பு இல்லை!

*** Thanks Dinamani ****