Monday, September 14, 2009

காத்திருக்கும் ஆபத்து...

கே.எஸ். இராதாகிருஷ்ணன்  --தினமணி.

அப்பப்பா என்ன வெயில்? தாங்க முடியவில்லையே! மலை வாசஸ்தலங்களிலும் வெயிலின் சூடு தாங்க முடியவில்லை என்ற பேச்சு எல்லா இடங்களிலும் நமக்குக் கேட்கிறது. பூமிப்பந்து ஆபத்தான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இப்பூவுலகில் இதனால் மக்கள்தொகையே குறைந்துவிடும் என்கிற அபாய அறிகுறிகளும் தென்படுகின்றன.

2040-ம் ஆண்டில் ஆர்டிக் போன்ற பனிப் பாறைகள் மட்டுமல்லாமல் இமயத்தில் உள்ள பனிப்பாறைகளும் உருகி, இல்லாமல் போய்விடும் என்ற ஆராய்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளான பூமத்திய ரேகைக்குத் தென் பகுதியில் உள்ள நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகளில் உள்ள மக்கள் இந்தப் புவி வெப்பத்தால் பெரும் அபாயத்திற்கு உள்ளாக இருக்கின்றனர். இந்தக் கொடிய இயற்கைச் சூழலை மாற்ற உலக சமுதாயம் உடனே நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறான பாதுகாப்பற்ற சுற்றுச்சூழலுக்குக் காரணம் என்ன என்று பார்த்தால் மக்காத - அழியாத கழிவுகளை பூமியில் சேர்ப்பது, அணு சோதனை, அணுக்கழிவுகளால் ஏற்படும் வெப்பமும் அதனுடைய விஞ்ஞான மாற்றங்கள் போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணிகளாக அமைந்துள்ளன. கார்பன் டை ஆக்சைடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்படுவதால் சூரிய வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டிய ஓசோன் படலத்தில் பல இடங்களில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஓட்டைகளுக்குக் காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் ஓடும் மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு ஆகும். இன்றைக்கு உள்ள வெப்பத்தைவிட இன்னும் 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் உலகம் பெரும் கேட்டிற்கு உள்ளாகும். மானுடம் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இந்த ஆபத்துகள் நமக்கு எதிராக நாமே உருவாக்கியவை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

இந்த இயற்கைச் சூழல் குறித்து உலக அளவில் பேசப்பட்டும், நடவடிக்கைகள் வேண்டும் என்று முயற்சிகள் எடுத்தும் இதுவரை அவையெல்லாம் முயற்சிகளாகவே தொடர்கின்றனவே தவிர செயல்பாட்டில் இல்லை. மேலை நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத உற்பத்தி, போர்க்கருவிகள் போன்றவற்றால் இந்தத் தேவையற்ற ஆபத்தான இயற்கைச் சூழல் ஏற்பட்டுள்ளது. இச்சூழல் குறித்து 10-15 ஆண்டுகளாக உலக அளவில் உச்சி மாநாடுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன.

ஆர்ஜென்டினா தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மாநாட்டில் பசுமைப் பாதுகாப்புப் பற்றியும், உலகத்தில் வெப்பத்தாக்குதல் பற்றியும் முதன்முதலில் பேசப்பட்டன. தொடர்ந்து க்யூட்டோ மாநாட்டில் அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் தலைமையில் நடந்த மாநாட்டில் இதுகுறித்து பேசியபோது, அமெரிக்கா தெளிவான விளக்கங்களை அளிக்காமல் கருத்துச் சொல்வதையே தவிர்த்துவிட்டது. அப்போது மற்ற நாடுகள் இதைக் கண்டிக்கவும் செய்தன.

ஒபாமா தேர்தலில் போட்டியிட்டபொழுது புவி வெப்பத்தைக் குறைப்பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பின் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவையில் இதுகுறித்து விவாதித்து உரிய திட்டங்களும், சட்டங்களும் வரையறுக்கப்பட்டன. கடந்த ஜூன் 8-ல் இத்தாலியில் நடைபெற்ற ஜி-8 நாடுகள் மாநாட்டில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா, சீனா, பிரேசில், தென் அமெரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 17 நாடுகள் கூடி புவி வெப்பத்தைத் தணிப்பது குறித்து விவாதித்து செயல் திட்டங்களை வரையறுத்தன.

கடந்த தொழிற்புரட்சி காலத்துக்கு முன்னால் இருந்த வெப்பநிலையைக் காட்டிலும் சற்று கூடுதலாகப் புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸýக்குக் குறைக்க நடவடிக்கைகளில் இறங்குவது என்பதில் அனைவரும் கருத்து ஒற்றுமை தெரிவிக்கிறோம். ஆனால், இது எப்போது சாத்தியமாகும் என்கிற காலவரையறையை நிர்ணயிப்பதில் பல குழப்பங்கள் எழுந்துள்ளன. 2050-ம் ஆண்டு என்ற காலவரையறை சரியாக வராது என்றும் குறைந்தபட்சம் 2030-க்குள் இந்த நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஓரளவு வெப்பத்திலிருந்து பூமியைக் காக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வளர்ந்த நாடுகளால்தான் இந்தக் கேடுகள் யாவும் ஏற்பட்டன. ஜி-8 நாடுகள்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஈடுபட வேண்டும். பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மாசு நிறைந்த வாயுக்களைக் கட்டுப்படுத்துவது பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டும். 4.50 டன் அளவுக்கு ஒரு தனி மனிதன் மூலம் இந்த மாசு வாயுக்கள் வெளியேறுகின்றன. இது எதிர்காலத்தில் கூடுதலாகிவிடும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, சீனா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளிலிருந்து வெளியேறும் இந்த மாசு வாயுக்களைக் குறைத்தாலே ஓரளவு பிரச்னையை எதிர்கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் இந்தப் பிரச்னையைத் தட்டிக் கழிக்கின்றன. இந்தியா போன்ற முன்னேறும் நாடுகள் மீது வளர்ந்த நாடுகள் இதுகுறித்து தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. வளரும் நாடுகளுக்கு இடையே பன்னாட்டு ஒப்பந்தங்களில் வளர்ந்த நாடுகள் விதிக்கும் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தப் பிரச்னைக்குத் தாங்கள் முயற்சி எதுவும் மேற்கொள்ள மறுக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால் சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற நிலைதான்.

அமெரிக்கா 93 சதவிகிதம் தன்னுடைய இந்த மாசுக்களைக் குறைத்தால் போதும். அமெரிக்கா இந்தியாவைக் காட்டிலும் 20 மடங்குக்கு அதிகமாக இந்த விஷ மாசுபடுகின்ற வாயுக்களை வெளியேற்றுகிறது. அப்படி இருக்கும்போது, இந்தியா மற்றும் வளரும் நாடுகள் 2050-க்குள் 80 சதவீதம் இந்த மாசு வாயுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் உத்தரவிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

இப்படிக் கட்டுப்பாடுகள் விதிப்பதால் ஒருபுறம் வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது வளர்ச்சியில் பாதிப்பே இல்லாமல் தங்களைக் காத்துக் கொள்ளும். தான் மட்டும் தவறு செய்யலாம். மற்றவர்கள் தவறைக் குறைக்க வேண்டும் என்று வல்லான் வகுத்த விதிபோல் அமெரிக்காவும் ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளும் இந்தப் புவி வெப்பத்தைக் குறைக்க வேண்டி வளரும் நாடுகளின் விஷயத்தில் நடந்து கொள்வதை வன்மையாகக் கண்டிக்காமல் இருக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் 2050-க்குள் இதுகுறித்து கால நிர்ணயம் செய்யப்பட்டு இடைக்காலத்தில் இலக்குகள், நடவடிக்கைகள் என்ன என்பது ஜி-8 மாநாட்டில் குறிப்பிடாதது பெரிய சறுக்கல். இதை ஐ.நா. மன்றமும் வலியுறுத்தி உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை வரையறுப்பதற்கு எந்த ஆண்டை அடிப்படையாகக் கொள்வது என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. க்யூட்டோ மாநாடு 1990 என்று அறிவித்தது.

இந்த அடிப்படையை அமெரிக்கா 2005-க்கு மாற்றிவிட்டது. அப்படியானால் 2005-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டால் முடிவு செய்யப்பட்ட இலக்கும், பணிகளும் 1990-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது மிகக் குறைந்த அளவுகோலாகிவிடும்.

இந்த நடவடிக்கைக்கு உரிய நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், சர்வதேசச் சட்டங்களில் மாற்றம், அதற்கான ஒருங்கிணைப்புகள் குறித்து ஜி-8 மாநாட்டில் எந்தவிதமான திட்டங்களும் இல்லை. அதுமட்டுமல்லாமல், உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்போ ஒற்றுமையோ இல்லாத நிலையில் இதற்கான தீர்வு எப்படிக் கிடைக்கும் என்பதும் இன்றைய கேள்விக்குறி. புவி வெப்பத்தைத் தடுக்க உலக அளவில் உச்சி மாநாடுகள், விவாதங்கள், ஆய்வுகள் நடந்தவண்ணம் இருந்தாலும் இதுவரை ஆக்கபூர்வமான ஒரு முடிவை எட்டவில்லை என்பதும் வேதனையைத் தருகிறது.

இந்தக் கொடிய இயற்கைச் சூழலுக்குக் காரணமான, அதனால் லாபம் அடையும் நாடுகள் ஏதோ வேண்டா வெறுப்பாக அதனைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் போடப்பட்ட அணுகுண்டுகளால் ஏற்பட்ட கொடூர நிகழ்வுகளைவிட இந்த வெப்பம் தாக்குவதால் ஏற்பட இருக்கும் அழிவு அதிகம். அதுமட்டுமல்லாமல், மனிதகுலம் அழிந்து பூவுலகம் அழிவதற்குத்தான் தேவையற்ற விஞ்ஞானமா என்கிற கேள்வியும் எழுகிறது. புவியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க எரிமலைகள் வெடிக்கும். நில அதிர்வுகள், பூகம்பங்கள், சுனாமி, வறட்சி என்ற இயற்கைச் சீர்கேடுகள் ஏற்படும். இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லையே, ஏன்?

அணுசோதனை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்குத் தேவை என்பதை மறுக்கவில்லை. ஆனால் இன்று பன்னாட்டு அளவில் அணுசக்தி அழிவு சக்தியாக மட்டுமே பயன்படுகிறது என்பதுதானே உண்மை நிலை. விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்ட வசதிகள் அனைத்தும் பேரழிவுக்கு வழிகாட்டும் சக்திகளாக அல்லவா மாறிவிட்டிருக்கின்றன. இவ்வளவு கார்கள் தேவையா? மோட்டார் வாகனங்கள் வெளிப்படுத்தும் கழிவு வாயு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவில்லை. இன்று குளிர் சாதன அறைகள் (ஏ.சி), குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத வீடுகள் பணக்கார, மேல் மத்தியதர வகுப்பினர் மத்தியில் இல்லை. இதன் மூலம் வெளிப்படும் வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிக்கச் செய்கிறது என்பதை எத்தனைபேர் உணர்கிறார்கள்?

உலக சமாதானம், உலக ஒத்துழைப்பு என்று உதட்டளவு அக்கறையுடன் நின்றுவிடாமல், இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்தி இருக்கும் செயற்கை சவாலான பெரும் அபாயத்தைத் தீர்க்க உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் ஒரு குரலாகவும் ஓரினமாகவும் இணைவது காலத்தின் கட்டாயம்.

இதை உணர மறுத்தால், நமது வருங்காலச் சந்ததியினர் சந்திக்க நேரும் பயங்கரமான இயற்கைச் சீற்றங்களை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.

நமது முன்னோர்கள் நமக்கு நல்லதொரு உலகத்தை, நல்ல காற்று, நல்ல மண், நல்ல தண்ணீர் என்று வளமான உலகத்தை விட்டுச் சென்றனர். தொழிற்புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் நாம் பூமிப் பந்தை மாசுபடுத்தி ஓர் ஆபத்தான உலகை வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லப் போகிறோம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாமல் போனால், நாம் "மனிதன்' என்கிற பெயரில் அழைக்கப்படக்கூடத் தகுதி அற்றவர்கள். சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இதுவே. தாமதித்தால் ஆபத்து காத்திருக்கிறது...

No comments: