Tuesday, December 1, 2009

"அணு' அளவும் இல்லை

அணுமின் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதால் கடந்த மாதம் 16-ம் தேதி அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி கைது செய்யப்பட்ட பிறகுதான் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசுக்கு துப்பு கிடைத்தது.


சரியாக 12 நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் கார்வார் அருகே உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் மிகை கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது, வழக்கமாக அவர்கள் உட்படுத்தப்படும் சிறுநீர் சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. இதற்குக் காரணம், அணுஉலைக் கூடத்தில் பணியாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர் குடிநீரில் டிரைடியம் கலந்திருந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.

இதுவே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயம். ஆனாலும் இதைவிட ஒரு படி மேலேபோய், "இந்த அணுஉலைக் கூடத்தில் எந்த இடத்திலும் கனநீர் கசிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது' என்று அணுமின் நிலையம் அறிவித்திருப்பது நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அணுமின் நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், வெளியிலிருந்துதான் டிரைடியம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அர்த்தமா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

அணுமின் உலைக்கூடங்களில் யுரேனியம் பயன்படுத்தும்போது அதைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கனநீரின் காரணமாக, மிகச்சிறிய அளவிலான டுடேரியம், டிரைடியம் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இதுதான் ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள். இத்தகைய ஆபத்தான மூலப்பொருள் தற்போது குளிர் குடிநீர்த் தொட்டிக்கு வந்த டிரைடியம், நாளை வெளியே செல்லாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அணுமின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்களஎன்று அமெரிக்கா துப்பு கொடுத்தால், ஏதோ பயங்கரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் வந்து தாக்கியதைப்போல துப்பாக்கிகளுடன் வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அணுமின் நிலையம் போன்ற ஓர் இடத்துள் புக வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வர மாட்டார்கள். விஞ்ஞானிகளுக்கு இணையான அறிவுடன் கருப்பு ஆடுகளாகத்தான் வருவார்கள் என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

டிரைடியம் போன்ற கதிர்வீச்சுப் பொருளை அதே உலைக்கூடத்தின் குடிநீரில் கலப்பது மட்டுமல்ல, எந்தவொரு நகரத்தின் குடிநீர்த் தொட்டியிலும்கூட கலந்துவிட முடியும் என்பதை இந்த அணுமின் நிலையங்களும், அரசும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய அணுஉலைக் கூடங்களைத் திறக்க தயாராகி வருகிறோம். எத்தகைய பாதுகாப்பை இந்திய அரசு நமக்கு வழங்கவுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் கல்பாக்கம் பாதிக்கப்பட்டபோது இந்திரா காந்தி அணுமின் நிலையமும் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணுஉலைக் கழிவுப் பொருள்களும் பேரலையால் வெளியேறியதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் அணுமின் நிலையம் அதை மறுத்தது. சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால், கூடங்குளம், கல்பாக்கம், மும்பை பாபா அணுஉலைக் கூடம் எல்லாமும் கடலோரத்தில்தான் இருக்கின்றன.

பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தின் தொழில்துறை பாதுகாப்பில்கூட நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவை களவுபோகும்போது அந்த நிறுவனமும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் படும் அவதி சொல்லிமாளாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் உள்ள நிறுவனத்தில் பாபா அணுமின் நிலையம் வழங்கிய பயன்படுத்தப்பட்ட யுரேனியம் திருடுபோனது. திருடியவருக்கு அதன் மதிப்போ ஆபத்தோ தெரியாது. அவரைப் பொருத்தவரை அது பொருத்தப்பட்டிருந்த தேனிரும்பு மட்டுமே மதிப்பு கொண்டதாக இருந்தது. பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார். கதிர்வீச்சை அறியும் கருவிகளுடன் பாபா அணுமின் நிலைய அதிகாரிகள் வந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து கதிர்வீச்சு வருவதைக் கண்டுபிடித்து தேடி எடுத்தார்கள்.

ஓராண்டுக்கு முன்பு மணலியில் உள்ள பைப் தயாரிக்கும் கம்பெனியில், பாபா அணுமின் நிலையத்தில் இதேபோன்ற வேதிப்பொருள் திருடுபோனதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தப் புகாரும் பதிவாகவே இல்லை.

இவை நம் உள்நாட்டுத் திருடர்களால், அவர்களுக்கே அதன் மதிப்பு தெரியாமல் நடந்த திருட்டுகள். ஆனால், தீவிரவாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு இத்தகைய கதிர்வீச்சுப் பொருள்களின் மதிப்பு தெரியும், அதன் ஆபத்து தெரியும். அதன் பயன்பாடுகளும் அத்துப்படி. அப்படியானால், தொழில்துறைப் பயன்பாட்டிலும்கூட இந்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது புரியும். இது அரசுக்குப் புரியாதவரை நமக்கு அணு அளவும் பாதுகாப்பு இல்லை!

*** Thanks Dinamani ****

No comments: