Tuesday, September 29, 2009

வாய்தா என்பதே வேலையாகி விட்டது!

கே. வீ. ராமராஜ்

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பல்லாயிரக்கணக்கான வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் பல லட்சக்கணக்கான வழக்குகளும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் பலர் தமது வழக்கு விரைவில் முடிவுக்கு வருவதில்லை என்றும், எப்போது பார்த்தாலும் வழக்கில் நீதிமன்றம் வாய்தா போட்டு விடுகிறது என்றும் சொல்வதை பல இடங்களில் கேட்க முடிகிறது. இதைப்போலவே குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றங்கள் பல குற்றவாளிகளை விடுதலை செய்து விடுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டையும் பல இடங்களில் கேட்க முடிகிறது. பொதுவாக, நீதிமன்றங்களில் வாய்தா என்பதே வேலையாகி விட்டது மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுவதற்கான காரணங்களை அலசி ஆராய வேண்டிய தருணம் இது.

விரைவாக நீதியைப் பெறுவதற்கான உரிமையும் எளிதில் நீதியை அணுகுவதற்கான உரிமையும் மிக முக்கியமான மனித உரிமைகள் ஆகும். இதனையே உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் பலமுறை வலியுறுத்தியுள்ளன.

இருப்பினும் விரைவில் வழக்குகளை முடிப்பதற்கும் எளிதில் மக்கள் நீதிமன்றங்களை அணுகுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வது யார்? அதற்கான திட்டம் என்ன? என்ற கேள்விகள் தொடர்கின்றன. தாவாக்களைத் தீர்ப்பதற்கும் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் முறையான நீதி நிர்வாக அமைப்பு இல்லாவிடில் மக்கள் வன்முறைக்கும் சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஜனநாயக ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ, விரைவான நீதியும் அதனை அணுக எளிதான தன்மையும் மிக அவசியமாகும்.

இந்தியாவில் 10.5 லட்சம் மக்களுக்கு ஒரு நீதிபதி இருப்பதாகவும், ஆனால் 10 லட்சம் மக்களுக்குக் குறைந்தது 10 நீதிபதிகளாவது இருக்க வேண்டுமென்றும் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஒரு மாவட்டத்தில் சிவில் வழக்குகளைத் தீர்ப்பதற்கான மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் 5 இருப்பதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு நீதிபதியும் மாதத்திற்குக் குறைந்தபட்சம் 20 வழக்குகளில் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழிகாட்டி உள்ள நிலையில், அம் மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 100 வழக்குகள் தீர்க்கப்படும்.

ஆனால் அம் மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 500 வழக்குகள் புதிதாகத் தாக்கல் செய்யப்படும் நிலையில் வழக்குகளின் தேக்கம் நீதிமன்றம் தீர்க்கும் வழக்குகளுக்கு ஏற்ற விகிதாசாரத்தில் இருக்காது. இதைப்போன்ற நிலையே இந்தியா முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வருகிறது.

இதனால்தான் புதிதாக ஒரு சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வழக்குகள் அந்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், புதிதாகத் தாக்கல் செய்யப்படும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகிறது.

இவ்வாறு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதன் மீது வழக்கில் தோல்வியுற்ற தரப்பினர் மேல்முறையீடு செய்வதால் அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏற்படுவதற்கு மீண்டும் காலதாமதம் ஏற்படுகிறது.

உதாரணமாக, ஒரு நடுத்தரக் குடிமகன் தமது வாழ்க்கையில் பல ஆண்டுகள் சேமித்து தமக்கென ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஒரு காலி மனையிடத்தை விலைக்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இதற்காக அவர் காலி மனையிடங்களை உருவாக்கி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தை அணுகுகிறார்.

அவர்கள் அந்த நடுத்தரக் குடிமகன் வசிக்கும் நகரை ஒட்டியே சுமார் 200 காலிமனையிடங்களைக் கொண்ட ஒரு புதிய குடியிருப்பை அரசிடம் அங்கீகாரம் பெற்று உருவாக்கியுள்ளார்கள். இதில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து நடுத்தரக் குடிமகன் காலி மனையிடத்தையும் வாங்கி விடுகிறார். அதன் பின்பு அவர் வீடு கட்ட நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வருகிறது.

அதைப் பார்த்தால் இவருக்கு அழைப்பாணை வந்தது போலவே அந்தக் குடியிருப்புப் பகுதியில் காலி இடங்களை வாங்கிய 200 நபர்களுக்கும் அழைப்பாணை வந்துள்ளதை அவர் அறிகிறார்.

இப் பிரச்னையின் விவரம் என்னவென்றால், இந்த 200 காலி மனையிடங்களை உருவாக்க நிலத்தை வாங்கும்போது அந்நிலத்தின் விற்பனையாளரின் மகன் மைனராக இருந்துள்ளார். அவரது மகன் தற்போது இது பூர்வீகச் சொத்து என்றும், நிலத்தில் காலி மனையிடங்களை வாங்கியது தவறு என்றும், இச்சொத்தில் தமக்குப் பங்கு உள்ளது என்றும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதே ஆகும்.

இந்த வழக்கு முடிய சுமார் 5 ஆண்டுகள் எடுத்துக்கொள்வதாக வைத்துக் கொண்டால்கூட வழக்கு முடியும் வரை சொந்த வீட்டுக் கனவுடன் வீடு வாங்கிய 200 நடுத்தர மக்கள் தமது கனவுகளைக் கேள்விக்குறியாகத் தங்களது வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. வழக்குகள் விரைவாக முடிக்கப்படாவிட்டால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

எனவே, சிவில் வழக்குகளைப் பொறுத்தவரை ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் அதிகபட்சம் ஓராண்டுக்குள்ளாக வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வழக்கில் மேல்முறையீடுகள் ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டால் அதிகபட்சம் 6 மாத காலத்திற்குள் அம்மேல் முறையீட்டில் முடிவு காணப்பட வேண்டும். இல்லாது போனால் பொதுமக்களின் அமைதியும் மகிழ்ச்சியும் கேள்விக்குறியாகிவிடும்.

வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்கு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ஏற்பத் திட்டம் வகுத்து அதிகமான நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு கூடுதலான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் நீதிமன்றங்களில் போதுமான நீதிமன்றப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

நீதிமன்றங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வேலைகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். உதாரணமாக, சென்னையில் உள்ள ஒருவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பின் நகல் பெற வேண்டும் என்றால் அவர் நாகர்கோவிலுக்குச் சென்று வழக்கறிஞரை அமர்த்தி மனு தாக்கல் செய்து சில நாள்களுக்குப் பின்பு அதனைப் பெற வேண்டி உள்ளது.

இணையதளம் வசதிகள் மூலம் நீதிமன்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியம், வழங்கப்பட்ட தீர்ப்புரை, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் பதில் மனு உள்ளிட்ட எதனையும் ஒருவர் தாம் வசிக்கும் ஊரிலேயே அங்குள்ள நீதிமன்றத்தை அணுகி குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி அதிகபட்சம் ஒருமணி நேரத்திற்குள் பெற்றுவிடும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை நவீனப்படுத்த முடியும்.

நீதிமன்றங்களை அதிகரித்து நீதிமன்றப் பணியாளர்களை அதிகரித்து நவீன மயம் செய்யப்பட்டுவிட்டால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்குகளை இழுத்தடிக்கிறார்கள் என்ற தவறான எண்ணம் மறைந்து போவதோடு விரைவான நீதியை எளிதில் வழங்க முடியும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய பணிகளைச் செய்வதற்கு உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் எப்போதும் தயாராகவே இருந்து வருகிறது. ஆனால் இப்பணிகளைச் செய்வதற்குப் போதுமான நிதி ஆதாரம் வேண்டும். புதிய நீதிமன்றங்களை உருவாக்கும்போது அதற்கான கட்டடம் தேவைப்படுகிறது.

அங்கு நியமனம் செய்யப்படும் நீதிபதிகளுக்கும் பணியாளர்களுக்கும் மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டி உள்ளது. நீதிமன்றங்களை நவீனப்படுத்துவதற்குச் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய நிதி ஆதாரத்தை ஒதுக்கீடு செய்வது சட்டமன்றங்களும் நாடாளுமன்றமுமே ஆகும். ஆண்டுதோறும் மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் நீதித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை.

குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவில் முடிக்கப்படுவதில்லை என்பதோடு பல சமயங்களில் நடுத்தெருவில் குற்றம் செய்தவர்கள்கூட விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் உண்டு.

நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வது காவல் துறையினர். வழக்குகளில் சாட்சிகளை விரைவாக அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் மட்டுமே வழக்குகளை விரைவாக முடித்துவிட முடியும். அதைப்போல சரியாகப் புலன் விசாரணை செய்து உண்மையான சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து அவர்களைச் சரியாக சாட்சியம் அளிக்கச் செய்யும் கடமை காவல் துறைக்கும் நீதிமன்றத்தில் உள்ள அரசு வழக்கறிஞருக்கும் உண்டு. இவற்றைச் சரிவரச் செய்யாமல் போகும்போது சாட்சியங்களின்றி தண்டனை அளிப்பது என்பது நீதிமன்றங்களால் இயலாது.

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் நீதியை எளிதில் பொதுமக்கள் அடைவதற்கான வழிவகைகளை உருவாக்குவதோடு இதில் உள்ள தடைகளை நீக்குவதற்குத் தக்க திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துவது அவசியமாகும்.

மனித உரிமைகளான விரைவான நீதியும் அதனை எளிதில் அணுகும் தன்மையும் மக்களுக்குக் கிடைக்க சமூகத்தில் அதற்கான நடவடிக்கைகளில் தக்க பங்களிப்பை மனிதர்களாகிய பொதுமக்கள் அனைவரும் செய்ய வேண்டியது சமூகக் கடமையாகும்.

No comments: