Friday, August 14, 2009

மனித உரிமை என்ன ஆனது?

மனித உரிமை என்ன ஆனது?

உதயை மு. வீரையன்

First Published : 04 Aug 2009 12:18:00 AM IST

இலங்கையின் மறுவாழ்வுக்காக பன்னாட்டு செலாவணி நிதியம் (.எம்.எஃப்) மூலம் சுமார் ரூ. 11,200 கோடி கடன் தருவதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் எதிர்த்து வாக்களிப்பைப் புறக்கணித்துள்ளன. அமைப்பின் மற்ற உறுப்பு நாடுகள் கடனை அனுமதித்துள்ளன.

விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த மே மாதம் முடிவடைந்த பிறகும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதன் மூலம் மனித உரிமை அப்பட்டமாக மீறி வருகிறது. எனவே அந்த நாட்டுக்குக் கடன் வழங்குவதை அனுமதிக்க முடியாது என்று அந்த மூன்று நாடுகளும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்தியாவும், இடதுசாரி நாடுகளும் இலங்கையின் அடாவடிப் போக்கை ஆதரித்து வாக்களித்துள்ளன. இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுள்ள இலங்கைத் தமிழர் சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றி இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது; அநியாயங்களுக்குத் துணை போகிறது.

மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் வாய் கிழியப் பேசும் சீனா, ரஷியா, கியூபா, வியட்நாம் முதலிய கம்யூனிஸ்ட் நாடுகளும் இலங்கையின் இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இந்த நாடுகளுக்காகக் குரல் எழுப்பி ஆதரவு இயக்கங்கள் நடத்திய தமிழர்கள் இப்போது என்ன பதில் கூறப் போகிறார்கள்?

பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தானம், இராக் முதலிய நாடுகளுக்காகக் குரல் கொடுக்கிற இந்தியா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் இரண்டாந்தர மக்களாக்கி இனப் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்காமல் ஓடி ஒளிவது ஏன்? முற்போக்கு முகாமின் இந்த இரட்டை வேடம் எத்தனை நாளைக்கு?

"பயங்கரவாதிகளை எதிர்த்துப் போர்' என்ற பெயரால் ஈழ மக்களின் மேல் முப்படைகளையும் கொண்டு படையெடுத்து மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது இலங்கை அரசின் சிங்கள ராணுவம். தன் நாட்டு மக்களின் மீது விமானத் தாக்குதல் நடத்தி வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் மாதா கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

தப்பி ஓடி வந்த மக்களை கம்பி வேலிக்குள் போட்டு பூட்டி வைத்துள்ளது. உணவுக்கும், குடிநீருக்கும் தவிக்கும் நிலையை உருவாக்கி அவர்களைச் செயலற்றவர்களாக - நடைப்பிணங்களாக ஆக்கியுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பிரித்து உறவை அறுத்து வேடிக்கை பார்க்கிறது. போரில் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தவர்களின் உறுப்புகளை அறுத்துக் கொண்டு போகும் அக்கிரமத்தைக் கேள்விப்பட்டதுண்டா?

நாகரிக உலகத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளது; அந்த மண்ணையே நஞ்சாக்கியுள்ளது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மருத்துவர்களின் மனிதநேயக் கடமை. அப்படி வடகிழக்குப் பகுதியில் மருத்துவ உதவிகள் செய்துவந்த சத்தியமூர்த்தி, வரதராஜா மற்றும் சண்முகராஜா கைது செய்யப்பட்டு, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதுகூடத் தெரியவில்லை.

நாட்டில் பலமுறை அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது; சுதந்திரமாக நடமாட முடியவில்லை; ஜனநாயகம் தினந்தோறும் கொலை செய்யப்படுகிறது. பத்திரிகையாளர்களும், செஞ்சிலுவைச் சங்கங்களும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை.

இதனை எப்படி நாகரிக சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? இந்த அக்கிரமங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக அகிம்சையைப் போதித்த காந்தியின் தேசம் ஆதரவு தருகிறது. ""இந்தியாவுக்காகப் போரிட்டோம்'' என்று அந்த நாட்டு அதிபர் பகிரங்கமாக அறிவிக்கிறார். இந்தியா அடக்கத்தோடு அமைதி காக்கிறது; இனப்படுகொலையை ஆதரிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, 1948 டிசம்பர் 9 அன்று நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு (தடுப்பு) ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்பட 140 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.

""இனப்படுகொலை என்பது ஒரு தேசிய இனம் அல்லது மதக்குழுவை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு, குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ சேதம் விளைவிப்பது, குழுவின் மீது திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அதன் உடல் சார்ந்தவற்றிற்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிவை ஏற்படுத்த முனைவது, குழுவினரிடையே பிறப்பு நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கோடு செயல்படுவது, ஒரு குழுவின் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இன்னொரு குழுவுக்கு மாற்றுவது...'' - இதைப் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அது "இனப்படுகொலை நடவடிக்கை' என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

உலக மக்களையே உலுக்கிவிட்ட இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக .நா. அவையின் மனித உரிமை ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. மேற்கு நாடுகள் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் முதன்முறையாக பிற நாடுகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபட்ச, படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர்க்குற்றவாளிகளாக விசாரிப்பதற்காக விவாதிப்பதற்குக்கூட எதிர்ப்புத் தெரிவித்து சீனாவும், ரஷியாவும் "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டன.

கம்யூனிசத்தையே உலகத்துக்கு அறிமுகப்படுத்திய மாமேதை லெனின் வழிவந்த ரஷியாவும் மாபெரும் புரட்சியாளர் மாவோ வழிவந்த சீனாவும் மனித இனப்படுகொலைக்குத் துணை போகின்றன. கியூபா, பொலிவியா, நிகராகுவா முதலிய சோஷலிச நாடுகள், "இலங்கை இனப்படுகொலை செய்யவில்லை; மனித உரிமைகள் மீறவில்லை' என்று வாக்களித்துள்ளன.

கியூபாவும், வியட்நாமும் நடத்திய விடுதலைப் போரை ஆதரித்தோம்; அதன் மாபெரும் தலைவர்களான ஃபிடல்காஸ்ட்ரோவையும், கோசிமின்னையும் தூக்கி வைத்துக் கொண்டாடினோம். ஆனால், இந்த நாடுகள் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் இனப்படுகொலையை ஆதரித்துக் குரல் கொடுத்தனவே!

தேசிய இன விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது முற்போக்கு நாடுகளின் கடமையில்லையா? உலகெங்கும் பாதிக்கப்படுகிற மக்களைத் தேடிச் சென்று உதவும் கடமை அந்நாடுகளுக்கு இல்லாமல் போய்விடுமானால் அவர்கள் பேசும் கொள்கைகளும், செயல்பாடுகளும் பொய்மைதானா?

கடந்தகால வரலாறு இப்படித்தான் இருந்ததா?

கியூபா புரட்சியின் நாயகர்களில் ஒருவரும், ஃபிடல்காஸ்ட்ரோவின் நெருங்கிய தோழனாகவும் இருந்த எர்னஸ்டோ சேகுவேரா உலக மக்களின் உரிமை வாழ்வுக்காக உயிரையே தந்தவர். கியூபாவில் புரட்சி வெற்றி பெற்ற பிறகு, 1959 ஜனவரி 9 அன்று குடியரசுத் தலைவரின் ஆணைப்படி குடியுரிமை பெறுகிறார்.

அர்ஜென்டினாவில் பிறந்து, மருத்துவராகப் பட்டம் பெற்று, புரட்சிப் போராளியாக மாறிய சேகுவேரா கியூபாவின் தொழில்துறை அமைச்சராகவும், மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் நியமனம் பெறுகிறார். ஒருநாள் அத்தனையையும் துறந்துவிட்டு எங்கு போனார்? 1965 ஏப்ரலுக்குப் பிறகுதான் அவர் கியூபாவில் இல்லை என்பது தெரிய வந்தது.

""இப்போது உலகில் வேறு பாகங்களுக்கு எனது சிறிய பணிகள் தேவைப்படுகின்றன. கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் தாங்கள் இருப்பதால் தாங்கள் ஆற்ற முடியாத கடமைகளை நான் ஆற்ற முடியும். ஆகவே அந்தப் பணியில் நான் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது...'' என்று தன் தோழர் ஃபிடல்காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, பொறுப்புகளை முறைப்படி ராஜிநாமா செய்துவிட்டே புறப்படுகிறார்.

ஈழ மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது உலக நாடுகள் ஊமைகளாக இருந்தன. அநியாயங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. மனசாட்சிமிக்க சில ஐரோப்பிய நாடுகள் அரைகுறையாகக் குரல் எழுப்பின. ஆனால் புரட்சிகர கம்யூனிஸ்ட் நாடுகள் இனப்படுகொலைக்கு ஆதரவாக நின்றன என்பது வரலாற்று ஏடுகளில் மாறாத களங்கமாய் இருந்து கொண்டேயிருக்கும்.

உலக அவை எனப்படும் .நா. மன்றம் எதற்காக இருக்கிறது? வெறும் வார்த்தைக் கண்டனங்களை வாரி இறைப்பதற்குத்தானா? இதன் சட்டங்களும், விதிமுறைகளும் பேசுவதற்கு மட்டும்தானா? செயல்படுத்துவதற்கு இல்லையா? ஏழை எளிய சிறுபான்மை மக்கள் உலகில் வாழத் தகுதியில்லாதவர்கள்தானா? இந்தப் போக்கற்ற மக்களுக்கு புகலிடமே இல்லையா?

இன்றுவரை உலகில் பேசப்பட்டுவரும் நீதி, நியாயம், அறம், அமைதி, சமாதானம் என்பதெல்லாம் நீதிநூல்களில் மட்டும்தானா? புரட்சியாளர் சேகுவேரா போன்றவர்களின் தியாகமெல்லாம் படிப்பதற்கு மட்டும்தானா? உலகில் எங்கெல்லாம் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களோ அவர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஒரு புரட்சியாளனின் கடமை என்பதை அவரின் வரலாறு கூறவில்லையா?

உலகம் எங்கும் உயிர்வதை தடை செய்யப்பட்டுள்ளது. விலங்குகளையும் பறவைகளையும் துன்புறுத்துவதைத் தடுக்கவும் சட்டம் இருக்கிறது. ஆனால் இலங்கையில் மனித உயிர்களும், உரிமைகளும் வேட்டையாடப்படுகின்றன. இதனை நாகரிக உலகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?

பயங்கரவாதம் என்பது தனிமனிதர்களுக்கு மட்டும்தானா? அரசாங்கங்களுக்கு இல்லையா? எங்கே தீப்பற்றி எரிந்தாலும் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது.

No comments: