Wednesday, August 19, 2009

திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்

. கணேசன் நாடார்

வருகிற 22/8/2009 அன்று குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய அனாரிய சமாஜ் அறக்கட்டளை சார்பில்திராவிடரும் திராவிட இந்தியாவும்என்ற தலைப்பில் ஒரு மொழிபெயர்ப்பு நூல் (உத்தரப் பிரதேசம் மயின்புரியைச் சார்ந்த திரு. எஸ்.எல். சாகர் என்பவரால் இந்தி மொழியில் எழுதப்பட்டதிராவிட் அவுர் திராவிடஸ்தான்என்ற நூலின் மொழிபெயர்ப்பு) வெளியிடப்பட இருப்பதாக அறிகிறோம். இந்நூல் வெளியீடு தொடர்பாக ‘Dravidians and Dravidian India’ என்ற தலைப்பில் ஒரு சிறுபிரசுரம் வெளியிடப்பட்டு, அந்த சிறுபிரசுரம் எமக்கு அனுப்பப்பட்டுள்ளது.

. கணேசன் நாடார்

நாகர்கோயில் சிதம்பரநாதன் தெருவிலுள்ள அனாரியன் பதிப்பகத்தாரால் அப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அப்பிரசுரத்தில் எம். சுந்தர் யேசுவடியான் என்கிற எம்.எஸ். மங்காடு என்பவர் அந்நூலை அறிமுகப்படுத்துகிற வகையில் ஒரு குறிப்பினை எழுதியுள்ளார். தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன உறுப்பினர் என்ற வகையில் அந்த அறிமுக உரையில் எழுதப்பட்டுள்ள அபத்தமான சில கருத்துகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது எம் கடமை என்று கருதுகிறேன்.

வட இந்தியர்களுக்கு, மூல நூலின் ஆசிரியர் எஸ்.எல். சாகர் என்பவரால் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதாக அறிவுரை குறிப்பிடப்பட்டுள்ளது.

1. வட இந்தியர்கள் தமிழைக் கட்டாயம் கற்க வேண்டும்.

2. வட இந்தியர்கள் ராம் லீலா கொண்டாடுவதையும் ராவணனின் கொடும்பாவியைக் கொளுத்துவதையும் நிறுத்த வேண்டும்.

3. பிராமணப் புரோகிதர்களையே பூசைப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற உள்மன உந்துதலை வட இந்தியர்கள் விட்டொழிக்க வேண்டும்.

4. அனாரியர்களான திராவிடர்களைத் திட்டமிட்டு இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்து வேதங்களில் உள்ள பகுதிகளையும் அவற்றின் உரைகளையும் நீக்கவோ திருத்தி எழுதவோ செய்யவேண்டும்.

5. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய அரசு சுயாட்சி வழங்கவேண்டும்.

இவற்றுள் முதல் அறிவுரையைப் பற்றிய எமது எதிர்வினை பின்வருமாறு:

இந்திய வரலாற்று ஆய்வில் ஈடுபடுவதற்குத் தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு அறிவு மிகவும் அவசியமானதாகும். அதே வேளையில், இந்தியாவிலுள்ள வெவ்வேறு மாநிலங்களின் மக்களிடையே ஒரு தொடர்பு மொழியாகத் தமிழை அறிமுகப்படுத்த முயல்வதென்பது சற்றும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகும். ஏன், திராவிட மாநிலங்களான கேரளத்திலும், கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் கூட தமிழைக் கட்டாயமாகக் கற்பிப்பது சாத்தியமா? திராவிட மொழிகளுக்குள் தலைமை வகிக்கக்கூடிய தகுதிபெற்ற மொழி தமிழே என்பதில் நமக்குச் சற்றும் ஐயம் இல்லை. ஆனால், அந்த உண்மையைக்கூட கேரள, ஆந்திர, கர்நாடகத்துச் சகோதரர்களீடம் நாம் நிலைநாட்ட முடியவில்லை. மலையாளமும், கன்னடமும், தெலுங்கும் தமிழுக்கு இணையான செம்மொழிகளே என்று அவர்கள் பேசத் தொடங்கிவிட்ட இன்றைய நிலையில் திராவிடத் தலைமை மொழி தமிழே என்பதை அவர்களுடைய சிந்தனையில் பதிய வைப்பதே இமாலய முயற்சி தேவைப்படுகின்ற ஒரு விடயமாக இருக்கின்ற நிலையில், இது போன்ற வெற்று கோஷங்களால் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை.

இரண்டாவதாக, ராம் லீலா கொண்டாட்டங்களையும், இராவணனின் கொடும்பாவியைக் கொளுத்துவதையும் வட இந்தியர்கள் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமன் சூரிய குல க்ஷத்திரியன். இராவணன் புலஸ்திய ரிஷி கோத்திரத்துப் பிராமணன். இது இராமாயண நூல்களில் மட்டுமின்றிப் பல்வேறு புராணங்களிலும் பதிவுபெற்றுள்ள உண்மையாகும். கரிகால் சோழன் தொடங்கிப் பிற்காலச் சோழர்களான இராஜராஜன், இராஜேந்திரன், குலோத்துங்கன் போன்றோர் சூரிய குல ராமன் தங்கள் குல முன்னோன் என்று பதிவு செய்துள்ளனர். சூர்ப்பணகை ராமனிடம் இச்சைகொண்டு அவனை அடைய முயலும்போது ராமன், ”சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன்என்று குறிப்பிட்டு அவள் இச்சைக்குத் தடை போடுகிறான் என்று கம்ப ராமாயணத்தில் (ஆரண்ய காண்டம், சூர்ப்பணகைப் படலம், பா. 49) குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இராவணன் வம்சம் அந்தணர் குலம் என்றும், தனது வம்சம் க்ஷத்திரிய குலம் என்றும், தங்களுக்குள் இத்தகைய உறவு பொருந்தாது என்றும் ராமன் குறிப்பிடுவதாகப் பொருளாகும். கம்பர் உவச்சர் எனப்படும் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சேரமான் பெருமாள் மன்னரான குலசேகர ஆழ்வார்எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோஎன்று தம்முடைய பாசுரத்தில் (பெருமாள் திருமொழி 8ஆம் பதிகம்) குறிப்பிட்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இரகு வம்சத்துத் தலைவன் இராகவன் (இராமன்) தங்கள் குல முன்னவன் என்று க்ஷத்திரியச் சான்றோர் மரபினர் தங்கள் செப்புப் பட்டயங்களில் பதிந்து வைத்திருப்பதை அனாரிய சமாஜத்தார் உணர வேண்டும். சேரமான் பெருமாள் தங்கள் குல முன்னோர்கள் என்று உரிமை பாராட்டி அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் சான்றோர் சமூகத்தவர்கள் ஒரு விழா நடத்தி அதில் ஒரு சான்றோர் குடும்பத்தவரைச் சேரமான் பெருமாளின் வாரிசு என்றே அடையாளப்படுத்திப் பெருமை சேர்த்ததாகவும் அறிகிறோம். அந்த விழாவில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த சான்றோர் சமூகத்தவர்கூட பெருமிதத்துடன் பங்கேற்றார்கள் என்றும் அறிகிறோம்.

இப்படிப் பெருமிதம் கொள்வது என்பதே பொய்யான பெருமை பாராட்டுதல் என்று அனாரிய சமாஜத்தார் சொல்லக்கூடும். சான்றோர் சமூகத்தவர்களை இழிவுபடுத்தி எழுதிய கால்டுவெல்லை ஞானத் தந்தை என்று கூச்சமில்லாமல் உரிமை கோருபவர்களுக்கு இராமன் எங்கள் குல முன்னோன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்தால் வெறுப்பாகத்தான் இருக்கும். எங்கள் முன்னோர் பெருமித உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தார்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிற ஒரு குழுவினருக்கும், கால்டுவெல் போன்றோர்கள் வந்து நாகரிகத்தைக் கற்பிக்கின்ற காலம்வரை எங்கள் முன்னோர்கள் உடை உடுத்துவதற்குக்கூட உரிமையின்றி அம்மணமாக அலைந்து திரிந்தார்கள் என்று கூச்சமின்றிச் சொல்லித் திரியும் குழுவினருக்கும் வரலாற்று உணர்வில் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம்.

இராவணனைத் தங்கள் குல முன்னவனாக ஸ்ரீமாலி (திருமாலி) பிராமணர்கள் என்ற சாதிப் பிரிவினர் கொண்டாடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூரில் இராவணனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். (ஆதாரம்: New Sunday Express 28/10/2007, p.13) இந்த ஸ்ரீமாலி பிராமணர்கள் ஒரிசா மாநிலத்திலும் மடம் அமைத்துள்ளனர் எனத் தெரிகிறது. அதே வேளையில், சூரிய குலச் சத்திரியர்கள் என உரிமை கொண்டாடும் சான்றோர் குலப் பிரிவினர்கள், தங்கள் சிற்றூர்களில் உள்ள கோயில்களில் இராமனை தெய்வமாக வைத்து வணங்கி வருகின்றனர். தங்கள் சமூகக் கோயில் விழாக்களில் இசைக்கப்படும் வில்லிசைப் பாடல்களில் இராமாயணத்தைத் தவறாமல் பாடிவருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இப்பிரிவினர் வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் என்றும், மார்த்தாண்ட நாடாக்கள் என்றும், ஆதித்த நாடாக்கள் என்றும் பட்டம் புனைந்து தங்கள் பாரம்பரியப் பெருமிதத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இதற்குக் கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களும் உள்ளன. கொங்கு நாட்டு அவல்பூந்துறை சான்றோர் மடத்துச் செப்பேட்டில் இராமனைத் தங்கள் குல முன்னோனாகக் குறிப்பிடுவதோடு, வாலியைக் கொன்ற சூரியப் பிரதாபர்கள் என்றும், கெளசலை (இராமனின் தாய் கோசலையின் மரபினர்) நாடார்கள் என்றும், உத்தர தேசத்தில் அயோத்தி மாநகரில் தாயார் தமக்கு க்ஷத்திரிய வருணத்தினால் நாயக்கப் பட்டம் நலம்பெறப் பெற்றவர் என்று தங்கள் குலப் பெருமிதங்களை ஆவணங்களாகப் பொறித்து வைத்துள்ளனர். இவர்கள் யாருமே இராவணனைத் தங்கள் குல முன்னோனாகக் குறிப்பிட்டுக் கொள்ளவோ, வழிபடவோ செய்பவர்கள் அல்லர். இத்தகைய நடைமுறைச் சான்றுகள் இருக்கும்போது இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல ஆதாரமில்லாத கருத்துகளையே பிடிவாதமாகப் பேசிவருவது கண்டனத்துக்கு உரியதாகும். அல்லது, சோழர்களை ஆரியர்கள் என்றும், திருமாலி பிராமணர்களைத் திராவிடர்கள் என்றும் அனாரிய சமாஜத்தவர்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறீர்களா? இதற்கு அவர்களிடமிருந்து நேரடியான பதிலை எதிர்பார்க்கிறோம்.

மூன்றாவதாகத் தாங்கள் குறிப்பிடுகின்ற அறிவுரை குறித்து - பிராமணப் புரோகிதர்களை நியமித்துப் பூசைப் பணிகள் செய்வது என்பது இந்துக்களின் பிரச்சினை. அது பற்றி இந்துக்களுக்கு அறிவுரை கூறுவதற்கு வேற்று மதத்தவர்களுக்கோ, கடவுள் மறுப்பு இயக்கத்தவர்களுக்கோ எந்த உரிமையும் கிடையாது.

நான்காவது அறிவுரை குறித்து - இந்து மத வேதங்களில் அனாரியர்களாகிய திராவிடர்களை இழிவுபடுத்துகிற பகுதிகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுக் குறித்து ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். தஸ்யுக்கள் என்றும், தாசர்கள் என்றும், அநாச (சப்பை மூக்குக்காரர்கள்) என்றும் வேதங்களில் குறிப்பிடப்படும் சொற்கள் இன அடையாளம் கொண்டவைதாமா என்பதற்கு இன்னும் தெளிவான கருத்து இல்லை. ஆரிய இனத்தவரிலேயே தஸ்யுக்கள் இருந்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய சில பிராமணர்கள் தாசி புத்திரர்களாக (தஸ்யுக்களாக) இருந்தனர் என்பதையும் சற்றுப் பிற்பட்ட வேதப் பிரதிகள் குறிப்பிடுகின்றன என்றும், வைதிகப் பிராமண சாதிக்குள் ஆரியருக்கு முற்பட்டச் சமூகப் பூசாரி மரபினர் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றும் வரலாற்று அறிஞர் ரோமிலா தாப்பர், “The theory of Aryan race, its history and politics” என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

பாண்டிய குலச் சான்றோர்களுக்குக் குல குருவாக இருந்து தமிழ் கற்பித்த அகத்தியர் திலோத்தமை என்ற நடன மாதுவின் மகன் என்ற வேதகால வர்ணனையை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, அகத்தியரைக் கோயில் கட்டி வழிபடுகின்ற, அகத்தியரால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவத்தைப் போற்றுகின்ற குமரி மாவட்ட மக்கள் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள். மேலும், இந்தியாவிலேயே 5 வகை மனித இனங்கள் (race) காலம் காலமாகச் சண்டையிட்டும், கூடி வாழ்ந்தும் காலப் போக்கில் தனித்த அடையாளங்களைவிட்டுக் கலந்தும் விட்டனர். மொழியியல் மட்டத்தில் தனித்த அடையாளங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன என்பது மட்டுமே உண்மையாகும். அநாச என்று வேதங்களில் குறிப்பிடப்படும் சொல் இன அடிப்படையில் இந்தோ ஆஸ்த்ரலாய்டு அல்லது நெக்ராய்டு மக்களைக் குறித்திருக்கக்கூடும். மங்கலாய்டு இனக் கலப்புக் கூறுகளும் இதில் இருந்திருக்கலாம். ஆனால், மத்திய தரைக்கடல் பகுதி இனத்தவராக முடிவுசெய்யப்பட்டுள்ள்ள திராவிடர் இந்தஅநாசபட்டியலில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. நிலைமை இவ்வாறிருக்க 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்களால் பிரசாரம் செய்யப் பயன்படுத்தப்பட்ட இத்தகைய வரலாற்று வியாக்யானங்களை அப்படியே பிரதி எடுத்து மறுபதிப்புச் செய்வதென்பது வரலாற்று ஆய்வாகக் கருதப்படாது. மாறாக, மக்களுடைய நியாயமான வரலாற்றுப் பெருமித உணர்வை இழிவுபடுத்தி, அதன்மூலம் ஆதாயம் தேடுகின்ற ஒரு வழிமுறையாகவே கருதப்படும்.

திரு . கணேசன் நாடார் அவர்கள் சென்னையிருந்து இயங்குகின்ற தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன உறுப்பினர். தமிழக சமூக வரலாறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பவர்.

No comments: