Tuesday, September 29, 2009

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

எம் . சடகோபன் (Published in Dinamani)

வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் சிக்கலின்றி ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், கல்வி மிகமிக அவசியம். கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பொருத்துத்தான் அந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.

கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும். அனைத்துத் துறைகளிலும் மேல்நிலை அடைந்தால்தான் வல்லரசாக முடியும்.

ஆராய்ச்சிகளுக்கும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி இல்லாதபோது எவ்வாறு வல்லரசாக முடியும்?

இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடிப்பவர்களில் 10 சதவீதம் பேர்தான் உயர்கல்வி பயிலச் செல்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆரம்பக் கல்வியைக் கூட தட்டுத்தடுமாறி முடிக்க வேண்டிய நிலையில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்றளவில் உயர்கல்வி என்பது எட்டாக்கனிதான்.

மக்கள்தொகை அதிகரிப்பு, நாட்டின் செல்வ வளம் அதிகரிப்பு, இடைநிலைக் கல்வியின் விரிவாக்கம் போன்றவற்றின் காரணமாக உயர்கல்வியின் தேவையும் அதிகரிக்க நேர்ந்தது. தனிமனிதனைப் பொருத்தவரை உயர்கல்வி என்பது அவனது சமூக அந்தஸ்தை உயர்த்தத் தேவைப்படுகிறது. தேசிய நிலையில் பார்த்தால் சமூகத்தை மறுசீரமைக்கவும், நாட்டின் மனித வளத்தைப் பெருக்கவும் உயர்கல்வி விரிவாக்கம் அவசியமாகிறது.

இன்று கல்விக்கூடங்கள் தனியார்களின் பிடியில் சிக்கியுள்ளன. பெரும்பாலான கல்விக்கூடங்கள் கல்வி விற்பனைக் கூடங்களாக மாறிவிட்டன. அரசு கல்விக்கூடங்களில் பெரும்பாலானவை ஆள் இல்லா பாலைவனங்களாகக் காட்சி அளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பற்றாக்குறை, பணத்துக்காக நியமனம், விடைத்தாள் திருத்தலில் அலட்சியம், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி, போலிச் சான்றிதழ்கள் என்று கல்வியின் தரம் தாழ்ந்து கொண்டே செல்கிறது.

அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த இந்த மண்ணில் குறிப்பாக வடமாநில கிராமங்களில் ஆரம்பக் கல்வியே எட்டாக்கனியாக உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, அவர்கள் எவ்வாறு உயர்கல்வியைப் பற்றிச் சிந்திக்க முடியும். பணக்காரக் குடும்பங்களில் உள்ள வடஇந்திய மாணவர்கள் ஆரம்பக் கல்விக்குப் பின் உயர்கல்விக்காக தென்இந்தியாவை நோக்கிப் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தென் இந்தியாவில் தனியார் பொறியியல் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழங்களும் அதிகம் உள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.

அண்மைக்காலங்களில் அகில இந்திய அளவில் ஏராளமான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு தென்இந்தியாவில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

முறைகேடாகச் சம்பாதித்த பணத்துக்கு முழுப் பாதுகாப்பான முதலீட்டுச் சந்தையாக இருப்பது பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்தான்.

எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் புதிது புதிதாக பொறியியல் கல்லூரிகளையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் துவக்குவதிலிருந்து இதை அறியலாம்.

இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்களாகி மரியாதையை இழந்து வருகின்றன. மேலும், கல்வியின் தரமும் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது.
சில அரசியல்வாதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழங்களின் வேந்தராகவும், சிலர் ஏராளமான கல்வி நிறுவனங்களின் சொந்தக்காரர்களாகவும் கோலோச்ச முடிவதற்குக் காரணம் அரசியல் தலையீடுதான்.

ஒருகாலத்தில் தமிழகப் பொறியியல் மாணவர்கள் அமெரிக்காவில் ஐ.டி. உள்பட பல்வேறு துறைகளில் உயர்பதவிகளை வகித்தனர். அப்போது ஆசிரியர்கள் முதல் துணைவேந்தர் வரை உள்ள பதவிகளுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் இருந்ததே முக்கியக் காரணம். ஆனால் இன்று... துணைவேந்தர் நியமனம் அரசியல் கட்சியினரின் குறிப்பாக ஆளுங்கட்சியினரின் சிபாரிசு இல்லாமல் நடப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உழைப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

மேலும், கோடான கோடிப் பணத்தை இறைத்து, தேர்தலில் வெற்றி பெற்று வரும் மக்கள் பிரதிநிதிகள் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக உழைக்க முடியுமா?

இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இளைஞர்கள்தான் உள்ளனர். அதுவும் கிராமப்பகுதியில்தான் அதிகம் உள்ளனர். அவர்களை அறிவுடையவர்களாக வளர்த்தால்தான் நாட்டின் பொருளாதாரம் செழுமை பெறும்.

வரும்காலத்தில் ஏழை, பணக்கார நாடு என்ற பாகுபாடு மறைந்து அறிவாளிகள், அறியாமையாளர்கள் நாடு என்ற பாகுபாடுதான் இருக்கும் என்பதை கல்வி முதலீட்டாளர்கள் அறிய வேண்டும். தங்கள் கல்லூரி பற்றி பிரபலப்படுத்தி மூளைச்சலவை செய்வதுடன், மாணவர்களின் பெற்றோர்களை கடனாளிகளாக்கும் இவர்கள் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் சிந்தை கொள்ள வேண்டும்.

பெரும் பணக்காரர்கள் மட்டுமே உயர்கல்வியை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலைக்குக் கல்வியை அரசியல்வாதிகள் கொண்டு சென்று விட்டனர். பணம் ஒன்றே குறிக்கோள் என்ற நிலையில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களால் சாமானியனுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. அரசியல் சதுரங்கத்தால் வீணாய்ப்போகும் கல்வியை மீட்க வேண்டியது அரசின் கடமை. இனியும் காலம் தாழ்த்தாமல், ஏழை எளியவர்களுக்கும் உயர்கல்வி தாராளமாகக் கிடைக்க அரசு முற்போக்குத் திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியமாகும்.

No comments: