Friday, August 21, 2009

ஈழமும் ராஜீவ் காந்தியின் ஆவியும் !

Posted on 28/10/2008 by வினவு http://vinavu.wordpress.com/2008/10/28/eelam4/

“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ் எனும் இந்த ஆயுதம் மட்டும் 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் முனை மழுங்காமல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், அதனை யாரும் எப்போதும் திருப்பித் தாக்கியதில்லை என்பதுதான்.

ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். ஆனால் இந்த ராஜதந்திரம் பார்ப்பனக் கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை. நளினியை பிரியங்கா சந்தித்ததுதான் இன்று புலி ஆதரவு தமிழகத்தில் தலையெடுக்க காரணம் என்று ராஜீவ் குடும்பத்தையே புலி ஆதரவுப் பட்டியலில் சேர்க்கிறார் சு.சாமி. “தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா எழுதியதற்காக கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்” என்கிறார் ஜெயலலிதா. திமுக நடத்திய மனிதச்சங்கிலியில் கொட்டும் மழையில் நிறுத்தப்பட்டதனால் சளி பிடித்துத் தும்மிக் கொண்டிருக்கும் பள்ளிப் பிள்ளைகளின் சார்பில் கோபக்குரல் எழுப்புகின்றன பத்திரிகைகள். இன்னும் எண்ணிப் பார்க்கவே முடியாத கோணங்களில் எல்லாம் கேள்விகள் எழுப்பப் படுகின்றன. கேட்டிருக்க வேண்டிய காத்திரமான கேள்விகளைக் கேட்கத் தவறியவர்கள், இத்தகைய அற்பத்தனமான கேள்விகளைக் கண்டும் அஞ்சி நடுங்குகிறார்கள்.

இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? போபால் விசவாயுப் படுகொலைக்காக, டெல்லி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படாதவர்கள் யார்? அயோத்தியைக் கிளறி இந்துப் பாசிசப் பேய்க்கு உயிர் கொடுத்தது யார்? இந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியது யார்?

மேற்சொன்ன கேள்விகளை யாரும் எப்போதும் எழுப்பியதில்லை. எனவே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோருடன் தேசியப் புனிதர்களின் படவரிசையில் ராஜீவ் காந்தியும் சேர்ந்து விட்டார்.

‘மரித்தவர்களைக் குறைகூறுதல் மனிதப் பண்பில்லையாம்’. ‘அரசியல் நாகரீகம்’ எனும் பட்டாடைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதால், இந்த அரசியல் பிழைப்புவாதத்தைப் பலர் அடையாளம் காண்பதில்லை.

1991 மே 21 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்கப்பட்டார்கள். 2 இலட்சம் திமுகவினரின் உடைமைகள் எரிக்கப்பட்டன. ராஜீவுக்காக கண்ணீர் சிந்துமாறு தமிழகமே அச்சுறுத்தப்பட்டது. அன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் விட்டவர்கள் இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள் இதுவும் ஒரு வகை அரசியல் நிர்ப்பந்தம்தான். பிரணாப் முகர்ஜி கலைஞர் சந்திப்புடன் தமிழகத்தின் “கண்ணீர் விடும் போராட்டம்” முடிவுக்கு வருகிறது.

இனியும் கண்ணீர் விடுவதை யாரேனும் தொடர்ந்தால் அது தீவிரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். அவர்களுக்கெதிராக ராஜீவின் ஆவியோ, ராஜத்துரோகச் சட்டமோ ஏவப்படலாம்.

அன்று தமிழகமே கண்ணீர்க் கடலில் அமிழ்த்தப்ப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து வெளிவரும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஆகிய இரு இதழ்கள் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழுப்பின. அதன் விளைவாக போலீசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டன. “இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்” என்ற தலைப்பில் ஜூன் 1991 புதிய கலாச்சாரம் இதழில் வெளியான உரைவீச்சினை இங்கே பதிவு செய்கிறோம்.

80 களுக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அந்த வரலாற்றை அறிந்து கொள்ளவும், மீண்டும் மீண்டும் அரங்கேறும் கேலிக்கூத்துகளை பழைய தலைமுறை புரிந்து கொள்ளவும் இது உதவக் கூடும்.

No comments: