Wednesday, January 27, 2010

கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.

ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?
NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

http://software.nhm.in/products/writer


எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

Monday, January 25, 2010

போலி மருந்துகளும்,போதை மருந்துகளும்!

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.

1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.

போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.
இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?
மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!