Wednesday, August 12, 2009

தேவாரத்தைக் காட்டிய பிள்ளையார்

தேவாரத்தைக் காட்டிய பிள்ளையார்

வித்யாலங்கார
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


ஆலயங்களில் தேவாரம் பாடும் வழக்கம் எப்போது எப்படி
ஏற்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால்
அவ்வழக்கம் மிகவும் பழமையானது என்பது மட்டும் கல்வெட்டுக்களால்
கண்டறியப்படுகின்றது.

இராஜராஜசோழர் சோழநாட்டின் அரியணை ஏறியது 985-ஆம்
ஆண்டு. அவர் வாழ்ந்த காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்
தோன்றியது தேவாரம்.

தேவாரம் பாடிய அப்பர் என்னும் வாகீசர் என்னும் திருநாவுக்கரசர்,
பாலறாவாயர் ஆணை நமதென்ற பெருமாள் ஆளுடையபிள்ளையார்
என்னும் திருஞானசம்பந்தர், தம்பிரான்தோழர் என்னும் வன்றொண்டர்
என்னும் சுந்தரமூர்த்தி ஆகியோரை 'மூவர் முதலிகள்' என்று சொல்வார்கள்.

இவர்களில் காலத்தால் முற்பட்டவர் அப்பர். அவர் முதலில்
சைவ சமயத்தில் இருந்தவர். ஆனால் பிற்காலத்தில் அவர் சமண
சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதனுள் சென்று முக்கியமானவராக
விளங்கினார். அவருடைய நாற்பதாம் வயதில் மீண்டும் சைவ
சமயத்திற்கு வந்தார். எண்பதாம் வயதுவரையில் அவர் தமது
'
தயாமூலதர்மம்' என்னும் திருத்தொண்டு செய்துகொண்டு, தம்முடைய
நாற்பதாண்டு சைவத் திருத்தொண்டின்போது நாற்பத்தொன்பதினாயிரம்
பதிகங்களைப் பாடியவர். இவர் பாடிய பாடல்களைத் 'தேவாரம்'
என்றழைப்பார்கள். இவரால் சைவ சமயம், சோழநாட்டிலும் தொண்டை
நாட்டிலும் நன்கு பரவியது.

இரண்டாவதாக வாழ்ந்தவர் திருஞான சம்பந்தர். அவர்
பதினாறாண்டுகளே வாழ்ந்தவர். சிவனுக்குச் செல்லப்பிள்ளையாக
விளங்கியவர். இவர் அப்பருடைய சமகாலத்தவர். பாண்டிநாட்டில்
சைவசமயத்தை மீட்டு, சைவத்தைப் பரப்புவதில் வெற்றிகண்டவர்.
மொத்தம் பதினாறாயிரம் பதிகங்களைப் பாடியவர். இவர் பாடியவற்றைத்
'
திருக்கடைக்காப்பு' என்றழைப்பர்.

மூன்றாமவர் சுந்தரர். காலத்தால் ஏறத்தாழ நூற்றாண்டு
காலத்துக்குப் பிற்பட்டவர். இறைவனுடன் தோழமை பூண்டு
வழிபடமுடியும் என்பதையும் இறைவன் எளியார்க்கும் எளியவன் என்ற
கருத்தை உண்மையென நிரூபித்து நிறுவும்வண்ணம் வாழ்ந்துகாட்டியவர்.
முப்பத்தெட்டாயிரம் பதிகங்கள் பாடியவர். இவர் பாடியவற்றைத்
'
திருப்பாட்டு' என்றழைப்பர்.

இவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கயிலைக்கு
சேரமான் பெருமாள் நாயனாருடன் சென்ற போது, அதுவரைக்கும்
மூவராலும் பாடப்பட்ட தேவாரப் பதிகங்களையெல்லாம் ஒன்று சேர்த்து,
எடுத்துச் சென்றார். சிவனுடைய ஆணையால் சிவபூதம் ஒன்று,
அவற்றையெல்லாம் எடுத்துத் தில்லையில் ஓரிடத்தில் பத்திரமாக
வைத்து, மூவரின் திருக்கைச்சாத்தால் திருக்காப்பிட்டுவைத்தது.

அப்படியே அவை இருந்து போயின.

பல்லவர்கள் காலத்திலும் சோழர்களில் ராஜரஜருக்கு முற்பட்ட
ஏழு சோழமன்னர்களின் காலத்திலும் தேவாரப்பாடல்கள் செல்வாக்கிழந்து
விளங்கியிருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில
கோயில்கள பாடப்பட்டன என்று தோன்றுகிறது. பல பாடல்கள்
மறைந்தும் விட்டன.

அந்நிலையில் அவற்றைக் கண்டுபிடிக்கச்செய்து அவற்றை
முறைப்படித் தொகுக்கச் செய்து நாடெங்கும் சிவாலயங்களில்
ஓதவைத்து, அப்படிப்பட்டதொரு மரபை அதிகாரபூர்வமாகத்
தோற்றுவித்து, அதற்காக ஏராளமான பொருளைச் செலவிட்டு,

மற்றவர்களையும் இந்த மரபுதனைக் கடைபிடிக்கச் செய்து,
கட்டிக்காத்துவருமாறும் செய்தவர் இராஜராஜசோழர்தான்.
அன்றிலிருந்து பல தலைமுறைகளையும் கடந்து, பல நூற்றாண்டுகளையும்
கடந்து, இவ்வழக்கம் சிறப்பான முறையில் இன்றும் நம்மிடையே
பரவி நிற்கிறது.


இராஜராஜர் சிறந்ததொரு சைவர். சைவப்பிழம்பாகிய பாட்டியார்
செம்பியன் மாதேவியாரால் வளர்க்கப்பட்டவர். சிறந்த சிவனடியாரான
கண்டராதித்த சோழரின் தம்பியின் பேரர். பரம்பரைச் சைவர்களாகிய
சோழர் குலத்திலகம். சிவனடியாரும் சித்தருமாகிய கருவூர்த்தேவரின்
அடியார். சிறந்த காளாமுகச் சம்பிரதாயத்தில் விளங்கிய ஈசானிய
சிவாச்சாரியாரை தம்முடைய ஆச்சாரியராகவும் இராஜாகுருவாகவும்
பெற்றவர்.
இவருடைய வம்சாவளி, வாழ்க்கை வரலாறு போன்றவற்றை
ஏற்றதோர் இடத்தில் பின்னர் பார்ப்போம்.

இராஜராஜனின் இஷ்டதெய்வங்கள்.

திருவாரூர் தியாகராசரும், தில்லை நடராசரும் இராஜராஜரின்
இஷ்டதெய்வங்கள். இராஜராஜரின் பேராற்றல், இறைத்தொண்டிலும்கூட
வடிகால் பெற்றது. பலவழிகளால் சிவநெறியைத் தழைக்கச் செய்தார்.
அவருடைய காலத்திலும், தீவிர சைவர்களாக விளங்கிய அவருடைய
வழித்தோன்றல்கள் காலத்திலும் சிறந்த நிலையை எய்திய சைவம்,
அவர்கள் கொடுத்த உற்சாகத்தில் தமிழகத்தில் நன்கு வேரூன்றி,
அதே சமயத்தில் பாரதத்தின் சமய வாழ்வியலிலும் தன்னுடைய
செல்வாக்கையும் தாக்கத்தையும் ஆழமாகப் பதித்துக்கொண்டு, இன்று
உலக சமயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சிவநெறியைத் தன்னகத்தே கொண்டு தழைக்கச்செய்த
இராஜராஜரின் சிறப்புப் பெயர்களில் ஒன்று 'சிவபாத சேகரன்'.
இன்னொரு சிறப்புப்பெயர், 'திருமுறை கண்ட சோழன்'.

அப்பர், சம்பந்தர் சுந்தரார் இயற்றிய பல்லாயிரக்கணக்கான
தேவாரப் பாடல்கள் மறைந்து போயின. அங்கும் இங்குமாக விளங்கிய
சில பாடல்களே தேவாரத்தை நினைவுறுத்துவனவாக இருந்தன.
இவற்றை நம்பியாண்டார்நம்பி என்னும் சைவப்பெருந்தகையாரின்
உதவியோடு கண்டுபிடித்து, இவற்றையும் இவற்றுடன் இன்னும் பல
பாடல்களையும் சேகரித்துச் சேர்த்துத் திருமுறைகளாகத் தொகுப்பிக்க
இராஜராஜர் செய்த முயற்சியைக் கூறுவதுதான், 'திருமுறை கண்ட புராணம்'
என்பது.

இராஜராஜருக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த
உமாபதி சிவாச்சாரியார் என்னும் சைவப்பெருந்தகை பாடியது இது.

இராஜராஜரின் அவைக்கு வரும் அடியார்களில் சிலர், தேவாரத்
திருப்பதிகங்களில் ஒவ்வொன்றைமட்டுமே பாடிவிட்டுச்சென்றனர்.
அவற்றைத் தவிர வேறெதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஆகையால் தேவாரப் பதிகங்களை நாடெங்கும் பக்தியுடன் இராஜராஜர்
தேடிவந்தார். ஆனால் வேறு பதிகங்கள் கிடைக்கவேயில்லை. இதனால்
மன்னவர் மனம் நொந்தார்.

விநாயகரை ஓதுவிக்கச்செய்த சிறுவன்

அவ்வமயம் திருநாரையூர் என்னும் ஊரில் 'சைவம் வாழ மாமணி
போல் ஒரு சிறுவன் வந்து' தோன்றினான். அச்சிறுவருடைய தந்தை
அவ்வூரில் கோயில் கொண்டுள்ள 'பொல்லாப்பிள்ளையா'ருக்குப் பூசை
செய்பவர்.
ஒருநாள் பூசைக்குச் செல்ல இயலாத தந்தையார் தம் மகனாகிய
நம்பியாண்டார் நம்பியைப் பூசை செய்ய அனுப்பினார். சிறுவராகிய நம்பியும்
பள்ளிக்குச் செல்லாமல் கோயிலுக்குச் சென்று, பொல்லாப்பிள்ளையாருக்குத்
திருவமுது படைத்துப் பிள்ளையாரை உண்ணுமாறு வேண்டினார். ஆனால்
படைத்தவை படைத்தவாறு இருந்ததைக் கண்ட நம்பி, பிள்ளையாரின்மேல்
தம்முடைய தலையை மோதலானார்.

"
நம்பி பொறு!", என்று பிள்ளையார் அவரைத் தடுத்து, அவர்
படைத்தவற்றை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு திருவமுது மறைந்தது.

அதன்பின்னர், "சந்த மறைமுதல் கலைகள் நீயே. ஓதித் தரல்
வேண்டும்", என்று நம்பி வேண்டிக்கொண்டதற்கிணங்க, விநாயகரும்
நம்பிக்கு சகல கலைஞானங்களையும் அக்கணமே தாமே ஓதுவித்தார்.


இந்த அற்புதத்தை வேந்தன் கேள்வியுற்றார். தன்னுடைய
பரிவாரங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு கனிவகைகள்,
பலகாரவகைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு திருநாரையூர் சென்றார்.
அவற்றையெல்லாம் ஊர்கொள்ளாமல் பத்துக்காத தூரம்வரைக்கும் பரப்பி
வைத்து, பொல்லாப்பிள்ளையாருக்கு "இப்போதே நிவேதிக்க", என்று
நம்பியின் கால்களைப் பணிந்து மன்னவர் கேட்டுக்கொண்டார்.

நம்பியும் வேழமுகத்தனை வேண்ட, அனைத்து நிவேதனப்
பொருள்களும் புகுந்த இடம் தெரியாமல் மறைந்துபோயின.

விக்னநாயகன் அவற்றை ஏற்றுக்கொண்டதைக் கண்ணுற்ற
வேந்தர், மூவரின் தேவாரத்தைப் பற்றியும் நம்பியிடம் கேட்டார். நம்பியும்
அவ்வண்ணமே விநாயகரிடம் கேட்டார்.

திருஞானசம்பந்தர் பாடிய பதினாறாயிரமும் திருநாவுக்கரசர்
பாடிய நாற்பத்தொன்பதாயிரமும் சுந்தரர் பாடிய முப்பதெண்ணாயிரம்
பதிகங்களும் தில்லை நடராசர் கோயிலின் மேற்குப் பிரகாரத்தில்
உள்ளதோர் அறையில் ஏடுகளாக வைத்து அடைக்கப்பட்டு
காப்பிடப்பட்டிருப்பதையும் பொல்லாப்பிள்ளையார் நம்பியிடம்
கூறினார்.

அத்துடன் தேவாரத்தின் புகழையும் சிறப்பையும் கூறினார்.

எரியினிடை வேவாது; ஆற்றெதிரே ஓடும்
என்புக்கும் உயிர்கொடுக்கும்; இடு நஞ்சாற்றும்;
கரியை வளைவிக்கும்; கல் மிதக்கப்பண்ணும்;
கராம் மதலை கரையில் உறக்காற்றும் காணே!

இப்பாடலில் கணடவையெல்லாம் தேவாரம் பாடிய அப்பர் சுந்தரர்
சம்பந்தர் ஆகியோர் வரலாற்றில் நிகழ்ந்த அற்புதங்களைக் குறிப்பிடக்
கூடியவையாகும்.

'
எரியினிடை வேவாது; ஆற்றெதிரெ ஓடும்' - மதுரையில் சம்பந்தருக்கு
சமணர்களுடன் ஏற்பட்ட அனல் வாதம் புனல் வாதப்போட்டியில் தேவாரப்
பதிக ஏடுகள் நெருப்பில் எரிந்து போகாமலும் வைகை நீரோட்டத்தையும்
எதிர்த்துக்கொண்டு தேவார ஏடுகள் மிதந்தோடியதையும் குறிப்பிடுகிறது.

சம்பந்தப்பட்ட பதிகங்கள் -

<
பச்சைப் பதிகம்-எரியாத ஏடு அனல்வாதம் முதற்பாடல்>:
போகமார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன்னகலம்
பாகமர்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
பாகமார்த்த எம்பெருமான் மேயது நள்ளாறே

அனல்வாதம் - முதற்பாடல்:
தளரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை இணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவு நள்ளாறர்தம் நாமமே
மிளிரிள வளர் எரியினில் இடில் இவை பழுதிலை மெய்ம்மையே

புனல்வாதம்- முதற்பாடல்:
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே


'என்புக்கும் உயிர் கொடுக்கும்' - திருமயிலையில் வணிகர் சிவநேசனின்
மகள் பூம்பாவை இறந்து பன்னிரண்டாண்டுகளுக்குப் பின்னர், பானைக்குள்
வைக்கப்பட்டிருந்த அவளுடைய எலும்புகளுக்கு உருவமும் உயிரும்
கொடுக்கப்பாடிய பதிகத்தின் முதற்பாடல்:

மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ, பூம்பாவாய்!

'
இடு நஞ்சாற்றும்; கரியை வளைவிக்கும்; கல் மிதக்கப் பண்ணும்' -
இவை மூன்றும் திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தின் விளைவால் ஏற்பட்ட
அற்புதங்கள்.

அவருக்கு நஞ்சு கலந்த பாலமுதைக் கொடுத்தபோது,
அந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை. இதன் சம்பந்தமாகப்
பாடப்பட்ட பதிகம் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியைப்
பற்றி அப்பர் பெருமான் இன்னொரு பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.

'
கரியை வளைவிக்கும்' - மதயானையை ஏவிவிட்டபோது, அது அடங்கி
அப்பரைச் சுற்றி வந்து பணிந்த பதிகப்பாடல்-

சுண்ண வெண்சந்தனச் சாந்தும், சுடர்திங்கள் சூளாமணியும்,
வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண்முரணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்சவருவதுமில்லை!

'
கல் மிதக்கப்பண்ணும்' - கல்தூணில் அப்பரைச் சங்கிலிகளால் பிணைத்துக்
கடலினுள் வீசி எறிந்தும், கல்தூணைத் தெப்பம்போல் கடலின்மீது மிதக்கச்
செய்த பதிகத்தின் முதற்பாடல்-

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே


'கராம் மதலை கரையில் உறக்காற்றும்' - முதலையால் உண்ணப்பட்ட
சிறுவன் ஒருவனைச் சில ஆண்டுகள் கழித்து முதலை உயிருடன் உமிழச்
செய்யச் சுந்தரர் பாடிய பதிகத்தின் முதற்பாடல்:

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
'
உற்றாய்' என்றுன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்
புற்றாடரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே!

தேவாரத்தைப் பற்றி பொல்லாப்பிள்ளையார் நம்பியிடம் கூறியதை
இராஜராஜசோழரும் கேட்டதாகவும், குன்று ஒன்று பேருருவம் கொண்டதுபோல
விநாயகர் அவருக்குத் தோன்றியதாகவும் உமாபதி சிவாச்சாரியார் கூறுகிறார்.

எரியினிடை வேவாது; ஆற்றெதிரே ஓடும்
என்புக்கும் உயிர்கொடுக்கும்; இடு நஞ்சாற்றும்;
கரியை வளைவிக்கும்; கல் மிதக்கப்பண்ணும்;
கராம் மதலை கரையில் உறக்காற்றும் காணே!

இப்பாடலில் கண்டவையெல்லாம் தேவாரம் பாடிய அப்பர் சுந்தரர்
சம்பந்தர் ஆகியோர் வரலாற்றில் நிகழ்ந்த அற்புதங்களைக் குறிப்பிடக்
கூடியவையாகும்.

மேற்கூறிய திருமுறை கண்ட புராணப்பாடலை மட்டும்
சொல்லிவிட்டால் அத்தனைத் துளக்கம் பெறாது என்றுதான் அந்த
சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் சம்பந்தப்பட்ட பதிகங்களின்
முதற்பாடல்களையும் குறிப்பிட்டுள்ளேன். தேடிப்பார்த்து எடுத்துப்
படிக்கவிரும்புபவர்களுக்கு அது உதவக்கூடும். இயலும்போது
முழுப்பதிகத்தையும் போடுவோம். அவை அற்புதத் திருப்பதிகங்கள்
என்னும் சிறப்புப்பெற்றவை. அப்பெயரில் வழங்கப்படுகின்றன. இவை
போலவே வேண்டுகோள் திருப்பதிகங்கள், ஆற்றலுடைய திருப்பதிகங்கள்
என்றெல்லாம் இருக்கின்றன. நெடுங்களம் என்னும் ஊரில்
திருஞானசம்பந்தர் பாடிய, 'மறையுடையாய் தோலுடையாய்' என்னும்
திருப்பதிகத்தை 'இடர்களையும் திருப்பதிகம்' என்று குறிப்பிடுகிறார்கள்.
அத்தகைய ஆற்றல் படைத்தது அது.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் 'குவாலா ப்ராங்' என்னும்
காட்டூரில் இருக்கும்போது அப்துல் மஜீது என்னும் பெரியவர் அங்கு
இருந்தார். அவர் எனக்கு அப்போதெல்லாம் அடிக்கடி தைரியம்
கொடுப்பார். அப்போது அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்று
உண்டு.
"
நம்புனவனுக்கு நடராஜா. நம்பாதவனுக்கு நமன்தான் ராஜா",
என்று சொல்வார். பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்படவேண்டிய
உலகியல், வாழ்வியல் உண்மை. எல்லாவற்றிற்குமே நம்பிக்கைதான்
அடித்தளம். அது நடராஜா மேலாகட்டும்; அல்லது தன்மேலாகட்டும்.
அது, அதுதான்.

மேற்கூறிய அச்சம்பவங்களையெல்லாம் 'தமிழ் விடு தூது'
என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

உடனடியாக நம்பியாண்டார் நம்பியுடன் தில்லை சென்ற
மன்னவர், கோயிலின் காப்பாளர்களாகிய தில்லை மூவாயிரவரிடம்
தேவார ஏடுகள் இருந்த அறையைத் திறக்குமாறு கோரினார்.
ஆனால் தேவாரம் படைத்த மூவரும் வந்தால்தான் அந்த
அறை திறக்கப்படும் என்று தில்லை மூவாயிரவர் சொல்லிவிட்டனர்.

இராஜராஜரின் பேரறிவு இங்கே உடனே வேலை செய்தது.

அத்திருக்கோயிலில் இருந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர்
ஆகியோருடைய செப்புப் படிமங்களுக்கு சிறப்புவிழாச் செய்து,
கோயில் பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வரச்செய்தார்.
அம்மூன்று படிமங்களையும் தேவாரச்சுவடிகள் இருந்த
அறைக்கு முன்னர் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு,
"
மூவரும் வந்துள்ளனர். அறையைத் திறமின்காள்", என்று
ஆணையிட்டார்.
சிலைகளா? மூவரா? 'வெறும் செப்புச்சிலைகள்' என்று
கூறினாலோ அபச்சாரம். தில்லை நடரசனின் திருவுருவமும் அந்தக்
கணக்கிலேயே சேர்ந்துவிடும்.

ஆகவே அரசனின் ஆணையை ஏற்றுக்கொண்டு, தேவாரம்
பாடிய மூவருமே வந்துவிட்டதாகக் கொண்டு, அவ்வறையின்
திருக்காப்பை நீக்கி, அறையைத் திறந்துவிட்டனர்.

ஆனால் அறைக்குள் ஏடுகள் இருந்த இடத்தில் கரையான்
புற்று மூடியிருந்தது.

புற்றைக் கலைத்து, எண்ணெய் ஊற்றி, ஏடுகளை நனையச்செய்து,
அவற்றைத் திரட்டிப்பார்க்கும்போது, அவற்றில் பெரும்பகுதி அழிந்து
விட்டிருந்தது.
அதைக் கண்ட மன்னவர் சிந்தை தளர்ந்து மனம் நொந்து
ஈசனை நினைந்து அழுதார்.
வருத்தமுற்ற மன்னரின் மனதைத் தேற்ற வானொலி ஒன்று
கேட்டது.
உலகிற்கு வேண்டுவனவற்றைமட்டுமே விட்டுவைத்து
மற்றவற்றை மண்மூடச்செய்ததாக அவ்வொலியின்மூலம் ஈசனே
அறிவித்ததை அனைவரும் கேட்டனர்.

'
வானோலி' - இவ்வகையான சொற்பிரயோகங்கள் இன்னும்
மூன்று இருக்கின்றன. வானிலிருந்து பிறக்கும் ஒலி என்பது இச்சொல்லின்
பொருளாகிறது. இதைப்போலவே 'விண்ணொலி' என்ற சொல்லும் இருக்கிறது.
வட மரபில் இதனை 'ஆகாசவாணி' என்று சொல்வார்கள்.
இன்னும் ஒரு சொல் இருக்கிறது. இதுதான் அதிகமாக வழக்கில்
புழங்குகிறது.
'
அசரீரி' என்பது அது. 'அசரீரி வாக்கு' என்று சர்வசாதாரணமாக
சொல்கிறோமல்லவா?
பேச்சு பிறப்பதற்கு பேசும் உறுப்புகளாகிய வாய், நாக்கு,
குரல்வளை, குரல், மூச்சு போன்ற அனைத்து அவயவ உபகரணங்களும்
வேண்டும். அவையனைத்தும் உடலிலேயே - அதாவது சரீரத்திலேயே
இருக்கமுடியும்.
ஆகவே உடலிலிருந்து பிறக்கும் சொல், பேச்சு - 'சரீரி'
எனப்படும்.
சரீரமே இல்லாமல் வெறும் சூனியத்திலிருந்து பிறக்கும் ஒலியை
'
அசரீரி' என்பார்கள். அ = இல்லாமையைக் குறிக்கும் விகுதி; சரீரி =
உடலுடன்கூடிய தன்மை.

திருஞானசம்பந்தரின் பதினாறாயிரம் பதிகங்களில்
முன்னூற்று எண்பத்து நான்கும், அப்பருடைய நாற்பத்தொன்பதினாயிரத்தில்
முன்னூற்றுப் பத்தும், சுந்தரருடைய முப்பத்தெண்ணாயிரத்தில் நூறும்
கிடைத்தன.

திருமுறைகண்ட புராணத்தில் அந்தச் சம்பவத்தைக் குறிக்கும்
மூன்று பாடல்கள் இதோ:

ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேற்பால்
அருள்பெற்ற மூவர் தம தருள்சேர் செய்ய
கையதுவே இலச்சினையாய் இருந்த காப்பைக்
கண்டவர்கள் அதிசயிப்பக் கடைவாய் நீக்கிப்
பொய்யுடையோர் அறிவுதனைப் புலன்கள் மூடும்
பொற்பதுபோல் போதமிகும் பாடல் தன்னை
நொய்ய சிறு வன்மீகம் மூடக்கண்டு
நொடிப்பளவினில் சிந்தை நொந்த வேந்தன்

பார்த்தததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே
படிந்திருந்த மண்மலையைச் சேரத் தள்ளிச்
சீர்த்த திலதயில மலி கும்பம் கொண்டு
செல்லு நனையச் சொரிந்து திரு ஏடெல்லாம்
ஆர்த்த அருளதனாலே எடுத்து நோக்க
அலகிலா ஏடு பழுதாகக் கண்டு
"
தீர்த்தமுடிக் கணிபரனே! பரனே!", என்னச்
சிந்தை தளர்ந்து இருகண்ணீர் சோர நின்றான்.

ஏந்து புகழ் வளவன் இவ்வாறு அன்பினாலே
இடர்க்கடலின் கரைகாணா தினையும் காலைச்
சார்ந்த மலைமகள் கொழுனன் அருளால், "வேதச்
சைவ நெறித் தலைவரெனும் மூவர் பாடல்
வேய்ந்தன போல் மண்மூடச் செய்தே, ஈண்டு
வேண்டுவன வைத்தோம்", என்று உலகிலுள்ள
மாந்தரொடு மன்னவனும் கேட்டு மாற்றால்
வானகத்தில் ஓர் ஓசை எழுந்ததன்றே!

மூவருடைய கைகளே இலச்சினையாய் விளங்கும் காப்பு - seal.
சில படங்களில் நாம் பார்க்கிறோம். பாதுகாப்பு-கட்டுப்பாட்டுக்குள்
விளங்கும் இடத்தில் பிரவேசிக்கக் குறிப்பிட்ட சிலரின் கையை
ஒரு ஸ்கேனரின்மீது வைத்து ஸ்கேன் செய்து சரிபார்த்த பின்னரே
கதவு திறக்கிறது அல்லவா. அதுபோன்றதுதான் இதுவும். அதாவது
அதே அடிப்படை.

வன்மீகம் = புற்று
தில தயிலம் - திலம் = எள்; தயிலம் = நெய்
தில தயிலம் = எள்ளெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்

திருஞானசம்பந்தரின் பதினாறாயிரம் பதிகங்களில்
முன்னூற்றுஎண்பத்தினான்கும், அப்பருடைய நாற்பத்தொன்பதினாயிரத்தில்
முன்னூற்றுப்பத்தும், சுந்தரருடைய முப்பத்தெண்ணாயிரத்தில் நூறும்
இருந்தன.

இவற்றையெல்லாம் திருமுறைகளாகத் தொகுக்குமாறு மன்னவர்
நம்பியாண்டார்நம்பியைக் கேட்டுக்கொண்டார்.

ஆகவே நம்பியாண்டார்நம்பியும் முதலில் மூவரின் தேவாரங்களைத்
திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருஞானசம்பந்தரின் முன்னூற்று எண்பத்துநான்கு பதிகங்களையும்
மூன்று திருமுறைகளாகவும் திருநாவுக்கரசரின் முன்னூற்றுப்பத்துப் பதிகங்களை
அடுத்த மூன்று திருமுறைகளாகவும் ஆறு திருமுறைகளைத் தொகுத்துவிட்டு,
சுந்தரருடைய நூறு பதிகங்களையும் ஏழாவது திருமுறையாகச் செய்தார்.

மந்திரங்கள் ஏழுகோடி என்பதால் ஏழு திருமுறைகளாகத்
எடுத்தமைத்தார் என்று கூறப்படுகிறது..

இவ்வாறு முதல் ஏழினைத் தொகுத்த பின்னர், நம்பியாண்டார்நம்பி
இன்னும் வேறு சில சைவ சமய நூல்களை எடுத்து, அவற்றை இன்னும்
நான்கு திருமுறைகளாகத் தொகுத்தார். முதல் ஏழுடன் இவற்றையும்

சேர்த்து மொத்தம் பதினோரு திருமுறைகளாக அமைத்தார். இராஜராஜ
சோழரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திருப்பணி அவர் மகனார்
இராஜேந்திர சோழரின் காலத்தில் பூர்த்தியாயிற்று.

முக்கியமான மந்திரங்கள் பதினொன்று என்ற அடிப்படையில்
பதினோரு திருமுறைகளாகச் செய்வித்தார்.

'
திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூலை நாயன்மாரைப்
பற்றிய அரிய செய்திகளைக் கூறிப்பாடி இயற்றியுள்ளார். இதையும்
பொல்லாப்பிள்ளையாரின் பேரருளினாலேயே செய்தார்.

திருமுறைகளை இசைப்படுத்த வேண்டுமெனெ மன்னவர்
விரும்பினார். ஆனால் அவற்றிற்குரிய பண்கள் எவை எவை என்பதை
எப்படி அறிவது? வழக்கற்றுப்போன விஷயங்கள். எப்படி, எந்தமுறையில்
பாடியிருப்பர்? இது ஒரு பெரிய புதிராக விளங்கியது.

அவ்வமயம் மீண்டும் ஒரு வானொலி கேட்டது.
திருவெருக்கத்தம்புலியூர் என்னும் ஊரில் வசித்த பாணர்குடிப்
பெண்ணொருத்தியின்மூலம் தில்லைப் பெருங்கோயிலில் நடராசர்
சன்னிதியில் இசைப்படுத்தலாம் என்று அந்த வானொலி மூலம்
இறைவன் தெளிவுபடுத்தியதைக் கேட்டு மன்னவரும்
நம்பியும் பெருமகிழ்ச்சிகொண்டனர். அவ்வூருக்குச்சென்று, அந்தப்
பெண்ணைத் தில்லைக்கு அழைத்துச்சென்றனர். அங்கே 'பண்ணடைவு'
எனப்படும் இசைப்படுத்தும் திருத்தொண்டும் நிறைவேறியது.

தேவாரத் திருமுறைகள், காலத்தையும் வென்று தில்லையிலேயே
பத்திரமாக இருந்து, அங்கேயே கண்டுபிடிக்கப்பட்டமையாலும் அங்கேயே
பண்முறை அமைக்கப்பட்டதாலும், தேவாரம் பாடும்போது, பாடுவதற்கு
முன்னாலும் பின்னாலும் 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லும் வழக்கத்தை
ஏற்படுத்தினர்.
மேலும் 'கோயில்' என்றாலே தில்லைச்சிற்றம்பலம்தான் என்ற
மரபும் ஏற்பட்டது.

இராஜராஜசோழருக்கும் 'திருமுறை கண்ட சோழன்' என்றும்
சிறப்புப் பெயர் ஏற்பட்டது.


No comments: