Wednesday, October 7, 2009

மூன்று பெரிய பொய்கள்

 என்.கணேசன்

http://enganeshan.blogspot.com/2009_08_01_archive.html

இன்றைய உலகம் மூன்று பெரிய பொய்களைப் பெரிதும் நம்புகிறது. அந்த நம்பிக்கையுடன் இயங்குகிறது. இக்காலத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் அந்தப் பொய்கள் மீதுள்ள நம்பிக்கை தான் என்று கூட சொல்லலாம்.

அந்த மூன்று பெரிய பொய்கள் -

1) அதிகமாக இருப்பதே நல்லது.
2) பெரியதாக இருப்பதே நல்லது.
3) வேகமாக இருப்பதே நல்லது.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நம்பிக்கைகளில் தவறென்ன இருக்கிறது என்று தோன்றலாம். இவையெல்லாம் உண்மையல்லவா என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் தெளிவாக சிந்தித்து ஆராய்ந்தால் நமக்கு உண்மை விளங்கும்.

முதல் பொய்யைப் பார்ப்போம். அதிகமாக இருப்பதே நல்லது, அதிகமாகப் பெற்றிருப்பதே வெற்றி என்கிற எண்ணம். முக்கியமாக பணமும், சொத்துகளும், அதிகாரமும் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு வெற்றி என்ற கருத்து இன்றைய காலத்தில் வேரூன்றி வருகிறது. இன்னும் சொல்லப் போனால் வெற்றியின் அளவே இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

தோன்றுகிற அளவுக்கு அது உண்மை தானா என்று பார்க்க அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எந்த அளவு சந்தோஷமாகவும் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள் என்று தூரத்திலிருந்து பார்க்காமல் அருகே போய்ப் பாருங்கள். இல்லா விட்டால் அவர்களுக்கு மிக அருகே இருப்பவர்களைக் கேளுங்கள். பணம், சொத்து, அதிகாரம் - இந்தப் பட்டியல் நீளுமளவு சந்தோஷம், நிறைவு, நிம்மதி பட்டியல் இருக்கிறதா என்று பாருங்கள். அவர்களுடைய எல்லா வெற்றியும் வெளித் தோற்றத்துடன் நின்று போகிறது என்பது உங்களுக்குப் புரியும்.

அதிகமாக இருப்பவர்களுக்கு இழப்பதற்கும் அதிகமாக இருக்கிறது. எனவே இழந்து விடுவோமோ என்ற பயம் இருப்பதை நிம்மதியாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது என்று கூட சொல்லலாம். பலர் இருப்பதை அனுபவிக்காமல் ஏதோ ஒரு துஷ்ட சக்தியால் பீடிக்கப் பட்டவர்கள் போல் எந்திரத்தனமாக அதை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போகும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் இவ்வளவு இருக்கிறது என்று அடுத்தவருக்குக் காட்டும் முயற்சியின் அளவுக்கு சேர்த்ததை பயன்படுத்துவதற்கான முயற்சி இருப்பதில்லை. அதிகமாக சேரச் சேர பொறாமை பிடித்தவர்கள் கூட்டமும், அதை அபகரிக்க நினைக்கிறவர் கூட்டமும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சமயம் பார்த்துக் காத்திருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியும் வர, நிம்மதி காணாமல் போய் விடுகிறது. இப்போது சொல்லுங்கள்- மிக அதிகம் உண்மையிலேயே சிறப்பானது தானா? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னோர்கள் சொல்வது உண்மையல்லவா?

இரண்டாவதாக, பெரியதாக இருப்பதே நல்லது என்ற பொய். பிரபலமாக இருக்க வேண்டும், எல்லோரும் மிகவும் முக்கியத்துவம் தரும் நிலையில் இருக்க வேண்டும், நாலு பேர் பெருமையாகப் பாராட்டும்படி இருக்க வேண்டும், அதுவே சிறந்த வெற்றி, நல்லது என்கிற இந்த நம்பிக்கையும் மேலோட்டமாகப் பார்த்தால் இதிலென்ன குறை என்று கேட்கத் தோன்றும். மிகப் பிரபலமான மனிதர்கள் பெரும்பாலும் சுதந்திரம் என்ற ஒன்றை போகப் போக இழந்து விடுகிறார்கள். மிகப்பிரபலமான நடிகர், நடிகைகளைப் பாருங்கள். எங்கும் அவர்களைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காமிராக்கள் போகிற பக்கமெல்லாம் காத்துக் கொண்டு இருக்கும். ஆரம்பத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் போது பெருமைப்படும் அவர்கள் பின்னாளில் மற்றவர்கள் கண்ணில் படாமல் தங்கள் இஷ்டப்படி இருக்கப் படாத பாடு பட வேண்டியிருக்கும்.

பெரிய அரசியல்வாதிகளைப் பாருங்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளை வாய் விட்டுச் சொல்ல முடியாதவர்களாய் பல நேரங்களில் இருப்பார்கள். தெரியாமல் சொல்லி விட்டால் அது பெரும்பான்மை மக்களிடம் எதிர்ப்பைக் கிளப்பினால் நான் அப்படி சொல்லவில்லை என்று ஆரம்பித்து ஏதேதோ பிதற்றி அவஸ்தைப் படுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். பின் மறந்து கூட நினைத்தபடி பேசவோ, நடந்து கொள்ளவோ முடியாமல் மற்றவர்கள் நினைக்கிறபடி பேசி, நடந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எத்தனை தான் பணமும், சொத்தும் இருந்தாலும் தங்கள் இஷ்டப்படி செயல்படவோ, பேசவோ முடியாத பிரபலங்கள், பிரபலங்களாக இருப்பதற்கு பெரும்பாலும் சுதந்திரத்தையே விலையாகத் தரவேண்டி வருகிறது.
சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து மனிதன் பெறத்தக்கது தான் என்ன?

மூன்றாவதாக, வேகமே நல்லது என்கிற பொய். இப்போதைய உலகின் மந்திரச் சொல்லே வேகம் (FAST) தான். எதையும் வேகமாகப் பெற வேண்டும், எங்கும் வேகமாகச் செல்ல வேண்டும், எதுவும் வேகமாக மாற வேண்டும்-அதுவே பெருமைக்குரிய விஷயம் என்ற சிந்தனை தான் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஆம்புலன்ஸ் போவது போல் மிகவும் அவசரத்தில் வண்டியோட்டி பல பேருக்கு பல இடைஞ்சல்கள் செய்து கடைசியில் ஒரு பெட்டிக் கடையின் முன் வண்டியை நிறுத்தி சாவகாசமாக சிகரெட்டைப் பற்ற வைத்தபடி வேடிக்கை பார்க்கும் சில இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். சிறிது ஏமாந்தால் சிகரெட்டிற்குப் பதிலாக அந்த இளைஞனே சாம்பலாகப் போயிருக்க எத்தனையோ விபத்து வாய்ப்புகள் இருக்கும் வண்ணம் பறந்து வந்து சாதிப்பது சிகரெட் பிடிப்பது தானா?

எதையும் வேகமாகப் பெற வேண்டும் என்ற ஆவல் பலரை எத்தனையோ பேரை நியாயமற்ற குறுக்கு வழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர் அப்படிக் கிடைக்காத போது தவித்துப் போகிறார்கள். இதனால் வேகமாகக் கிடைப்பதென்னவோ இரத்த அழுத்தமும், நோய்களும் தான். வண்டிகளில் அதிவேகமாகப் போகிறவர்கள் தாங்கள் நினைத்த இடத்திற்குப் போவதற்குப் பதிலாக ஆஸ்பத்திரியில் சேர்வதும் உண்டு. மற்றவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துவதும் உண்டு. வாழ்க்கையில் வேகமாகப் போகிறவர்கள் வாழ்க்கையின் முடிவில் தான் இந்த வேகத் தூண்டுதலில் வாழ மறந்து விட்டோம் என்று உணர்கிறார்கள்.

எதுவும் நம்முடைய உண்மையான இயல்புக்கும், உண்மையான தேவைக்கும் ஏற்ற அளவு இருப்பது தான் நமக்கு நல்லது. பொய்களை அஸ்திவாரமாகக் கொண்ட எந்த வாழ்க்கை முறையும் என்றுமே நிரந்தர நிம்மதியைக் கொடுப்பதில்லை. எனவே இந்தப் பொய்களை உலகம் எவ்வளவு தான் விளம்பரப்படுத்தினாலும் ஏமாந்து போகாதீர்கள்.

- என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/2009_08_01_archive.html

(இவரின் படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது)

Tuesday, October 6, 2009

குவாத்ரோச்சி.... சோனியா காந்தியின் உறவினர்,

1989-மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையக் காரணமாக இருந்த ரூ. 64 கோடி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், கடந்த மக்களவைத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியும் பேச விரும்பாத அளவுக்கு மிகவும் சிறிய, ரொம்பவும் பழைய ஊழலாக மாறிப்போய், இந்தியக் குடிமக்களும் மறந்துவிட்ட நிலையில், எங்க அப்பன் குதிரில் இல்லை என்ற கதையாக, தானே இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு.


மற்றவர்கள் எல்லாரும் போஃபர்ஸ் ஊழலை மறந்துவிட்டாலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் மட்டும் மறக்க முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது.

ஒட்டாவியோ குவாத்ரோச்சி, அர்ஜென்டினா நாட்டில் கைது செய்யப்பட்டபோது, அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் தோற்றுப்போய், அர்ஜென்டினாவில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், "குவாத்ரோச்சி தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் இந்திய அரசு சமர்ப்பிக்கவில்லை' என்று அம்பலப்படுத்தியபோதே, இந்த வழக்கின் கதி என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துபோன ஒன்று.

இந்த வழக்கு வெறும் "கயிற்றரவு' என்று புத்திக்கு எட்டிவிட்ட நிலையிலும்கூட, அதில் இன்னமும் உயிர் இருப்பதைப்போலவும், அந்த உயிரசைவில் அது நல்லபாம்பு அல்ல, வெறும் தண்ணிப்பாம்பு என்று உலகை நம்பச் செய்யவும் ஆட்சியாளர்கள் நடத்தும் இந்தப் போலி நாடகம், அவர்கள் செய்த ஊழலைவிடவும் வெட்கக்கேடாக இருக்கிறது.

குவாத்ரோச்சி மீதான வழக்கைத் திரும்பப் பெறுவதற்காக மத்திய அரசு குறிப்பிடும் காரணங்கள் வலுவற்றவை. அவரை இன்னொரு நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை என்ற காரணத்துக்காக ஒரு வழக்கைத் திரும்பப் பெறுவது என்ற முன்னுதாரணம் ஏற்படுமானால், தொடர் வெடிகுண்டு வழக்கில் மறைந்துவாழும் தாவூத் இப்ராகீம் மீதான வழக்கையும் திரும்பப் பெறுவார்களா?

இந்த வழக்கை நடத்துவதற்கான சாதகமான அம்சம் ஏதுமில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்ததாலேயே வழக்கைத் திரும்பப் பெறுவது என்றால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் கொலைவெறித் தாக்குதல் செய்த தீவிரவாதிகளில் ஒருவரான கசாபு-வுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரத்தையும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு நிச்சயமாகத் தரப்போவதில்லை என்கிற காரணத்தால், அவர் மீதான வழக்கை நடத்தாமல் விட்டுவிடுவது சரியாக இருக்க முடியுமா?

அல்லது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் சொல்வதைப் போல, இந்த வழக்கில் தேவையில்லாமல் மக்கள் பணம் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது என்பது சரியான வாதம் என்றால், மத்திய அரசு நிறைய வழக்குகளை நடத்தாமல் இருந்தாலே கருவூலப் பணம் கோடிகோடியாய் மிச்சமாகுமே!

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகார்களை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதைக் காட்டிலும், நிரூபிக்கக் கூடாது என்பதற்காகவே செயல்பட்டதற்கான ஆதாரம்தான் அதிகம்.

குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் உறவினர். ஆகவே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இந்திய அரசில் செல்வாக்குடன் வலம் வந்தவர்.

ஆயுத பேரத்தில் கணிசமான தொகை இவர் மூலம் கைமாறியது என்பது இவர்மீதான குற்றச்சாட்டு. குவாத்ரோச்சிக்கும் அவரது மனைவி மரியாவுக்கும் லண்டனில் உள்ள பிஎஸ்ஐ ஏஜி வங்கியில் தனித்தனியாக இரண்டு சேமிப்புக் கணக்குகள் இருப்பதும், அவற்றில் முறையே 3 மில்லியன் யூரோ, 1 மில்லியன் யூரோ டாலர்கள் இருப்பில் உள்ளதை இன்டர்போல் அமைப்பு வெளியிட்டது. இந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

ஆனால், 2006-ல், காரணம் ஏதுமின்றி இந்த முடக்கத்தை நீக்கியது இந்திய அரசு. தேடப்படும் நபர் என்பதான "ரெட் கார்னர் நோட்டீûஸ'யும்கூட இன்டர்போல் விலக்கிக் கொள்ளும்படிச் செய்ததும் மத்திய புலனாய்வுத் துறைதான்.

இந்திய அரசே இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு, தற்போது இதையே இயலாக் காரணங்களாகக் காட்டி, வழக்கைத் திரும்பப்பெற மனு செய்கிறது. போஃபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிருடன் இருப்பவர் குவாத்ரோச்சி மட்டுமே. அவரைக் காப்பாற்ற, வழக்கைக் கொன்று புதைக்கிறார்கள்.

இந்திய அரசுதான் வழக்கைத் தொடுத்தது. அதே இந்திய அரசு இப்போது வழக்கை திரும்பப் பெறுகிறது.

எந்தத் தவறும் செய்யாத சீதையை உலகத்தின் திருப்திக்காக தீயில் இறங்கச் செய்த அதே ராமன்தான், தவறு செய்ததால் கல்லாய்ப்போன அகலிகை மீது தன் கால்பட பாவத்தைப் போக்குறான். சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்களுக்குக் குற்றம் செய்தவர் மீதுதான் எப்போதும் பரிவு. அவர்களை மன்னிப்பதில்தான் எப்போதுமே அதிக ஆர்வம், அதிக அக்கறை!

நியாயங்களோ புதிரானது, புரியாமல் போனது...

முடிவற்ற கலப்படம்!

இரு தினங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மளிகைக் கடைகள் மற்றும் தேநீர்க் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி தேயிலைத் தூள் பொட்டலங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் 50 சதவீத தேயிலைத் தூள் கலப்படமானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நல்ல தேயிலையுடன் சாயம் தோய்க்கப்பட்ட மரத்தூள் கலந்து விற்கப்பட்டுள்ளது. சில தேயிலைத் தூள்களில் தேநீர் வாசனை தரும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை உடல்நலனுக்குத் தீங்கானவை என்பதில் சந்தேகம் இல்லை.


இதுபோன்று சோதனைகள் நடத்தப்படுவது புதிதல்ல. கடந்த மார்ச் மாதம் உதகையில் உள்ள ஒரு தேயிலைத் தொழிற்கூடத்தில் தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி, 16,000 கிலோகிராம் கலப்படத் தேயிலைத் தூளைப் பறிமுதல் செய்தனர். செப்டம்பர் மாதம் சென்னை மாநகரில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகளில் 300 கிலோ கிராம் கலப்படத் தேயிலை கண்டறியப்பட்டது. தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது, 3,000 கிலோகிராம் கலப்படத் தேயிலைத் தூள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு தேநீர்க் கடை இருக்கிறது. இந்தியாவில் உள்நாட்டில் தேயிலையின் பயன்பாடு ஆண்டுக்கு 802 மில்லியன் கிலோகிராம். அதாவது ஒவ்வொரு தனிநபரும் 750 கிராம் தேயிலையைப் பயன்படுத்துகிறார்.

ஆனாலும், கலப்படத் தேயிலைத் தூள் நடைமுறையில் இருந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க முடியாததன் முதல் காரணம், தேயிலையின் அபரிமிதமான விலை. தேயிலைச் சந்தையில் கலப்படம் ஏற்பட முதல் காரணம் தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள்தான். ஏனென்றால் இவர்கள்தான் விலையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதனால், தேநீர்க் கடைகள் மற்றும் ஓட்டல்கள் தங்களுக்குக் கட்டுபடியான விலையில் தேயிலைத் தூளைத் தேடும்போது, அவர்களுக்குக் கிடைப்பது பெரும்பாலும் கலப்படத் தேயிலைத் தூளாகத்தான் இருக்கிறது.

பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, சிறு தேயிலைத் தோட்டங்களை வைத்திருப்போர் தங்கள் தேயிலையைத் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்த காலகட்டத்தில், பெரும் நிறுவனங்களைக் காட்டிலும் விலை மலிவாக நல்ல தரமான தேயிலை கிடைத்தது என்பது உண்மையே.

ஆனால், பெரிய நிறுவனங்களின் விலைக்கும் சிறு தேயிலைத் தோட்டங்களின் விலைக்கும் இடையே காணப்பட்ட பெரிய இடைவெளி, இடைத்தரகர்களை சிறுதேயிலைத் தோட்டங்களிடம் ஒட்டுமொத்த கொள்முதல் வணிகத்தில் ஈடுபட வைத்தது. நாளடைவில் இந்த இடைத்தரகர்கள்தான் பெரும் நிறுவனங்களின் வணிகப்பெயர்களில் தேயிலைப் பொட்டலங்களைச் சந்தைக்கு அனுப்புவதும், கலப்படத் தேயிலையை தேநீர்க் கடைகளுக்கு விநியோகம் செய்பவர்களுமாக மாறினர். இவர்கள் யார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியாதது அல்ல. ஆனாலும், "எல்லாரும் அறிந்த காரணங்களால்' இந்தக் கலப்படம் முடிவில்லாமல் தொடர்கிறது.

தேயிலைத் தூள் விலை அதிகமாக இருக்கும்வரை சந்தையில் கலப்படத் தேயிலைத் தூள் நுழைவதைத் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே. தேயிலை விலையை முறைப்படுத்தி, குறைந்த விலையில் கிடைக்கச் செய்தால் கலப்படம் தானாகவே ஒழியும். ஆனால் அதற்கு இந்தப் பெரிய நிறுவனங்கள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் போனால் போகட்டும் என்று மனமிரங்கினாலும்கூட நடக்காது. ஏனென்றால், இப்போது சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்டங்களை நேரடியாகவும் பினாமி பெயர்களிலும் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பவர்களில் பலரும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள்தான். இவர்கள் தங்கள் லாபத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள்.

தேயிலை விற்பனையில் இந்த நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையிலும், ஏற்றுமதியிலும் அடையும் லாபம் பல நூறு மடங்கு. இதில் முன்னிலை வகிப்பவை பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களுடன் டாடா தேயிலை போன்ற உள்நாட்டு ஜாம்பவான்கள் சிலரும் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கின்றனர். பன்னாடு, அல்லது உள்நாடு எந்த நிறுவனமாக இருந்தாலும் இவர்களின் ஒரே நோக்கம்-இந்தியத் தேயிலையை உலகச் சந்தையில் விற்றுப் பெரும் பணம் சம்பாதிப்பது மட்டுமே! முந்தைய நிதியாண்டில் இந்தியத் தேயிலை ரூ. 1,889 கோடிக்கு ஏற்றுமதியானது. இந்த ஆண்டு 20 சதவீதம் மேலும் கூடியுள்ளது. அதாவது ரூ. 2,275 கோடிக்கு ஏற்றுமதி.

இவ்வளவு வருவாயைப் பெறும் தேயிலைத் தொழில்துறையின் வருத்தமெல்லாம், உலகச் சந்தையில் தங்கள் பங்கு மிகக் குறைவாக இருக்கிறதே என்பதுதான். உள்நாட்டில் இப்படியான அதிக விலை நிர்ணயிப்பதால் கலப்படத் தேயிலை மிகுந்துபோய், மக்கள் நோய்க்கு ஆளாகிறார்களே என்று கவலைப்பட யாருமில்லை. அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இவர்களோடு "தொழிலதிபர்'களாகக் கலந்துவிட்டபோது, இந்தக் கலப்படம் குறித்து மக்களோடு மக்களாகக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?