Thursday, May 5, 2011

தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி!

கொல்லப்பட்டார் ஒசாமா பின்லேடன்!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அந்த அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. நிச்சயம் இது நல்ல செய்திதான், அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல... உலகுக்கே!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்டு, ஒசாமாவை அழித்தே விட்டது அமெரிக்கா. ஆனால், ஒசாமா எப்படி உருவானார்?
'ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடன்’- இதுதான் ஒசாமாவின் முழுப் பெயர். பிறந்த இடம் ரியாத், சவுதி அரேபியா. பிறந்த நாள் மார்ச் 10, 1957. ஒசாமாவின் தந்தை முஹம்மது பின் அவாத் பின்லேடன் பெரும் பணக்காரர். சவுதி அரச குடும்பத் தோடு மிக நெருக்கமான உறவுவைத்து இருந்த முஹம்மது பின் அவாத் பின்லேடனுக்கு, ஏராளமான மனைவிகள். அவர்களில் 10-வது மனைவியான ஹமிதாவுக்கு ஒசாமா பிறந்தார். தந்தையின் 54 பிள்ளைகளில் 17-வது பிள்ளை ஒசாமா!
செல்வச் செழிப்பான சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ஒசாமாவின் இளம் பருவம், உறவுகள் சார்ந்து சந்தோஷமாக இல்லை. காரணம், ஒசாமா பிறந்த சில காலத்திலேயே அவருடைய பெற்றோர் பிரிந்தனர். பிறகு, அல் அத்தாஸ் என்பவரை மணந்தார் ஹமீதா. அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளோடு, மாற்றாந் தகப்பன் சூழலிலேயே வளர்ந்தார் ஒசாமா. சின்ன வயதிலேயே மதத்தின் மீது அவருக்குப் பெரிய ஈடுபாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.
கல்லூரி நாட்களில் ஒசாமாவுக்குப் பொருளாதாரம் மீது பெரிய நாட்டம் இருந்தது. பொருளாதாரமும் மேலாண்மைக் கல்வியும் அவர் கற்றதாகச் சொல்லப் படுவது உண்டு. பின்னாட்களில், ஒசாமா சிவில் இன்ஜினீயரிங்கும், மக்கள் நிர்வாகமும் படித்ததாகச் சொல்லப்படுவதும் உண்டு. ஒசாமாவின் 17-வது வயதில் அவருக்கு முதல் திருமணம் நடந்தது. முதல் மனைவியின் பெயர் நஜ்வா. பிறகு, ஒசாமா மேலும் நால்வரை மணந்தார். மொத்தம் அவருக்கு 25 பிள்ளைகள் இருப்பதாகச் சொல் கிறார்கள்!
ஒசாமாவை ஆயுத அரசியலை நோக்கியும் மத அடிப்படைவாத அமைப்பியலை நோக்கியும் தள்ளியது, ஆஃப்கன் மீதான சோவியத் ஒன்றியத்தின் தாக்குதல். அப்துல்லா அஸாமுடன் சேர்ந்து 'மஹ்தப் அல் கதாமத்’ அமைப்பில் செயல்படத் தொடங்கினார் ஒசாமா. தொடக்கத்தில், பெஷாவரில் இருந்தவாறு ஆஃப்கன் போருக்கான நிதியைக் குவித்துத் தருவதிலும் ஆயுதங்களை வாங்கித் தருவதிலும் ஒசாமா ஈடுபட்டு இருந்தார். சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக இதே அமெரிக்கா அந்த நாட்களில் ஒசாமாவுக்குப் பணம் கொடுத்தது. ஒரு கட்டத்தில் 'மஹ்தப் அல் கதாமத்’ அமைப்பில் இருந்து பிரிந்தார். இன்னும் தீவிரமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போது அவர் உருவாக் கியதுதான் 'அல்-கொய்தா’!
தொடக்கத்தில் அல்-கொய்தாவின்நோக்கம், சுதந்திர ஆஃப்கனை உருவாக்குவதாகவே இருந்தது. 1989-ல் சோவியத் படைகள் ஆஃப்கனில் இருந்து வெளியேறியதும், ஒசாமா அரேபியா திரும்பினார். சிறிது காலம் அல் -கொய்தா அடங்கி இருந்தது. குவைத் படை எடுப்பைக் காரணம் காட்டி, இராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், அரபு உலகம் அமெரிக்கா வசமாகிவிடும் என்பதை ஒசாமாவுக்கு உணர்த்தியது. 'எதுவாக இருந்தாலும், நமக்குள் பேசிக்கொள்ளலாம். முஸ்லிம்கள் அல்லாதோருக்கு உதவ வேண்டாம்!’ என்று அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் ஒசாமா. இதற்காக சவுதி மன்னரையும் சந்தித்தார். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் நேரடியாக இறங்கியது அல்-கொய்தா.
1990-களிலேயே அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான 'எஃப்.பி.ஐ.’ அல்-கொய்தாவைக் கட்டம் கட்ட ஆரம்பித்துவிட்டது. சதித் திட்டங்கள் பின்னணியில் பலர் பிடிபட்டனர். 1993-ல் உலக வர்த்தக மையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின் அமெரிக்கா அல்-கொய்தாவைப் பின்தொடர ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் சவுதிக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கினார் ஒசாமா. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாக 1992-ல் ஏமனுக்குச் சென்றார். அங்கே இருந்து அரபு நாடுகளில் செயல்படும் எல்லாத் தீவிரவாத அமைப்புகளுடனும் அவர் கை கோக்க, தொடர்ந்து சூடான், எகிப்து, லிபியா எனப் பல்வேறு நாடுகளாலும் தேடப்படும் நபராக 1996-ல் ஆஃப்கனின் ஜலாலாபாத்துக்கு வந்தார் ஒசாமா. முல்லா உமருடன் கை கோத்தார்.
தாலிபன்கள் ஆண்ட-முல்லா உமர் காலத்திய ஆஃப்கன்தான், ஒசாமாவின் கனவு தேசம். மக்களைக் கற்காலத்துக்குத் திரும்ப அழைத்துச் சென்ற அந்த ஆஃப்கன்தான், 'உலகின் ஒரே இஸ்லாமிய நாடாகச் செயல்படு கிறது!’ என்று ஒசாமா சொன்னார்.
மெரிக்காவில் 2001 அல்- கொய்தா நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகம் முழுவதும் தேடப்படும் நபர் ஆனார் ஒசாமா. உலகெங்கும் 'ஜிஹாதி’ என்ற சொல் பிரபலமானது. கடவு ளின் பெயரால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்; எவ்வளவு பயங்கரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றலாம் என்று முடிவெடுத்தவர்களுக்கு எல்லாம் முன்னோடி ஒசாமாதான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்தது அமெரிக்கா. 2007-ல் இந்தத் தொகை 50 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது. 30 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஒசாமாவைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தேடல் வேட்டை, பாகிஸ்தானின் அப்போடாபாத்தில் நடந்த இறுதித் தாக்குதலில் வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது!
ஆயுதக் குழுக்கள் மூலம் அரசுகளைத் தகர்க்கலாம் என்பதுதான் ஒசாமாவின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், உலகின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான காரணங்களுக்காகக்கூட ஆயுதக் குழுக்கள் செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதுதான், ஒசாமாவின் ஒரே 'சாதனை’! ஒசாமாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மாறியது. உலகில் தனி ஒரு நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா அரசுகளும் கை கோத்தன. ஆயுதக் குழுக்களை அழிப்பதில் ஒன்றிணைந்தன. பல தேசியப் போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டன, ஈழப் போராட்டம் உட்பட!
''அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது. எல்லா நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் முகவர்கள்தான் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் சம்மதிக்க வேண்டும்என்று நினைக்கிறது. எதிர்ப்பவர்களைப் பயங் கரவாதிகள் என்கிறது. யார் பயங்கரவாதி... அமெரிக்காவா? அமெரிக்காவின் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்ப் பவர்களா?''
- ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தன் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பதில் இது.
''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்கிறதோ, அதைச் செய்து முடிக்கும். உலகத்துக்கு நாம் மீண்டும் சொல்லும் செய்தி இதுதான்!''
- ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்தபோது, ஒசாமாவின் மரணத் தைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டது இது.
அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?